இறந்த முன்னோர்களுக்காக நாம் ஆற்றும் பணிகளில் தர்ப்பணமும் ஒன்றாகும். தர்ப்பணம் செய்தலானது இந்துக்களாகப் பிறந்த ஒவ்வொருவரின் இன்றியமையாத புண்ணிய கடமையாகவும் காணப்படுகிறது.
Table of Contents
தர்ப்பணம் என்றால் என்ன
தர்ப்பணம் என்பது வருடத்தில் எல்லா அமாவாசை நாட்களிலும் நதிக்கரையோரங்களில் முறையான தர்ப்பண மந்திரங்களை உச்சரித்து எள்ளும், நீரும் வார்த்து பித்ருக்களை திருப்தி செய்வது ஆகும்.
அதாவது தர்ப்பணம் என்றால் பித்ருக்களை ‘திருப்தி செய்வது’ என்றும் அர்த்தம் கொள்ளப்படும்.
தர்ப்பணத்தின் வகைகள்
தர்ப்பணம் ஐந்து வகைப்படும். அவையாவன,
- பிரஹ்ம யக்ஞம் தர்ப்பணம்
- ஷண்ணவதி தர்ப்பணம்
- க்ரஹண தர்ப்பணம்
- பரேஹணி தர்ப்பணம்
- குண்ட குழி தர்ப்பணம்
தர்ப்பணம் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்
தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில்
- மன்வாதி நாட்கள் – 14
- யுகாதி நாட்கள் – 4
- மாதப்பிறப்பு நாட்கள் – 12
- அமாவாசை – 12
- மகாளய பட்சம் – 16
- வ்யதீபாதம் – 12
- வைத்ருதி – 12
- அஷ்டகா – 4
- அன்வஷ்டகா – 4
- பூர்வேத்யு நாட்கள் – 4
இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.
மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
Read more: இறந்தவர்களை வழிபடும் முறை