Table of Contents
வேதம் என்றால் என்ன
இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படுவது வேதங்கள் ஆகும். வேதம் என்பது “வித்” என்ற அடியில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிவு எனப் பொருள்படும். எனவே வேதம் என்பது அறிவு நூல் அல்லது ஞானநூல் எனப் பொருள்படும்.
வேதங்கள் என்பவை பொதுவாக இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும், வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம் ஆகும். மனித குல நன்மைக்காக வேதங்களை நான்காகப் பகுத்துத் தந்தார் வியாஸ மஹரிஷி.
அவையாவன ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்பனவாகும். இவை இன்றும் ஓதப்பட்டு வருகின்றன. “பார்மிசை வேறெது நூலிது போலே” என்று மஹாகவி பாரதியார் வேதங்களின் அந்தமான உபநிடதப் பெருமை பற்றிக் கூறுகிறார்.
வேதங்கள் எத்தனை அவை யாவை
- ரிக் வேதம்
- யஜுர் வேதம்
- சாம வேதம்
- அதர்வண வேதம்
ரிக் வேதம்
இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் மிகப் பழமையானது ரிக் வேதம் ஆகும். இந்த வேத நூல் ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ரிக் என்றால் துதித்தல் என்று பொருள். முதல் வேதமான இந்த வேதம் இந்திரன், வருணன், உள்ளிட்ட தேவர்களைப் போற்றி வணங்குகின்றது. ரிக் வேதத்தில் பல நல்ல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பரந்த உலகில் நேர்மை வழியினை கடைப்பிடிப்போர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் (ருக்-9-74,3),
உண்மையைக் காப்பவரையும் நேர்வழி நடப்பவரையும் எவரும் வெற்றிகாண இயலாது. (ருக்-9,75,2) போன்ற பல நல்ல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
யஜுர் வேதம்
அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரும்ம யக்ஞம் என சதுர்ஹோத்ரம் அடங்கியதே யஜுர் வேதம் ஆகும். இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
வியாசரின் சீடரான வைசம்பாயனரே யஜுர் வேதத்தை உலகில் பரவ செய்தார். எளிமையானது என்பதாலும், வாழ்க்கைக்கு தேவையான அரிய கருத்துக்களை உள்ளடக்கியது என்பதாலும் இவ்வேதம் உயர்வாக சொல்லப்படுகின்றது.
சாம வேதம்
சாமம் பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
“ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும். இந்நூல் “சாம கானம்” என்றும் அழைக்கப்படுகிறது. பகவத் கீதையில் கிருஸ்ணர் வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கின்றேன் என்று கூறுகின்றார்.
சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன. பெரும்பான்மையான பாடல்கள் ரிக் வேதத்தில் இருந்தும் யஜுர் , அதர்வத்தில் இருந்து சில பாடல்களும் எடுக்கப்பட்டுள்ளன.
அதர்வண வேதம்
இது பிரம்ம வேதம் எனப்படும். அதர்வ மகரிஷியால் உலகிற்கு அளிக்கப்பட்ட இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. ஆபத்துக்கள், எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடும் மந்திரங்களைக் கொண்டதாகும்.
மேலும் அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றது. அதர்வண வேதம் மந்திர யந்திர தந்திரங்களும், விஞ்ஞான கருத்துக்களும், உலகியல் ஆரோக்கியத்திற்கும் வளமான வாழ்வுக்கு தேவையான அறிவும் அதர்வண வேதத்தில் தரப்பட்டிருக்கிறது.
You May Also Like : |
---|
ஆவணி மாத சிறப்புகள் |
செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை |