அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள்

makkal thogai perukkathin vilaivugal

இன்றைய உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாரிய சவால்களுள் மக்கள் தொகைப் பெருக்கமும் ஒன்றாக உள்ளது. இது ஒரு சமூக நிகழ்வு ஆகும்.

மக்கள் தொகை என்பது, ஒரு நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

குறிப்பாக மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித இறப்பு விகிதம் குறைந்ததும், பிறப்பு விகிதத்தில் கட்டுப்பாடு இல்லாததும், மத அடிப்படையில் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது தவறு என்ற கருத்துக்கள் போன்ற பல காரணங்களால் மக்கள் தொகை அதிகரிக்கின்றன.

இதனால் உலகம் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடுகின்றது. அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள்

பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகின்றது

பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் பங்களிப்பு அதிகமாக தேவைப்பட்டாலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். பெரும்பான்மை நாடுகளில் உழைக்கும் திறனுள்ள வயதிலுள்ளவர்களின் விகிதம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது.

இயற்கை வளங்கள் விரைவாக குறைதல்

அதிகரித்த மக்கள் தொகையினால் மனித குடியிருப்பின் தொகை விரிவுபடுத்தப்படுகின்றது. இதனால் இயற்கை வளங்கள் குறைவடைகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் பதினாறு மில்லியன் ஹெக்டேர் பச்சை இடங்கள் மறைந்து விடுகின்றன. அதேபோல், காடுகள் நிறைந்த பகுதிகளும், இனிய இயற்கை வளங்களும் பேரழிவை சந்திக்க நேரிடும்.

நீர்ப் பற்றாக்குறை

அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் அடிப்படையானது தண்ணீர். அதிகரித்த மக்கள் தொகையினால் நீர் பயன்பாட்டின் தேவையும் அதிகரிக்கும்.

கண்மூடித்தனமான நீர் பயன்பாட்டின் காரணமாகவும் அதிகரித்த மக்கள் தொகையின் காரணமாகவும் நீரின் தேவை அதிகரித்து, காலப்போக்கில் அதற்கான பற்றாக்குறை ஏற்படும்.

வறுமை

மக்கள் தொகை பெருகும்போது அனைவருக்கும் உணவுப் பொருள் வழங்குவது அரசின் கடமையாகிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பினால் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் போய்விடும்.

அடிப்படைச் சுகாதார வசதியின்மை

அதிகரித்த மக்கள் தொகையினால் நகர்ப்புறங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் இதனால் சுகாதார கட்டமைப்பு சீர்குலையும். தொற்றுநோய்களும் எளிதில் பரவி கொள்ளும்.

சுற்றுச்சூழல் சீர்கேடு

அதிகரித்த மக்கள் தொகையால் தொழிற்சாலைகளின் உருவாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் ஓசோன் படலத்தில் துவாரம் விழுந்து சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

மனித இனத்தின் எண்ணிக்கையை இந்த பூமி சுமக்க முடியாத அளவிற்கு எல்லை மீறிக்கொண்டிருக்கின்றது. மேலும் புவி வெப்பமடைவதற்கான மூல காரணமாக மக்கட்தொகைப் பெருக்கமே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

வேலையில்லாத் திண்டாட்டம்

மக்கள் தொகை வேகமாக வளரும் போது அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்புக் கொடுப்பது அரசின் பொறுப்பாகிறது. எனினும் மிதமிஞ்சிய மக்கள் தொகை அதிகரிப்பினால் பட்டதாரிகளின் அதிகரிப்பும் கணிசமான அளவு உயரும்.

இதனால் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்குவது என்பது சிரமமானதாகும். நாடு வேலையில்லாப் பிரச்சினையை எதிர்நோக்கும்.

சேமிப்பும் முதலீடும் குறைதல்

நாட்டு வருமானம், தலா வருமானம் குறைவாக உள்ள நிலையில் சேமிப்பிற்கு என்று பணத்தை ஒதுக்க வாய்ப்பில்லை. இதனால் மக்களின் வாங்கும் திறனும் குறைவடைகின்றது.

வேளாண்மையில் பின்தங்கிய நிலை

மக்கள் தொகைப் பெருக்கத்தினால் பயிர் நிலங்கள் அளிக்கப்படுகின்றன. சிறிய விளைநிலங்களில் இயந்திரங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனாக செய்ய முடியாது போய்விடும். இதனால் விளைச்சல் குறையும்.

அரசு மீது நிதிச் சுமை அதிகரிக்கும்

அதிகரிக்கும் மக்கள் தொகையினால் இறக்குமதி பொருட்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றது. அத்தோடு அரசு அதிகரித்த மக்கள் தொகைக்கேற்ப தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.

இதனால் நாட்டின் பொருளாதார நிலை தேக்கம் அடையும். இதனால் அரசின் மீது நிதிச்சுமை அதிகரிக்கும்.

You May Also Like :
தமிழில் பிற மொழி கலப்புக்கான காரணங்கள்
மனிதனின் ஐந்து கடமைகள்