Table of Contents
அறிமுகம்
சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் உள்ள மூன்று நாடிகளில் கபமும் ஒன்றாகும். உடலிலுள்ள இந்த முக்கிய உயிர்த் தாதுக்கள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சித்த மருத்துவத்தில் உயிர்தாதுக்கள் என்கின்றனர்.
குறிப்பிட்ட அளவைவிட அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ நோய் உண்டாகும். உடலில் 1483 வகையான நோய்கள் கபத்தினால் தோன்றுகின்றது என்று சித்த மருத்துவர்கள் மருத்துவ நூலில் எழுதி உள்ளனர்.
இம் மூன்று உயிர்த்தாதுக்களும் ஐம்பூதங்களுடன் தொடர்புடையது என சித்த மருத்துவம் கூறுகின்றது. அந்தவகையில் கபம் எனப்படுவது நீருடனும், நிலத்துடனும் நெருங்கிய தொடர்புடையது.
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
உடலிலே பித்தத்தின் அதிக வெப்பத்தையும், வாதத்தின் அதிக வறட்சியையும் சமப்படுத்தி உடலின் கட்டமைப்பை சிறப்பாக பேணுகின்றது.
கபத்தில் ஏற்படும் சமநிலைப் பிறள்வினால் குளிர், மேல் சுவாசக் குழாய் தொற்று, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு, ஒவ்வாமை, ஆஸ்துமா, நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களும் அதிகமாக ஏற்படலாம். பொதுவாக இருமல் மூலம் உடலில் இருந்து கபம் வெளியேறும்.
கபம் என்றால் என்ன
கபத்தை சிலேத்துமம் என்றும் கூறுவர். கபம் என்பது நுரையீரலின் சுவர் அணுக்கள் உருவாக்கும் ஒரு தடிமனான, திரவம் ஆகும். இது உடலின் தற்காப்பு அமைப்புகளால் தயாரிக்கப்படுகிறது. மேலும் கபம் என்பது மனித உடலில் குளிர்ச்சியை அல்லது ஈரப்பதனை குறிப்பிடுவதாகும்.
அதாவது கபம் என்பது மனித உடலில் உள்ள ஈரப்பததின் அளவை குறிக்கும். சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய உதயத்திற்கு பின்பும் உள்ள நேரத்தை கப நேரம் என்று கூறுவார்கள் ஏனெனில் இவ்விரண்டு காலமும் குளிர்சியான காலம் ஆகும். மற்றும் மழை காலங்களும் அடங்கும்.
கபம் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள்
பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் போன்றவை கபத்தை அதிகப்படுத்தும் உணவுகளாகும். குளிர் காலங்களிலும், மழைக் காலங்களிலும் இவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கபம் அதிகரித்தால் நோயாளியின் முகம் முதலில் கரு நிறம் அடைந்து பின்னர் வெண் நிறமாக மாறும். அரிப்பு உணர்வு, உடல்கழிவுகள் அல்லது மலத்தின் ஒட்டும் தன்மை மற்றும் மலம் வெண் நிறமாகும், அதிக சளி சுரப்பு,
மூச்சுக்குழாய் ஆஸ்துமா, தொண்டைப்புண், இருமல், நீரிழி மற்றும் திரவம் தங்குதல், ஒழுகும் மூக்கு அதாவது படுத்திருக்கும் பொது மூக்கின் பின்புறத்திலிருந்து தொண்டைக்குள் வழியும், தொடர்ந்து செருமுதல் மற்றும் தொண்டையை சரி செய்யும் முயற்சி, மூச்சு திணறல், மூச்சு இழுப்பு, காய்ச்சல், நடுக்கம், குமட்டல், வாந்தி, மார்பில் எரிச்சல் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
கபம் சுவாசக்குழாயில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் திரவமாக இருப்பதால் அதை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமில்லை. ஆனால் அதிகரித்த கபத்தினை தடுப்பதற்கு புகை, கருந்தூசி, மாசுபாடு போன்றவற்றிலுருந்து பாதுகாப்புப் பெறுதல் மற்றும் ஆரோக்கியமான உணவு போன்றவை உடல் நிலையை சிறப்பாக பேணுவதற்கு உதவும்.
குறிப்பாக மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும், சீரான உடற்பயிற்சி, நீச்சல் போன்ற உடல் பயிற்சிகளை செய்தால் நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொண்டு நோய்களைத் தவிர்க்க முடியும்.
You May Also Like : |
---|
நார்ச்சத்து மிக்க உணவுகள் |
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் |