நம் குரலிலிருந்து எழுகின்ற ஒலி எழுத்தாக வெளிவருகின்றது. ஒவ்வொரு எழுத்தும் எங்கே இருந்து பிறக்கின்றது என்பதை நாம் அறிந்து கொண்டால் எழுதும் போதும், வாசிக்கும் போதும் ஏற்படக்கூடிய பல்வேறு எழுத்துப் பிழைகளை நம்மால் நிச்சயமாக தவிர்க்க இயலும்.
இதனால் ஒவ்வொரு எழுத்தும் பிறக்கக்கூடிய இடத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
Table of Contents
எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன
ஒலிகள் எல்லாம் உள்ளிருந்து எழும் காற்றால் பிறக்கின்றன. அந்த காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றில் பொருந்தி இதழ்கள், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய நான்கில் முயற்சி வேறுபாட்டால் பல்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன இவையே எழுத்துக்களின் பிறப்பு என்பர்.
அதாவது உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன இதுவே எழுத்துக்களின் பிறப்பு ஆகும்.
எழுத்துகளின் பிறப்பு எத்தனை வகைப்படும்
- இடப்பிறப்பு
- முயற்சி பிறப்பு
என இரு வகைப்படும்.
ஒலி தோன்ற உதவும் உறுப்புக்கள் எட்டு ஆகும். தலை, கழுத்து, நெஞ்சு, மூக்கு, பல், இதழ், நாக்கு, அண்ணம் இவை இரண்டு வகையாகக் கூறப்படுகின்றது. தலை, கழுத்து, நெஞ்சு, மூக்கு காற்றறையாகவும், இதழ்கள், நாக்கு, அண்ணம், பல் இவை ஒலியெழுப்பியாகவும் செயல்படுகின்றன.
எழுத்துக்களின் இடப்பிறப்பு
இடப்பிறப்பு என்பது எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களைக் குறிக்கிறது.
- ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களை “காற்றறைகள்” என கூறலாம்.
வயிற்றிலிருந்து வெளிவரும் காற்றானது மார்பில் தங்கி வாயில் அடைபட்டு வன்மையான ஓசை உடையதாக வெளிப்படுகின்றது. இவ்வெழுத்துக்களை வல்லினம் என்கின்றனர்.
இதேபோல் வயிற்றில் இருக்கும் காற்றானது மூக்கில் தங்கி மென்மையான ஓசையாக வெளிவருகின்றது. இவற்றை மெல்லினம் என்கின்றனர். மார்பிற்கும், மூக்கிற்கும் இடைப்பட்ட பகுதி கழுத்து.
காற்றானது கழுத்தில் தங்கி வாய்வழியாக வெளிபடுவதனை இடையினம் என்கின்றனர். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் கழுத்தை இடமாக கொண்டு பிறக்கின்றன. வன்மையான ஓசையும் அல்லாமல், மென்மையான ஓசையும் இல்லாமல் இடைப்பட்ட ஓசையைக் கொண்டதனால் இதனை இடையினம் என்றனர்.
எழுத்துக்களின் முயற்சி பிறப்பு
முயற்சிப் பிறப்பு என்பது உதடு, நாக்கு, மேல்வாய் (அண்ணம்), பல் ஆகிய உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை குறிக்கிறது.
- ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை ஒலிப்புமுனைகள் என கூறுவர்.
உயிர் எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு
வாய் திறந்தால் அ, ஆ பிறக்கின்றது. வாய் திறத்தல் மூலம் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லில் பொருந்துவதால் இ, ஈ, எ, ஏ, ஐ போன்ற எழுத்துக்கள் பிறக்கின்றன. வாய் திறத்தலோடு இதழைக் குவிப்பதால் உ, ஊ, ஒ, ஓ, ஒள போன்ற 5 எழுத்துக்களும் பிறக்கின்றன.
மெய் எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு
நாவின் முதற்பகுதியும், அண்ணத்தின் அடிப்பகுதியும் பொருந்துவதால் க், ங் பிறக்கின்றன.
நாவின் இடைப்பகுதியும், அண்ணத்தின் இடைப்பகுதியும் பொருந்துவதால் ச், ஞ் பிறக்கின்றன.
நாவின் நுனிப்பகுதியும், அண்ணத்தின் நுனிப்பகுதியும் பொருந்துவதால் ட், ண் பிறக்கின்றன.
மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் த், ந் பிறக்கின்றன.
மேலிதழும், கீழிதழும் பொருந்துவதால் ப், ம் பிறக்கின்றன.
நாக்கின் அடிப்பகுதி மேல்வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் ய் பிறக்கின்றது.
மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் ர, ழ் பிறக்கின்றன.
மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் ல் பிறக்கின்றது.
மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதவதால் ள் பிறக்கின்றது.
மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் வ் பிறக்கின்றது.
மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் ற், ன் போன்ற எழுத்துக்கள் பிறக்கின்றன.
Read more: தேர்ச்சி என்றால் என்ன