யுகாதி பண்டிகை என்றால் என்ன

உகாதி என்றால் என்ன

இந்த பதிவில் “யுகாதி பண்டிகை என்றால் என்ன” பற்றி விரிவாக காணலாம்.

யுகாதி பண்டிகை என்றால் என்ன

இந்தியாவின் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் மக்களின் வருடப்பிறப்பு தினமே யுகாதி பண்டிகை ஆகும்.

இது சைத்ரா மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை மகாராட்டிராவில் ‘ குடி பாட்வா ‘ என்றும், மணிப்பூரில் ‘ சாஜிபு நொங்மா பன்பா ‘ என்றும், சிந்து இனமக்கள் ‘ சேட்டி சந்த் ‘ என்றும்,

தமிழ்நாட்டின் எல்லைப்புறங்களான தருமபுரி, வேலூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வாழும் கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் ‘ யுகாதி ‘ என்ற பெயரிலும் கொண்டாடுகின்றனர்.

யுகாதி என்பதன் பொருள்

யுகம் + ஆதி = யுகாதி

இது யுகங்களின் ஆரம்பம் எனும் பொருளை தருகின்றது. அதாவது இவ்வுலகின் ஆரம்ப நாள் என கூறப்படுகிறது. யுகாதி என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து தோற்றம் பெற்றது ஆகும். இது ‘உகாதி‘ எனவும் அழைக்கப்படுகிறது.

யுகாதி பண்டிகை வரலாறு

சைத்ரா மாதத்தின் முதல் நாளான பங்குனிமாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலே படைத்தல் தெய்வமான பிரம்மா தனது படைத்தல் தொழிலை ஆரம்பித்ததாக இந்து புராணங்களில் கூறப்படுகின்றது.

இந்நாளை தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர மக்கள் வருடப்பிறப்பு விழாவாக விமர்சியாக கொண்டாடுகின்றனர்.

யுகாதி பண்டிகையின் சிறப்பு

யுகாதிப் பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பூரண பிரதமை திதியில் (ஆங்கில மாதம் ஏப்ரல் முதல் வாரம் அல்லது மார்ச் கடைசி வாரம் வசந்த காலத்தில் வருகிறது) கொண்டாடப்படுகிறது. அன்று அமாவாசை ஒரு நாழிகை  நீடித்தால் கூட மறுநாள் தான் யுகாதிப்பண்டிகை கொண்டாடப்படும். இது வசந்தகால பிறப்பை குறிப்பதனாலும் சிறப்பாகக் காணப்படுகிறது.

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி வரும் என்பதையும் அதை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பண்டிகை உணர்த்துகிறது. இச்சுபநாளிலே எந்த புதிய செயலை நாம் ஆரம்பித்தாலும் அது சிறந்த முறையில் இடம்பெறும் என்பது ஐதீகம் ஆகும்.

யுகாதி பண்டிகைகொண்டாடப்படும் முறை

அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை அணிவர் பின்னர் வீடு முழுவதும் மாவிலை தோரணம் கட்டி வாசலில் கோலம் போடுவார்கள். தமது விளைநிலங்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவது சில பிரதேசங்களில் வழக்கமாக காணப்படுகிறது.

இந்நாளில் பெருமாள், சிவன், கணபதி, அம்பிகை போன்ற இஷ்டத் தெய்வங்களையும், சிலர் தமது குலத்தெய்வங்களையும் அலங்கரித்து, நெய்வேத்தியங்களாக புளியோதரை, சூரன் போளி, பால் பாயாசம் மற்றும் யுகாதி வருட சிறப்பான பச்சடியும் படைத்து ஏழு இராகங்கள் பாடி இறைவழிபாட்டினை மேற்கொள்வார்கள்.

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் பஞ்ச அங்கங்களையும் கூறும் பஞ்சாங்கம்  இந்நாளில்  படிக்கும் வழக்கம் பெரியோர்களிடம் காணப்படுகிறது.

அத்துடன் சிலர் ஜோதிடரிடம் சென்று குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நன்மைகளையும் அறிந்து கொள்வார்கள்.

அந்நாளில் ஆரம்பிக்க இருக்கும் விடயங்களை மகிழ்வுடன் மேற்கொள்வார்கள் பின் மாலைப் பொழுதில் பொதுமக்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இசை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் புராணங்கள் படிப்பது போன்ற நிகழ்வுகள் நடாத்தி யுகாதி வருடத்தை வரவேற்று மகிழ்வது வழக்கமாக காணப்படுகிறது.

யுகாதி பச்சடி

யுகாதி அன்று அறுவை கூடிய பதார்த்தமாகவும் மிக முக்கியமான பதார்த்தமாகவும் செய்யப்படுவதே இந்த யுகாதி பச்சடி ஆகும்.

இது வேப்பம்பூ, மாவடு, புளி, வெல்லம், மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

இதில் கசப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, காரம், உப்பு என அறுசுவை கலந்து இருப்பது போல வாழ்க்கையென்றால்  இன்பம், துன்பம், ஏமாற்றம், விரக்தி, தோல்வி, வெறுமை எல்லாமே சேர்ந்து தான் நிலவும் எனும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிறது. இந்த பச்சடியை கன்னட மொழியில் ‘பேவு பெல்லா’ என்று அழைக்கின்றனர்.

You May Also Like :
தமிழர் திருநாள் கட்டுரை
தமிழ் புத்தாண்டு கட்டுரை