நீர் என்பது மனிதன் வாழ்வதற்கான ஆதாரமாகும். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்திற்கும் நீரானது மிகவும் அவசியமானதாகும். இதனாலேயே நம் முன்னோர்கள் கூறுவர் “நீரின்றி அமையாது உலகு” என்று.
உலகின் செயற்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகின்ற இந்த நீரானது பல வழிகளில் கிடைக்கின்றது. நல்ல நீருக்கான மிகப்பெரிய மூலமாக மழை விளங்குகின்றது. மலைப்பிரதேசங்களில் உருவாகும் நீர்ச் சுனைகள், நீரூற்றுக்கள், நதிகள் போன்றவை முக்கிய நீராதாரங்கள் ஆகும். ஏரிகள், குளங்கள், ஆறுகள் இவையும் நீராதாரங்களாகும்.
நாம் வாழும் உயிர்க் கோளமாகிய பூமியில் உள்ள மொத்த நீரின் ஒரு சதவீதம் தான் சுத்தமான நீராக உயிரினங்களுக்குக் கிடைக்கின்றது. நிலத்தடி நீர் மூலம் பெருமளவு நீர் கிடைத்தாலும் வளர்ந்து வரும் மக்கள் தொகை காரணமாகவும், தொழிற்சாலைகளின் நீர்த் தேவை அதிகரிப்பதனாலும் நீரின் அளவு குறைவதோடு நீரின் தரமும் குறைந்து வருகின்றது.
Table of Contents
நீர் மாசடைதல் என்றால் என்ன
நீர் மாசடைதல் என்பது நீர் நிலைகளின் தூய்மையை இழப்பதாகும். நீரானது அதன் பௌதீக, இரசாயன, உயிரியல் அம்சங்களில் மாற்றம் அடைகின்ற போது நீர் மாசடைதல் நிகழ்கின்றது.
இது நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமைகளிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றது.
நீர் மாசடையும் வழிகள்
நீரானது பல வழிகளில் மாசடைந்து வருகின்றது. நீரானது மனிதனது செயற்பாடுகளினாலேயே அதிகம் மாசடைகின்றது. விவசாய நடவடிக்கைகளினால் பல்வேறு விதத்தில் நீரானது மாசடைகின்றது.
விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள், பீடைநாசினிகள், ரசாயன உரங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது காலப்போக்கில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு இடம்பெறுகின்ற போது இரசாயனம் நீருடன் கலந்து நீர் மாசடைகின்றது. நீர் நிலைகளிலும் நீரோட்டங்களிலும் குப்பைகளை கொட்டுவதன் மூலம் நீர் மாசடைகின்றது.
மேலும் தொழிற்சாலை கழிவுகள், கழிவு நீர், வீட்டுக் கழிவுகள், வேதியுரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை. அழுக்கு நீக்கிகள் மற்றும், எண்ணெய் கசிவு ஆகியவை மிக முக்கியமான நீர் மாசுபாட்டு மூலங்களாக உள்ளன.
நீர் மாசடைதலைத் தோற்றுவிக்கின்ற இயற்கை காரணிகளாக எரிமலை வெடிப்புகள், மண் அரிப்பு, புயல்கள், நிலநடுக்கங்கள், வறட்சி, நிலச்சரிவு, உயிரினங்கள் அழுகிப்போதல் போன்றன காணப்படுகின்றன.
நீர் மாசடைதலை தடுக்கும் வழிகள்
குப்பைகளைப் பொதுக் குழாய்கள், கிணறுகள் மற்றும், இதர நீர் ஆதாரங்களிற்கு அருகில் கொட்டக் கூடாது. பொதுத் தண்ணீர்க் குழாய்களைச் சேதப்படுத்தக் கூடாது.
தண்ணீர் மாசுபாட்டைத் தடுக்கும் அனைத்து சட்டங்களையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் நீரின் முக்கியத்துவத்தினையும், நீர் மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
நீர் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்கள்
நீர் மாசடைவதால் மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றன.
மாசடைந்த நீரானது குடிப்பதற்கும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும், ஏனைய மனித தேவைகளுக்கான பயன்பாட்டிற்கும் பயன்படாமல் போகின்றது.
நீர் நிலைகள் மாசடைவதன் மூலம் உலகில் 25 சதவீதமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.
மாசினை ஏற்படுத்தும் பொருட்கள் நிலத்தில் கலந்து நிலத்தடி நீரும் மாசடைகின்றது. இதனால் எதிர்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரியளவில் ஏற்படலாம்.
மாசடைந்த நீரினைப் பருகுவதால் வாந்திபேதி, வயிற்றோட்டம், தோல் வியாதிகள் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகின்றது.
Read More: மழைநீர் சேகரிப்பின் பயன்கள்