இன்சொல் என்றால் என்ன

insol endral enna in tamil

உலகம் பல்வேறு பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒளியும் இருளும் கலந்தது, இன்பமும் துன்பமும் கலந்தது, மேடும் பள்ளமும் நிறைந்தது. இதுபோன்றே பேசும் சொற்களில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு.

ஒலிக்கூட்டமாய் நின்று எழுத்துக்களாலாகிய சொற்கள் பொருளைப் புலப்படுத்துகின்றன. இச்சொற்கள் இனிமை தருவதுமுண்டு, இன்னாமை தருவதுமுண்டு எல்லாம் ஒருவர் பயன்படுத்தும் சொற்களில் அமைந்துள்ளது.

எப்போதும் ஒருவர் பேசும் சொற்கள் நன்மை விளைவிக்க வேண்டும். அதேவேளை பேசும் சொற்கள் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். இனிமை பயக்கும் நல்ல சொற்களையே எல்லோரிடத்திலும் பேச வேண்டும்.

இன்சொல் என்றால் என்ன

இனியவற்றையே பேசுதல் என்பது மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய ஓர் உயர்ந்த அறநெறி ஆகும். ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகள்

கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும்.

  • இன்சொல்லானது கேட்பவருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
  • உறவுகளை வலுப்படுத்துகின்றது.
  • நன்நடத்தையை அதிகரிக்கச் செய்கின்றது.
  • மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தித் தருகின்றது.

இனியவை கூறல்

இன்சொல் பேசும் பண்புநலத்தின் சிறப்பை விளக்கவென்றே “இனியவை கூறல்” என்றொரு தனி அதிகாரத்தைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

“இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று”

இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பேசுவது என்பது ஒரு மரத்தில் உண்பதற்கு நல்ல கனிகள் இருக்கும் போது அதனை உண்ணாமல் அந்த மரத்திலுள்ள காய்களை உண்பதற்குச் சமனானது என்கின்றார் வள்ளுவர்.

“அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்”

யாருக்கும் நீங்கள் பொருளை வாரித் தந்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டாம். அதை விட உயர்ந்தது, இனிமையாக அவர்களிடம் நான்கு வார்த்தை பேசுவதுதான் என்று தீர்ப்புச் சொல்கிறது வள்ளுவம்.

“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்”

முகம் மகிழ்ந்து உள்ளத்தில் இருந்து இனிமையான சொற்களைப் பேசுதலே சிறந்த அறமாகும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

வன்சொல்லின் தீமைகள்

வன்சொல்லானது அதைக் கேட்பவரை மட்டுமன்றி சொன்னவருக்கும் தீமையையே அளிக்கின்றது. கடும் சொல்லைப் பேசியவர் உடனே துன்பம் அடைவதில்லைப் போல் வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும், காலப் போக்கில் தன் வாழ்வில் அந்தக் கடும் சொற்களால் துன்பம் நேர்வதை உணர்வர்.

வன்சொற்கள் ஒருவரின் மரியாதையையும், மதிப்பையும் அழித்துவிடும். மற்றவர்களை வெறுப்படையச் செய்யும். மனிதர்கள் கோபத்திலும், அவசரத்திலும் கடும் சொற்களைப் பேசிவிட்டு தனிமையில் வருந்துவர்.

முள்ளின் வலிகூடச் சில நிமிடங்கள்தான். ஆனால் சொல்லின் வலி பல ஆண்டுகள் என்பதனை மறந்துவிடலாகாது.

எனவே எப்போதும் அன்பாக இனிய சொற்களைப் பேச வேண்டும். இதுவே கேட்பவருக்கு மட்டுமன்றி பேசுபவர்களுக்கும் நன்மையைத் தரும்.

Read more: உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

மன அழுத்தம் என்றால் என்ன