இறையாண்மையானது தற்கால அரசியல் துறையில் முக்கியம் பெற்றாலும், அரசியலின் தந்தை என்று அழைக்கப்படும் அரிஸ்டோட்டில் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இன்றைய உலகில் முழுமையான இறையாண்மை என்பது இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இன்றைய உலகில் எந்த நாடும் கட்டுப்பாடற்ற உச்ச சக்தியை அனுபவிப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளின் அழுத்தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக உள்ளன.
Table of Contents
இறையாண்மை என்றால் என்ன
ஒரு நாடு தனது முடிவுகளை வேறு எந்த நாட்டினதும் தலையீடு இன்றி தானாகவே முடிவு செய்தல் இறையாண்மை எனப்படுகின்றது.
அதாவது ஒரு நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரம் நாட்டுக்குள்ளேயே இருப்பது இறையாண்மை ஆகும்.
அரிஸ்டோட்டில் இறையாண்மையை “அரசின் உயர்வான அதிகாரம்” என்று குறிப்பிடுகின்றார்.
இறையாண்மை என்பது “ஒட்டுமொத்த மற்றும் தடையில்லா அரசின் அதிகாரமாகும். மேலும் அதீத கட்டளைத் தன்மையுடையதாகவும் காணப்படுகின்றது” என்கின்றார் ஜீன் போடி.
இறையாண்மையின் வகைகள்
இறையாண்மையை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
- பேரளவு மற்றும் உண்மையான இறையாண்மை
- சட்ட இறையாண்மை
- அரசியல் இறையாண்மை
- மக்கள் இறையான்மை
பேரளவு மற்றும் உண்மையான இறையாண்மை என்பது மன்னர் பேரளவிலும் மந்திரிசபை உண்மையான இறையாண்மையையும் பெற்றிருப்பதைக் குறிக்கின்றது. இந்தியாவின் குடியரசு தலைவர் பெயரளவுக்கு தலைவராகவும், பிரதமர் உண்மையான நிர்வாகத் தலைவராகவும் செயற்படுவதனை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சட்ட இறையாண்மை என்பது எப்போதும் தெளிவானது மற்றும் முடிவானது. அரசின் அதிகாரத்தின் இறுதிக் கட்டளைகளை சட்ட இறையாண்மை பெற்றுள்ளது. எடுத்துக்காட்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அரசினால் வெளியிடப்படும் அரசாணையை குறிப்பிடலாம்.
அரசியல் இறையாண்மை என்பது மக்களையோ அல்லது தேர்தலில் வாக்களித்திருப்பவர்களையோ அடையாளமாக கொண்டது. அரசியல் இறையாண்மைக்கு எதிராக சட்ட இறையாண்மையை செயற்பட முடியாது.
மக்கள் இறையாண்மை என்பது ஒரு அரசின் அதிகாரம் மக்களிடம் இருப்பதே மக்கள் இறையாண்மை எனப்படுகின்றது. மக்கள் இறையாண்மை என்பது முடியாட்சியின் எதேர்ச்சை அதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாக விளங்குகின்றது. மக்கள் இறையாண்மைதான் தற்கால மக்களாட்சியின் அடிப்படையாக விளங்குகின்றது.
இறையாண்மையின் பரிமாணங்கள்
இறையாண்மை மூன்று பரிமாணங்களை கொண்டுள்ளது. அதாவது இறையாண்மையின் முழுமையான தன்மை, இறையாண்மையின் உள் மற்றும் வெளிப்புற பரிணாமங்கள், இறையாண்மையின் வைத்திருப்பவர் ஆகியவையே அவை மூன்றுமாகும்.
இறையாண்மை முழுமையான சக்தியாகவும் அல்லது முழுமையானதாக இல்லாமலோ இருக்கலாம். இறையாண்மை முழுமையானதாக இருந்தால் ஒரு நாடு நிபந்தனையின்றி தனது எல்லைகளுக்குள் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
அதே சமயம் தன்னுடைய எல்லைக்குள் ஒரு நாடு சில விடயங்களில் இறையாண்மையுடன் சிலவற்றில் அதிகாரம் இல்லாமலும் இருக்க வாய்ப்புண்டு.
உதாரணம் இன்று பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் முழுமையற்ற இறையாண்மை கொண்ட நாடுகளாக செயற்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை நிர்வகிப்பதில் இறையாண்மை உடையதாகவும், அவர்களின் நாணயங்களை நிர்வகிப்பதிலும், வணிகக் கொள்கையிலும் ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களுக்கு அமைய அதற்கு நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வெளிப்புற இறையாண்மை என்பது உலக அரங்கில் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படும் அரசின் திறனைக் குறிக்கின்றது.
இறையாண்மையைக் கொண்ட நாடுகள் அவற்றின் உள் விவகாரங்களில் வெளிப்புறத் தலையீட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
உள் இறையாண்மை என்பது ஒரு இறையாண்மை சக்திக்கும் அதன் குடிமக்களுக்குமிடையிலான உறவினைக் குறிக்கின்றது.
Read more: அரசியலமைப்பு என்றால் என்ன