அன்பின் சிகரம் அம்மா கட்டுரை

அம்மா பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “அன்பின் சிகரம் அம்மா கட்டுரை” பதிவை காணலாம்.

தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கும் உன்னத உறவாக இருப்பதும் அம்மா என்னும் உறவு மட்டுமேயாகும்.

அன்பின் சிகரம் அம்மா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அம்மா என்ற தெய்வம்
  3. தாயின் தியாகம்
  4. தாய்ப் பாசம்
  5. தாயைப் போற்றுவோம்
  6. முடிவுரை

முன்னுரை

உயிர்களின் பிறப்பிற்கு அடித்தளம் அம்மா என்றால் அது மிகையாகாது. அன்பின் முழு வடிவம் அன்னையே ஆகும். இப் பூவுலகில் அன்னையின் அன்புக்கு இணையாக எதுவும் இல்லை. மனித உருவில் உள்ள தெய்வம் அம்மா.

அம்மா என்ற ஒரு சொல்லில் இந்த உலகமே அடங்கிவிடும். தன்னலமில்லாத உன்னத உறவு அம்மா மட்டுமே. அன்பின் சிகரம் அம்மா பற்றிய கட்டுரையில் காண்போம்.

அம்மா என்ற தெய்வம்

அம்மாவை விடச் சிறந்த தெய்வம் பூவுலகில் வேறு ஏதும் இல்லை. மனிதர்களுள் மேன்மையானவளாய் தெய்வங்களே வணங்கிடும் நடமாடும் அழகு தேவதையாய் அன்பின் திருவுருவமாக விளங்குபவள் அம்மா.

பல காவற் தெய்வங்கள் இருப்பினும் அன்னை போல் நம்மை காக்கும் தெய்வம் பூமியில் ஏதும் இல்லை. தாயே தெய்வமாய் இருப்பதனால் தான் “தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லைˮ எனக் கூறுகின்றனர். உடலுக்கு உயிர் கொடுத்து தன் இரத்தத்தைப் பாலாக்கி உலகை அறிய வைத்த நடமாடும் தெய்வம் அன்னை.

தாயின் தியாகம்

தான் படிக்காதவளாய்⸴ அறிவிலியாய் இருந்தாலும் தன் பிள்ளைகளைச் சிறப்பாக வாழ வைக்க வேண்டுமெனத் தன் தூக்கத்தை இழந்து நமக்காய் பாடுபடும் தியாக தீபம் அம்மா. தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் உன்னத உறவாக இருப்பதும் அம்மா என்னும் உறவு மட்டுமேயாகும்.

தாய்ப் பாசம்

தாய் என்பவள் மனிதருக்கு மட்டுமன்றி சகல ஜீவராசிகளுக்கும் முக்கியமானவள். தாய்ப் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. தாய்ப் பாசத்திற்கு ஏதும் ஈடாகாது. கொடூரமான மனம் படைத்த பிள்ளைகளைக் கூட தாய்ப்பாசம் பணிய வைத்து விடும்.

ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள் கூட தன் குட்டிகளை அல்லது குஞ்சுகளைப் பாதுகாத்து அதற்கு உணவளித்து பராமரிக்கிறது என்றால் அது தாய்ப் பாசத்தாலேயாகும். தாய்ப்பாசம் இல்லையெனில் இப்பூவுலகம் முழுமை பெறாது.

தாயைப் போற்றுவோம்

தன்னுடைய உயிராலும்⸴ மெய்யாலும் நமக்கு உயிர்மெய் தந்த தாயை என்றும் போற்றித் தொழ வேண்டும். தாய்மையைப் போற்றுவதற்கு அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால் அன்னையர் தினத்தில் மட்டுமல்லாது நாம் வாழ்நாள் முழுவதிலும் தாயைப் போற்றவேண்டும்.

அவள் எண்ணங்கள்⸴ விருப்பங்களை நிறைவேற்றி நல்ல குழந்தையாக சமூகத்தில் வாழ வேண்டும். முதுமைக் காலங்களில் அவளைப் பேணிக் காக்க வேண்டும்.

நம்மை எவ்வாறு கண்ணின் மணி போல் அன்னை காத்தாளோ அதே போல் நாமும் முதுமைக் காலங்களில் கூடுதல் கவனம் எடுத்து அன்னையைக் காக்க வேண்டும். பசிக்க விடாது உணவளித்து நோயுற்ற காலங்களில் மருத்துவம் செய்து அவள் மனம் புண்படாத வகையில் காக்க வேண்டும்.

முடிவுரை

பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பு அன்னையின் அன்பாகும். தியாகத்திற்கு சிறந்த உதாரணம் தாயாகும். எம் பிறப்புக்காகத் தன் இறப்பின் வாசல் வரை சென்று வரும் அன்பின் சிகரம் அம்மா. அம்மாவை வணங்கி அவள் பெருமைப்படும் படி வாழ்வதே உண்மையான வாழ்வாகும்.

You May Also Like :

அன்னையர் தினம் கட்டுரை

தமிழின் இனிமை பற்றிய கட்டுரை