இந்த பதிவில் “அறிவே ஆற்றல் தரும் கட்டுரை” பதிவை காணலாம்.
அறிவு என்பது மிகப்பெரிய செல்வம் என்பார்கள் அறிவினை கொண்டு எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு ஒருவனால் வாழமுடியும்.
Table of Contents
அறிவே ஆற்றல் தரும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறிவெனப்படுவது
- அறிவின் அவசியம்
- அறிவுடையவர்கள் எல்லாம் உடையவர்கள்
- அறிவின் பயன்
- அறிவுடைமை
- முடிவுரை
முன்னுரை
“அறிவு வளர் அகிலம் ஆழ்” என்பது மூத்தோர் பொன்மொழி. பகுத்தறிவு என்ற ஒரு திறன் மனிதனிடத்தில் இருப்பதனால் தான் மனிதர்கள் ஏனைய பிற உயிர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.
ஒரு மனிதனிடத்தில் உள்ள நல்லறிவையும் பண்பையும் கொண்டுதான் அவர்களை இந்த உலகம் அறிகிறது. தெளிந்த அறிவும் துல்லியமான சிந்தனையும் உடையவர்கள் பெரும் ஆற்றல் உடையவர்களாக கொள்ளப்படுவார்கள்.
நல்லறிவு உடையவர்கள் நயன்மிகு மரம் பழுத்ததை போல எல்லோர்க்கும் பயனுடையவர்களாக இருப்பார்கள். அறிவுடையவர்களின் ஆற்றல் பிறருக்கும் பலன் தரவல்லது.
இக்கட்டுரையில் அறிவின் முக்கியத்துவம் அதன் ஆற்றல் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றது.
அறிவெனப்படுவது
அறிவு என்ற சொல் பிரித்தறிகின்ற திறன் தெளிந்த விவேகத்தின் வெளிப்பாடாக அறியப்படுகிறது.
இதனை வள்ளுவர் “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று விளக்கி நிற்கிறார். அதாவது இந்த உலகத்தில் பலவிதமான கருத்துகள் பலர் வாயிலாக கிடைக்கப்பெற்றாலும் அவற்றில் மெய் என்பது எது என்பதனை தெளிவாக புரிந்து கொள்வதே அறிவு என்று குறிப்பிடுகிறார்.
நூல்கள் பல கற்றவராயினும் அவர் பகுத்தறிவு அற்றவராயின் அவர் அறிவுடையவராக கொள்ளப்படமாட்டார். கல்வி அறிவு, அனுபவம் மூலமாக வருகின்ற அறிவு இரண்டும் உடைய நல்லெண்ணங்கள் உடையவர்கள் சிறந்த அறிவாற்றல் உடையவர்களாக கொள்ளப்படுவார்கள்.
ஒருவரிடம் நல்லறிவு உண்டெனின் அவரை நல்ல சமூகம் அங்கீகரிக்கும். அவரது திறமைக்கு நன்மதிப்பானது வழங்கப்படும். இதனால் தான் கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
அறிவின் அவசியம்
அறிவு என்பது எல்லா மனிதர்க்கும் அவசியமாகும் அறிவில்லாதவர்கள் துன்பம் நிறைந்த வாழ்வே வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
உதாரணமாக திருக்குறளில் பின்வருமாறு காணலாம் “அறிவிலார் தாந்தம்மை பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது” என்று விளக்குகிறார்.
அதாவது அறிவு அற்றவர்கள் தமக்கு தாமே செய்து கொள்ளும் துன்பமானது. அவர்கள் எதிரிக்கு கூட செய்யமாட்டார்கள் என்று கூறுகிறார்.
ஆகவே நாம் நல்லறிவுடைய மனிதர்களாக வாழவேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியான வாழ்வை இங்கே வாழமுடியும்.
அறிவுடையவர்கள் எல்லாம் உடையவர்கள்
அறிவு என்பது மிகப்பெரிய செல்வம் என்பார்கள் அறிவினை கொண்டு எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு ஒருவனால் வாழமுடியும்.
கல்வி, வீரம், செல்வம் எனப்படும் செல்வங்களையும் இவர்களால் பெற்றுவிட முடியும். வெல்ல முடியாத வீரனை கூட புத்தி கூர்மை உடைய ஒருவனால் வீழ்த்திவிட முடியும்.
இவ்வாறு திறனுடையவர்கள் இருப்பவற்றை கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விடக்கூடிய திறன் படைத்தவர்கள்.
இவர்கள் தனித்துவமாக அனைவரின் முன்னும் தென்படுவார்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார்கள். இந்த உலகம் அறிவும் திறமையும் உடையவர்களை நிச்சயமாக அங்கீகரிக்கும்.
அறிவின் பயன்
அறிவுடைமை என்பதன் பயன் அது தனக்கு மாத்திரம் பயன்படுவதாக இருக்க கூடாது தன்னை சார்ந்த சுற்றோருக்கும் மற்றோருக்கும் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லா விடின் அது அறிவு என கொள்ளப்படமாட்டாது என்கிறார் திருவள்ளுவர்.
இதனை அவர் “அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை” என்று வலியுறுத்தி நிற்கின்றார்.
தன்னை போல மற்றவர்களையும் பாவிக்கின்றவர்கள் உலகத்தில் மிகச்சிறந்த அறிவுடையவர்களாக இருக்கமுடியும்.
அறிவுடையவர்களிடத்தில் இயல்பாக நல்லவிடயங்களை சிந்திக்கவும் அவற்றை அடுத்தவர்க்கும் எடுத்துசொல்லும் குணம் இருக்கும் இயல்பாகவே அன்பும் அவர்களிடத்தில் குடியிருக்கும்.
அறிவுடைமை
அறிவுடைமை என்பது மனிதனுக்கு மிகப்பெரிய அரணாகும். இது எந்த சூழ்நிலையிலும் அவனை பாதுகாக்கும்.
திருவள்ளுவர் இதனை விபரிக்கையில் “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என்று குறிப்பிடுகிறார்.
நிச்சயமற்ற இந்த உலக வாழ்வில் இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு தான் இதனை பகைவராலும் அழிக்கமுடியாது. இந்த அறிவு மனிதர்க்கு அழிவு வராமல் காக்கும் என்கிறார் டாக்டர் மு. வரதராசனார்.
ஆகவே மனிதர்க்கு அறவுடைமை மிகப்பெரிய ஆற்றலாகும். இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுதல் நன்மை பயக்கும்.
முடிவுரை
இந்த உலகத்தில் மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் பிறப்பினால் சமனாவர் இருப்பினும் அவர்களிடம் இருக்கின்ற பணம், புகழ், செல்வங்கள், ஆடம்பரங்கள், சொத்துக்கள் இவை எல்லாம் தற்காலிகமாக மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கலாம். ஆதலால் மனிதர்கள் இவற்றை அடைவதற்கே அதிகம் முனைந்து நிற்கலாம்.
ஆனால் அறிவு இவை அனைத்திற்கும் மேலானது இது எந்த காலத்திற்கும் அழியாத பெருமை உடையது. என்றைக்கும் நம்மை காப்பது அறிவினால் உண்டாகும் ஆற்றல் என்றால் யாராலும் மறுக்கமுடியாது.
You May Also Like :