சமூக நல்லிணக்கம் கட்டுரை

Samuga Nallinakkam Katturai In Tamil

இந்த பதிவில் “சமூக நல்லிணக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டுமாக இருந்தால் சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் இருக்க வேண்டும்.

சமூக நல்லிணக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்
  3. வெற்றி தரும் நல்லிணக்கம்
  4. சமூக நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்
  5. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிகள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியத் திருநாட்டில் பல பண்பாட்டு சமூகங்கள் வாழ்கின்றன. இவை சமூக ஒற்றுமையுடன் வாழும் போது தான் நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் வளரும். இன்றைய சமுதாயத்திற்கு சமூக நல்லிணக்கம் மிகமிக அவசியமானதாகும்.

நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களோடும்⸴ நம்முடன் தொடர்பில் இருப்பவர்களேடும் என்றும் இன⸴ மத⸴ ஜாதி⸴ நிற⸴ மொழி வேறுபாடுகளைப் பார்க்க கூடாது. எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசிப் பழக வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் வளரும்.

சமூக நல்லிணக்கம் வளர்ந்தால் தான் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ முடியும். நாட்டில் சமாதானமும் நிலைநாட்டப்படும். சமூக நல்லிணக்கம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்

சமூகத்தில் சமாதானமும்⸴ ஒற்றுமையும் நிலவுவதற்கு சமூக நல்லிணக்கம் முதன்மையானதும்⸴ முக்கியமானதும் ஆகும். சமூகங்கள் இடையே புரிந்துணர்வு⸴ சகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்த சமூக நல்லிணக்கம் முக்கியமானதாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு சமூக நல்லிணக்கம் முக்கியமானதாகும். ஒவ்வொரு சமூகத்தினரும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் சமூக நல்லிணக்கம் முக்கியமான ஒன்றாகும்.

மத மொழி சாதி இன வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் இந்திய நாட்டு மக்கள் என வாழும் போது தான் நாடு வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்.

வெற்றி தரும் நல்லிணக்கம்

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர்ˮ இதற்கிணங்க சமூகத்தினர் எவ்வித வேறுபாடுகளுமின்றி நல்ல நோக்கத்துடன் பழகும் போது சமூகத்தில் சமாதானமும் மகிழ்வும் உண்டாகும்.

ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு உறுதுணையான வாழ்வுக்கு சமூக நல்லிணக்கம் துணைபுரியும். சண்டைகள்⸴ சச்சரவுகள் இன்றி ஆரோக்கியமான சமூகச் சூழலுக்கும்⸴ வெற்றிக்கும் சமூக நல்லிணக்கம் முதன்மையாகின்றது.

சமூக நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்

இந்திய தேசமானது இனம் மதம் மொழி சாதி அடிப்படையில் சமூகங்களை கொண்டு காணப்படுவதால் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பல சவால்கள் எழுந்துள்ளன.

பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள்⸴ கலாச்சாரம்⸴ உடை⸴ மொழி⸴ வாழ்க்கைச் சூழல் இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதால் மாநிலங்களுக்கு இடையேயும்⸴ மாநிலத்துக்குள்ளேயும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

வளப் பற்றாக்குறை⸴ வேலையின்மைப் பிரச்சனைகளால் மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சவாலாகிறது.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிகள்

சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப் பாடசாலைகள் அல்லது பள்ளிகள் மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மாணவர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டை ஆளப்போகும் தலைவர்களாவர். எனவே இவர்களுக்கு சமூக நல்லிணக்கம் பற்றிய விழிப்புணர்வையும்⸴ சமூக ஒற்றுமையையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

விட்டுக்கொடுப்பு⸴ சகிப்புத்தன்மையைச் சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கூறி வளர்க்க வேண்டும். எல்லோரும் இந்திய நாட்டுப் பிரஜைகள் என்ற எண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

பிற மத⸴ மொழி⸴ கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கும்⸴ பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சமூக நல்லிணக்கம்⸴ அதன் அவசியம்⸴ முக்கியத்துவம்⸴ அதன் தேவைப்பாடு போன்றவற்றில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை

யாதும் ஊரே யாவரும் கேளிர்ˮ என்பதற்கு இணங்க அனைத்து ஊரும் அனைத்து மக்களும் நமது மக்களே என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூகத்தின் அமைதிக்கும் இந்திய தேசத்தின் நலனிற்கும் சமூக நல்லிணக்கம் இன்றியமையாதது என்பதை உணர்ந்து ஒரு தாய்ப் பிள்ளைகளாய் ஒற்றுமையாய் வாழும் மனப்பான்மையை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தெடுக்க வேண்டும்.

You May Also Like :

தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை

ஒற்றுமையே பலம் கட்டுரை