கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி கட்டுரை

இன்று பெண்கள் தமிழ்நாட்டில் கல்வியில் உயர்ந்து அடக்குமுறை இன்றி பெருமைமிக்க வாழ்வு வாழ்வதற்கு கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்திய பல திட்டங்களும் உதவியுள்ளன.

கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண்களின் முன்னேற்றத்திற்கான கலைஞரின் பங்களிப்பு
  • பெண்களின் சமத்துவம்
  • பெண்களுக்குச் சொத்துரிமை
  • முடிவுரை

முன்னுரை

கலைஞர் என்பது வெறும் பெயரல்ல அது தமிழ்நாட்டு அரசியல் அடையாளமாகும். தமிழ்நாட்டு அரசியல் தேர்தல் வரலாற்றில் அதிக தொகையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அவரேயாவார்.

அதுமட்டுமல்லாது எம்.எல்.ஏ க்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த கட்சியின் தலைவரும் ஆவார். தமிழ்நாட்டில் அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் கலைஞராவார்.

இவ்வாறு தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான கலைஞர் கருணாநிதியைக் கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமானது இவரது ஆட்சி காலத்தில் பெண்களுக்கான நீதியாகும்.

பெண்களின் முன்னேற்றத்திற்கான கலைஞரின் பங்களிப்பு

முற்போக்கு சிந்தனை கொண்ட முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி அவர்கள் 1989இல் திமுக ஆட்சியில் இருந்தபோது அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டினை அறிவித்தார்.

கலைஞரினால் வழங்கப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் காரணமாக தற்போது தமிழகம் இந்திய அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. அன்று கலைஞர் அளித்த பெண்களுக்கான முன்னுரிமையே இதற்கு முக்கிய காரணமாகின்றது. 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் காவலர் பணியில் அதிகம் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெண்களுக்குரிய வளர்ச்சியை தருவது எதுவென கணித்து அவர்கள் எந்த இடத்தில் இருந்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக பேணப்படும் என்பதை உணர்ந்து அவர்களுக்கு அரசு பணியை வழங்கி அங்கீகாரத்தை வழங்கினார்.

எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழை இளம் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ஏற்படுத்தியதன் மூலம் முதிர் கன்னிகள் என்ற நிலை மாறி வாழ்வு பெற்றனர்.

விதவைப் பெண்கள் மறுமணம், கர்ப்பிணிகள் நலம் என பெண் பிள்ளைகள் பிறப்பு முதல் இறுதி காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர் ஆவார்.

பெண்களின் சமத்துவம்

பெண்களும் சமமானவர்களே, அவர்களும் கல்வி கற்று பணியாற்றுவதால் சமூகத்தில் பாலின சமத்துவம் நிலவும். அவ்வாறு பாலின சமத்துவம் நிலவும் சமூகம் முற்போக்குடையதாக கருதப்படும் என்பதனை கலைஞர் நன்கறிந்திருந்தார்.

பெண் சமத்துவம் இவரது ஆட்சி காலத்திலேயே பேணப்பட்டதால் தான் பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டிய அவல நிலை மாறியது.

ஒரு சமூகத்தில் பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்ட காலம் போய் இன்று பெண்கள் சமமாக பணி சென்று வேலை செய்கின்றனர். அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கின்றனர். இந்த வளர்ச்சி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையினாலேயே சாத்தியமானது எனலாம்.

பெண்களுக்குச் சொத்துரிமை

1989 ஆம் ஆண்டு இல் இருந்து ஆட்சி காலத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டுவர சட்ட திருத்தம் செய்யப்பட்டது. பெற்றோரின் தனிச்சொத்தில் மட்டுமல்லாது பூர்வீக சொத்திலும் பெண்களுக்கு சம பங்கு கிடைக்க வழி வகுத்தது.

இதனைப் பின்பற்றியே 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டம் இயற்றி இந்தியா முழுவதும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க செய்தது.

முடிவுரை

கலைஞரது ஆட்சிக் காலத்தில் பல சிறப்புக்கள் காணப்பட்ட போதிலும்கூட பெண்களுக்கு நீதி என்பது இவரது ஆட்சிக் காலத்தின் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான நீதி தொடர்பான திட்டங்களே இன்றும் பெண்களின் நீதிக்கு அடிப்படையாக விளங்குகின்றன.

Read More: தகவல் அறியும் உரிமை சட்டம் கட்டுரை

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்டுரை