அணுகுமுறை என்ற சொற்பதமானது பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. குறிப்பாக அரசறிவியல், பொருளியல், சமூகவியல், வரலாறு, மானுடவியல், உளவியல் போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணமுடிகின்றது.
அணுகுமுறையின் மூலம் குறித்த துறையின் பரிமாணங்களையும் அதனுடைய பல்வேறு தளங்களையும் அறிய முடிகின்றது. அணுகுமுறையானது பல்வேறு தளங்களில் பல்வேறு வகையான கருத்துகளைக் கொண்டுள்ளது.
Table of Contents
அணுகுமுறை என்றால் என்ன
அணுகுமுறை என்பது ஒரு குறிப்பிட்ட நடத்தைக்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறை ஆகும்.
உளவியலின் படி, அணுகுமுறை என்பது வெவ்வேறு சூழ்நிலைகளில் ஏற்படும் பழக்கவழக்கமாகும்.
சமூகவியலில், அணுகுமுறை மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது.
அணுகு(ம்) + முறை = முறையாக நெருங்கும் முறை அல்லது தொடர்பு கொள்ளும் முறை என்றும், அணுக்கம் என்பது நெருக்கம் என்றும் பொருள்படும்.
மேலும், அணுகுதல் என்பது நெருங்குதல் என்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லுதல் என்றும் பொருள்படும்.
இவ்வாறு அணுகுமுறைக்கு பலவாறு பொருள் கொள்ள முடியும். எனவே பொதுவாக அணுகுமுறை என்பது எளிமையாக ஒரு குறிப்பிட்ட விடயத்தை நோக்குவதற்கும் அதனை தெளிவுப்படுத்துவதற்குமான வழிமுறை என வரையறுத்துக் கொள்ளலாம்.
அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அணுகுமுறை
அரசியல் விஞ்ஞான ஆய்விலும் அநேகமான அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அரசறிவியல் அணுகுமுறையில் ஓகஸ்ட் கொம்ட், ப்லுன்சிலி, பிரைஸ் போன்ற அறிஞர்கள் அணுகுமுறைகளின் அவசியத்தை வலியறுத்தி நிற்கின்றனர்.
அரசியல் விஞ்ஞானம் பற்றிய அணுகுமுறையில் எல்லா அணுகுமுறையும் சரியானதாக இருக்கும் எனக் கருதமுடியாது. ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளரது நோக்கத்தையும், சந்தர்ப்பத்தையும் பொறுத்து மாறுபடும்.
அரசறிவியலில் அணுகுமுறையானது, மரபு ரீதியான அணுகுமுறை, நவீன அணுகுமுறை என இருவகை அணுகுமுறைகளை கொண்டுள்ளது.
மரபு ரீதியான அணுகுமுறையானது ஆரம்பகால அரசியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. மரபு ரீதியான அணுகுமுறையில் வரலாற்று அணுகுமுறை, மெய்யியல் அணுகுமுறை, நிறுவன அணுகுமுறை, சட்ட அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை என்பன அடங்கும்.
நவீன அணுகுமுறைகள் எனப்படுவது விஞ்ஞான பூர்வமான அரசியலை ஆய்வு செய்கின்ற ஆய்வு முறைமைகள் ஆகும். சமூகவியல் அணுகுமுறை, நடத்தைவாத அணுகுமுறை, மாக்ஸிச அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை என்பன அடங்கும். அத்தோடு தற்காலத்தில் அவதானிப்பு, பரிசோதனை போன்ற அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலக்கியத் திறனாய்வில் அணுகுமுறையின் முக்கியத்துவம்
ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தை அல்லது பல இலக்கியங்களைக் கண்டு நெருங்கி அது பற்றிச் சொல்வதற்கு ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. அதனையே நாம் அணுகுமுறை என்கிறோம்.
ஓர் இலக்கியத்தை வைத்து படிப்பதற்கும் இலக்கியத்திறனாய்வு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. இலக்கியத்தைச் சுவைப்பதற்கு அணுகுமுறை தேவையில்லை. ஆனால் திறனாய்வதற்கு அணுகுமுறை என்பது இன்றிமையாததாகின்றது.
இலக்கியத் திறனாய்வு அறிவுத்தேடலாக இருக்கின்ற போதும் அதற்கு அடிப்படை குறிப்பிட்ட ஒரு கொள்கையுடன் கூடிய அணுகுமுறையே ஆகும். ஒரு திறனாய்வு சிறப்பானதாக அமைவதற்கு சரியான அணுகுமுறையை தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகும்.
சில வேளைகளில் அணுகுமுறை தவறானதாக இருந்தால், தவறான கருத்தே முடிவாகக் கிடைக்கும்.
ஆய்வு என்ற கடலினைக் கடக்க உதவும் படகு போன்றது அணுகுமுறை எனலாம். குறிப்பிட்ட ஆய்வுப் பொருளை, குறிப்பிட்ட நோக்கத்திலும் குறிப்பிட்ட கொள்கையாலும் கண்டு விளக்க அணுகுமுறை முக்கியமானதாகும்.
Read more: கலை என்றால் என்ன