இந்த பதிவில் “காந்தியின் கொள்கைகள் கட்டுரை” பதிவை காணலாம்.
இவர் தனது சிறந்த கொள்கையால் உலக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை இவர் பிடித்திருக்கிறார்.
Table of Contents
காந்தியின் கொள்கைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காந்தி பற்றி அறிமுகம்
- மிகச் சிறந்த தேசப்பற்று
- இவரது நற்பண்புகள்
- இவரது பொன்மொழிகள்
- அகிம்சை
- முடிவுரை
முன்னுரை
இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று நடாத்திய பெருமைக்குரியவரான மகாத்மா காந்தி இந்தியாவின் “தேசபிதா” என்று அன்போடு அழைக்கப்படுபவர். ஒவ்வொரு இந்தியர்களது மனதிலும் இந்திய அரச அலுவலகங்களிலும் இவரது உருவம் இல்லாத இடங்களே இல்லை எனலாம்.
இந்தியாவின் நாணயத்தாள்களில் காந்தியின் தலை பொறிக்கப்பட்டே வெளியிடப்படுகிறது. இவ்வாறு மிக சிறந்த தலைவராக இந்தியர்களாலும் உலகத்தாராலும் போற்றப்படும் மகாத்மா காந்தி இந்த அளவிற்கு வியந்து பார்க்கப்படுவதற்கான காரணம் அவருடைய கொள்கையும் அவர் அதில் கொண்ட உறுதியும் தான் இவைதான் இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்தது என்பது வரலாறு.
இக்கட்டுரையில் காந்தியின் கொள்கைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
காந்தி பற்றிய அறிமுகம்
இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் “போர்பந்தர்” எனும் கிராமத்தில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் திகதி கரம்சத் காந்தி மற்றும் புத்திலிப்பாய் என்பர்களுக்கு மகனாக பிறந்தார் இவருடைய இயற்பெயர் “மோகனதாஸ் கரம்சந் காந்தி” என்பதாகும்.
சிறுவயது முதலே உண்மை, நேர்மை, வாய்மை என்ற உயரிய குணங்களை உடையவராக காணப்பட்டார். பிற்காலத்தில் அந்நியராட்சியினால் இந்திய மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கண்டு சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போரிட்டார்.
மிகச்சிறந்த தேசப்பற்று
தனது உயர் கல்வி நிமித்தம் சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்து சென்ற காந்தி அடிகள் அங்குள்ள மக்களது வாழ்க்கையையும் தமது நாட்டு மக்கள் வாழும் வாழ்க்கையையும் கண்டு வேதனையுற்றார்.
வெளிநாடுகளில் இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர் சந்தித்த அவமானங்கள் இவரை மேலும் எதிர்த்து போராட உத்வேகபடுத்தின.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுபவிக்கும் அவலங்களை கண்டு இவர் தென்னாபிரிக்க நாட்டிலேயே தனது முதல் போராட்டத்தை துவங்கினார்.
அகிம்சை ரீதியாக தனது கொள்கைகளை மக்களுக்குள் பரப்பினார். இதன் மூலம் மக்களிடையே தேசப்பற்றையும் ஒற்றுமையினையும் விதைத்தார்.
இவரது நற்பண்புகள்
இவர் சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகம், மகாபாரதம் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு மிகுந்த நேர்மை பண்புடையவராக காணப்பட்டார். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது அது மேலும் இழப்புக்களையே ஏற்படுத்தும் என கூறினார்.
அமைதியான குணமும் எப்போது எளிமையான வாழ்வையும் இவர் கடைப்பிடித்தார். கையால் நெய்யப்படும் உடைகளையே இவர் அணிந்தார். சைவ உணவுகளையே இவர் உண்பார். இந்து மத பற்றுடையவராகவும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வு வாழ்ந்த தலைவராகவும் இவர் காணப்படுகிறார்.
ஒரு மிகச்சிறந்த தலைவருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் அனைத்தும் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
இவரது பொன்மொழிகள்
இவர் தனது அனுபவத்தினாலும் அறிவாலும் கூறி சென்ற கருத்துக்கள் அவரது கொள்கையினையும் மனவுறுதியையும் காட்டுகிறது. மிகச்சிறந்த பொன்மொழிகளாகவும் இருக்கின்றன.
“வலிமையும் வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை வீரம் உடலின் ஆற்றல் அல்ல உள்ளத்தின் பண்பு” என வீரம் பற்றி கூறியிருக்கிறார்.
“உடலின் வீரத்தை காட்டிலும் உள்ளத்தின் வீரம் உயர்வானது” என மனவலிமையின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
“தோல்வி மனச்சோர்வை தருவது அல்ல மாறாக ஊக்கத்தையே தருகின்றது” என தோல்வி கற்று தருகின்ற பாடத்தை வெளிப்படுத்தினார்.
“மனிதனை பிடிக்கும் பேய்களில் கொடியது அச்சம் எனும் பேய்” என இவர் கூறியுள்ளார்.
தனது வார்த்தைகளால் அனைவரையும் உத்வேகப்படுத்தியதோடு முன்னுதாரணமாக வாழ்ந்தும் காட்டிய சிறந்த தலைவராவார்.
முடிவுரை
இந்திய தேசத்தில் பல அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியாக இருந்த மகானாக மகாத்மா காந்தி பார்க்கப்படுகிறார். இவரது சிறந்த கொள்கையால் உலக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை இவர் பிடித்திருக்கிறார்.
“மாற்றம் என்பது தன்னில் இருந்து துவங்க வேண்டும்” என்று இவர் எப்போதும் கூறுவார். இவரது கொள்கைகள் தனிமனித ஒழுக்கம், சுயமரியாதை, தேசப்பற்று ஆகிய நல்ல பழக்கங்களை எம்மிடையே எப்போதும் ஏற்படுத்தி கொண்டிருக்கும்.
இவரது வாழ்க்கை வரலாறு இந்திய தேசத்தையே பெருமையடைய செய்தது என்றால் மிகையல்ல.
You May Also Like :