தமிழில் பெயர்ச்சொல் என்பது ஒரு பெயரை குறிப்பது ஆகும். தமிழில் பெயர் சொல்லை ஆறு வகையாகப் பிரிக்கின்றனர். அவையாவன,
- பொருட்பெயர் (மரம், மயில், புத்தகம் நாற்காலி)
- இடப்பெயர் (சென்னை, பள்ளி, தெரு பூங்கா, அங்காடி)
- காலப்பெயர் (நாள், நிமிடம், சித்திரை, வாரம்)
- சினைப்பெயர் (கண், கை, இலை, கிளை)
- பண்புப்பெயர் (வட்டம், நன்மை, வெண்மை)
- தொழிற்பெயர் (படித்தல், ஓடுதல், ஆடுதல், நடத்தல்)
இதைதவிர இடுகுறிப் பெயர், காரணப்பெயர் எனவும் உள்ளன.
பழங்காலம் தொட்டு நமக்கு முன்னால் இருந்த சந்ததியினர் ஒவ்வொரு பொருளுக்கும் பல பெயர்களை இட்டு அழைத்தனர். அந்தப் பெயர்கள் சிலவற்றிற்கு காரணம் இருந்தது. பலவற்றிற்குக் காரணமே இல்லாமல் பெயரிட்டு அழைத்தனர். அவ்வாறு அழைக்கக்கூடிய பெயர்கள் இரண்டு வகைப்படும். அவையாவன
- இடுகுறிப்பெயர்
- காரணப்பெயர்
நம் முன்னோர்கள் எவ்வாறு அழைத்து வந்தனரோ அப்படியே இன்றுவரை நாமும் அழைத்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் இவற்றை இடுகுறிப் பெயர்கள் என அழைத்து வருகின்றோம். நம் தமிழ் எழுத்துக்களில் இடுகுறிப் பெயர்களை விட காரணப் பெயர்கள் தான் அதிகமாக இருக்கும்.
Table of Contents
இடுகுறிப்பெயர் என்றால் என்ன
எந்த காரணமும் இல்லாமல் வழங்கிய பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு: மரம், காற்று, மழை, கோழி, வீடு, கல், மண்
இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும். அவையாவை
- இடுகுறிப் பொதுப்பெயர்
- இடுகுறிச் சிறப்பு பெயர்
1. இடுகுறிப் பொதுப் பெயர் – காரணம் இல்லாமல் எல்லா பொருட்களையும் பொதுவாக குறிப்பது இடுகுறிப் பொதுப் பெயர் எனப்படுகின்றது.
எடுத்துக்காட்டு: காடு, மரம், பூ
2. இடுகுறி சிறப்புப் பெயர் – ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறி சிறப்பு பெயர் எனப்படும். அதாவது ஒரு இடுகுறிப்பெயர் சிறப்பான பெயராக அமைவது ஆகும்.
எடுத்துக்காட்டு: மா, கருவேலங்காடு, தென்னை மரம், கொல்லிமலை, ரோசாப்பூ.
காரணப் பெயர்கள்
நம் முன்னோர்கள் காரணம் கருதி வழங்கப்பட்ட பெயர் காரணப்பெயர்கள் எனப்படும். ஒரு பொருளாலோ அல்லது, வடிவத்தாலோ அல்லது, தன்மையினாலோ அல்லது வகையினாலோ அல்லது செய்யும் வேலையாலோ அந்தச் சொல்லிற்கும், பெயரிற்கும் ஏதோ ஒரு வகையில் ஓர் காரணம் இருக்கும். அவ்வாறு காரணம் கருதி இட்ட பெயர்களைக் காரணப் பெயர்கள் என்கின்றோம்.
எடுத்துக்காட்டு வளையல், பறவை, நாற்காலி, முக்காலி
- வளையல் – வளைந்து இருப்பதனால் அதை வளையல் என்கின்றோம். அதன் பண்பு அடிப்படையில் காரணப் பெயர் அமைந்துள்ளது.
- பறவை – பறப்பதால் அதனை பறவை என்கின்றோம்.
- நாற்காலி – நான்கு கால்களை உடையதால் அதனை நாற்காலி என்கின்றோம்.
- முக்காலி – மூன்று கால்களை உடையதனால் அதனை முக்காலி என்கின்றோம்.
காரணப் பெயரானது இரண்டு வகைப்படுகின்றது. அவையாவன,
1. காரணப் பொதுப் பெயர் – காரணம் உடைய எல்லாப் பொருட்களையும் குறிக்கின்றது.
எடுத்துக்காட்டு – பறவை, அணி
2. காரணச் சிறப்புப் பெயர் – காரணமுடைய சில குறிப்பிட்ட பொருட்களைக் குறிப்பது காரணச் சிறப்புப் பெயர் ஆகும்.
எடுத்துக்காட்டு – மரங்கொத்தி, வளையல்
Read More: கணித இடர்பாடு என்றால் என்ன