ராகு கேது தோஷம் விளக்கம்

rahu ketu dosham in tamil

ஒருவரது ஜாதக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் அதற்கு ஏழாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் எட்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் தோஷத்தைத் தரும்.

இவற்றை தான் சர்ப்ப தோஷம் என்றும் சொல்வார்கள். ஒருவரது ஜாதக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7ம் இடத்தில் ராகு அல்லது கேது கண்டிப்பாக இருப்பார்கள்.

காரணம் ராகு கேது என்பவர்கள் 180 டிகிரி கோணத்தில் நிரந்தரமாகச் சுற்றி வருபவர்கள். எனவே ராகு இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருக்கும் இடத்திற்கு 7ம் வீட்டில் ராகு இருப்பதும் இயல்பான ஒன்றாகும்.

7ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் திருமணத்தடை ஏற்படும். லக்னத்தில் இருக்கும் ராகு அல்லது கேது அந்த ஜாதகரின் வளர்ச்சியைத் தடுத்து விடும் அல்லது நிலையான சிந்தனைகளையும் செயல்களையும் ஏற்படுத்த விடாது.

7ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் வாழ்க்கைத்துணை சரியாக புரிந்துகொள்ள முடியாதவராகவும் எதிர்வினை ஆற்றுபவராகவும் குடும்பத்தோடு இணைந்து செல்ல முடியாதவராகவும் இருப்பார் என ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தவறான பாதைக்கு இட்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. பணப்பிரச்சினை அதிகரிக்கும் குடும்பம் விருத்தி அடைவதில் பிரச்சினைகள் ஏற்படும்.

எட்டாம் இடத்தில் இருக்கும் ராகு அல்லது கேதுவால் கணவன் அல்லது மனைவிக்கு ஆபத்து நேரிடும். அவமானங்கள் உண்டாகும். நிம்மதியற்ற வாழ்க்கை உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

5ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர பாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படும் அல்லது புத்திர பாக்கியம் இல்லாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.

ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது

நமது ஜாதகத்தில் ராகு அல்லது கேது தோஷம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பிறந்த நேரம், நாள், கிழமை, நட்சத்திர, கிரகங்களின் நிலை போன்ற அனைத்தும் சரியான முறையில் கணிக்கப்பட்டு பலன் எழுதப்பட்ட ஜாதகமாக இருத்தல் வேண்டும்.

அந்த ஜாதகத்தில் லக்னம் எனப்படுவதை குறிப்பிடும் “ல” என்கிற எழுத்து ஜாதக கட்டங்களில் எங்கேனும் ஒரு கட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்த லக்னம் தான் ஒருவருக்கு முதல் வீடு.

உதாரணமாக ஒருவருக்கு ஜாதகக் கட்டத்தில் மிதுன ராசியில் “ல” என்கிற எழுத்து எழுதப்பட்டிருந்தால் அந்த மிதுனராசி தான் அந்த ஜாதகரின் லக்னம் மற்றும் முதல் வீடாக அமைகிறது. இந்த மிதுன லக்னத்திற்கு அடுத்த கடகம், சிம்மம், கன்னி என கடிகார சுற்று முறையில் 12 வீடுகளை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் லக்னம் 2,7,8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு கேது தோஷம் ஏற்படுகிறது.

ஜாதகத்தில் மேற்கூறிய 1,2,7,8 ஆம் வீடுகளில் ராகு – கேது கிரகங்கள் இருந்தாலும் அந்த வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு உச்ச வீடாகவோ அல்லது நட்பு வீடாகவே இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷம் இல்லை என்பது தெளிவு.

ஆனால் மேற்கூறிய வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு நீச்ச வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷத்தினால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்

ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம் 2,7,8 ஆகிய இடங்களில் ராகு – கேது கிரகங்கள் இருந்து ராகு – கேது தோஷம் ஏற்பட்டிருக்குமானால் இதே போன்று ஜாதக அமைப்பை கொண்ட ஆண் அல்லது பெண் வரனை ராகு – கேது தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதால் ராகு – கேது தோஷம் நிவர்த்தி உண்டாகிறது.

ஜாதகத்தில் ராகுவால் மட்டுமே தோஷம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகும் நபர்கள் வெள்ளிக்கிழமைகள் மற்றும் ராகு திசை, ராகு புக்தி நடைபெறும் காலங்களில் ராகு காலத்தில் விரதம் அனுஷ்டித்து ராகு பகவானுக்கு மந்தாரை பூக்களால் அர்ச்சனை செய்து உளுந்து கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் செய்து ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபித்து வழிபடுவது ராகு கிரக தோஷ பாதிப்புக்களை குறைக்க செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.

அதே போன்று ஜாதகத்தில் கேது கிரக தோஷத்தினால் மட்டுமே பாதிப்புக்களை எதிர்கொள்பவர்கள். திங்கட்கிழமைகள் மற்றும் கேது திசை கேது புக்தி நடைபெறும் காலங்களில் கேது பகவானுக்கு விரதமிருந்து பலவகையான வாசமிக்க மலர்களைக் கொண்டு கேதுவுக்கு அர்ச்சனை செய்து ஏதாவது ஒரு வகை சித்ரா அன்னம் நைவேத்தியம் வைத்து கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வந்தால் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள், பாதிப்புக்கள் நீங்கும்.

You May Also Like :
சனி பகவான் வழிபடும் முறை
திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்