அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Ambedkar History In Tamil

இந்த பதிவில் “அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

தீண்டாமைக்கு எதிராக போராடி மக்களின் உரிமையை பாதுகாக்க போராடிய இவர் உலகின் மிகச்சிறந்த கல்விமான்களில் முக்கிய இடம் பிடிக்கிறார். மிகப்பெரிய தனிநபர் நூலகத்தை வைத்திருந்தவர் ஆவார்.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

மக்களாட்சியின் அஸ்திவாரம் அரசியல் அமைப்பாகும். அரசியலமைப்பில்லாத அரசு குழப்பமான ஆட்சியை அமைத்து விடும். இந்திய நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியலமைப்பு முக்கியமானதாகும். இதனை உணர வைத்தவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆவார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மக்களாட்சியை கொண்டுவர பல தலைவர்கள் விரும்பினார். ஆனால் மக்களாட்சிக்கு மாறும் போது மன்னராட்சியில் இருந்த சட்டங்கள் செயற்படுத்த முடியாது. அதற்கு முறையான அரசியல் சாசனம் வேண்டும். அத்தகைய முறையான அரசியல் சாசனத்தை வடிவமைத்து சிறப்பிடம் பெறுகிறார்.

பெயர்:பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
பெற்றோர்:ராம்ஜி மலோஜி சக்பால் (தந்தை)
பீமாபாய் ராம்ஜி சக்பால் (தாய்)
பிறந்த திகதி:ஏப்ரல் 14, 1891
விருதுகள்:பாரத ரத்னா, 1990
(மரணத்திற்கு பின்)
இறப்பு:6 டிசம்பர், 1956
(அகவை 65)

தொடக்க வாழ்க்கை

1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி இந்தியாவில் தற்போதுள்ள மத்திய பிரதேசத்திலுள்ள மாவ் என்ற ஊரில் ராம்ஜி மாலேஐp சக்பால் மீராபாய் ஆகியோருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

இவர் ஓர் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவருடைய இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி ஆகும். இவர் தனது நான்காவது வயதில் தாயை இழந்தார். குடும்பத்தில் இவர் மட்டுமே உயர்பள்ளி வரை சென்று படித்தவராவார்.

1897களில் சாத்தாரா என்ற பள்ளியில் சேர்ந்த இவர் அப்பள்ளியில் பதிவாகியிருந்த ஒரேயொரு தலித்திய வகுப்பைச் சேர்ந்தவராவார். சிறப்பாக கல்வி பயின்று வந்த அம்பேத்கருக்கு அவருடைய 15வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பள்ளிக் கல்வியை முடித்த இவர் 1907ஆம் ஆண்டு பம்பாயில் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான எல்வின்ஸ்ரோன் கல்லூரியிலேயே தனது பட்டப்படிப்பினை தொடர்ந்தார். 1912ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டப் படிப்பினை முடித்தார்.

வறுமைச் சூழலில் இருந்த அம்பேத்கருக்கு அன்றைய பரோடா சமஸ்தானம் தான் இவருடைய கல்விக்கான கல்வித் தொகையைக் கொடுத்து உதவியது. இருப்பினும் வறுமையும் குடும்பச் சூழலும் அவரின் வாழ்க்கையை வாட்டின.

ஒப்பந்த அடிப்படையில் பரோடா சமஸ்தானத்திற்குப் பணிக்குச் சென்றார். ஆனால் அவருடைய பின்னணியைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்பட்டார். எனினும் தொடர்ந்து கல்வி கற்கவே விரும்பினார். அதன் காரணமாக வெளிநாடு சென்று கல்வி கற்க தயாரானார்.

பரோடா அரசின் உதவியைப் பெற்று அமெரிக்கா சென்றார். இவர்தான் பொருளாதார படிப்பிற்கு அமெரிக்கா சென்ற முதல் இந்தியராவார். அமெரிக்காவில் படித்துக்கொண்டே லண்டனில் சட்ட கல்விக்காக விண்ணப்பித்திருந்த போது சமஸ்தானம் கல்விக்கான உதவித் தொகையை நிறுத்தியது.

இதனால் பாதியிலேயே இந்தியா திரும்பினார். ஒரு நாளில் 70% நேரத்தை நூலகங்களிலேயே செலவழிப்பார். தனது புத்தகங்களை விற்றுத்தான் சாப்பாட்டுச் செலவுகளைக் கவனித்து வந்தார். மீண்டும் லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத்த அம்பேத்கர் தனது மேற்படிப்பை முடித்தார்.

அம்பேத்கர் பொருளாதாரம் குறித்து எழுதிய புத்தகங்கள்

  • கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
  • 1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
  • 1923-ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்

கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

அரசியலமைப்பில் அம்பேத்கரின் பங்களிப்பு

இந்தியாவின் சட்ட மேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார். சுதந்திரம் கிடைத்த பின் இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் இந்தியாவிற்கான அரசியல் சாசனம் ஆகும்.

இந்தக் கடினமான பணியினை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டு அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று உலகின் பல நாடுகள் சென்று அங்குள்ள அரசியல் சாசனங்களை நன்கு அறிந்து நடுநிலையாக எழுதினார்.

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட உரிமைகள் விதிகள் குறித்து அரசியல் சாசன நிர்ணய சபையில் மிக நீண்ட விவாதங்கள் நடைபெற்றது.

இந்தியா தன் மக்களுக்கு வழங்க வேண்டியது பற்றியும் அவற்றுக்கான அரசியல் காரணங்கள் குறித்தும் விரிவான விளக்கம் கொடுத்தார். இன்று இந்திய அரசியல் சாசனம் குறித்த கேள்விகளுக்கும்⸴ குழப்பங்களுக்கும் அம்பேத்கரின் உரைகள் தான் விளக்கம் அளிக்கின்றன.

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர்

மத மற்றும் இன அடிப்படையில் வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து ஆய்வு செய்த கமிட்டியில் கலந்துகொண்டு சாட்சியமளிக்க அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களின் விழிப்புணர்வுக்காக முக்நாயக் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.

1924 ஆம் ஆண்டு பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்றான மகத் சத்தியாகிரகத்தை நடத்தினார்.

இந்த போராட்டம் தீண்டத்தகாதவர் என பார்க்கப்பட்ட தலித் மக்கள் குளத்தில் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்றது. இது 1927 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி மற்றும் 20ஆம் திகதிகளில் மாநாடும்⸴ சத்யாகிரகமும் நடத்தப்பட்டது.

இம் மாநாட்டிற்கு அம்பேத்கர் தலைமை தாங்கினார். தலித் மக்கள் மாநாட்டின் அருகிலுள்ள கோயிலுக்கு ஆலயப்பிரவேசம் செய்யப் போகின்றனர் என்ற வதந்தியை நம்பி மாநாட்டிற்கு வந்த மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதலை நடத்தினர்.

எனினும் பதில் தாக்குதல் எதுவும் நடாத்த வேண்டாமென்றும் அமைதிவழியில் போராட வேண்டும் எனவும் மக்களை அமைதிப்படுத்தினார். ஆதிக்க சக்தியினர் சௌத்தார்குளம் தனியார் சொத்து என்று கூறி வழக்குத் தொடர்ந்தனர்.

இதனைப் பொய்யென ஆதாரத்துடன் நிரூபித்து வெற்றி கண்டார். 1978 பிப்ரவரி 3ஆம் திகதி தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் நீர் எடுப்பதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது. எனினும் ஆதிக்க சாதியினர் மீண்டும் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை அம்பேத்கர் தனது விடாமுயற்சியாலும்⸴ வாதத் திறமையாலும் வென்றார்.

தீண்டாமையை ஒழிக்க அம்பேத்கர் ஆற்றிய பணிகள் அளப்பெரியவை. ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கை ஒளியாக இவர் திகழ்கின்றார்.

இத்தகைய மனிதர் டிசம்பர் 6ஆம் திகதி 1956 இயற்கை எய்தினார். அரசியல்வாதி⸴ சட்டமேதை⸴ பொருளாதார வல்லுனர்⸴ சமூகச்செயற்பாட்டாளர் எனப் பன்முகங்கள் கொண்டவரை இந்திய தேசத்தின் பெருமைமிகு அடையாளமென்று கூறினால் அதுமிகையல்ல.