கடையேழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள் பெயர்கள்

தமிழில் சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடலான சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.

பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரே கடையேழு வள்ளல்கள் ஆவர். இவர்களின் கொடைமட செயல்களே இவர்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் வள்ளல்கள் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. கடையெழு வள்ளல்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

கடையெழு வள்ளல்கள் பெயர்கள்

  1. பேகன்
  2. பாரி
  3. காரி
  4. ஆய்
  5. அதியமான்
  6. நள்ளி
  7. ஓரி

கடையெழு வள்ளல்கள் சிறப்புகள்

பேகன்மயிலுக்கு போர்வை கொடுத்தான்.
பாரிமுல்லைக்குத் தேர் கொடுத்தான்.
காரிஇரவலார்க்கு குதிரை கொடுத்தான்.
ஆய்தன்னிடம் உதவி வேண்டி வந்தவர்களுக்கு ஊர்கள் கொடுத்தான்.
அதியமான்தனக்குக் கிடைத்த ஒரு அரியவகை (மூப்பு ஏற்படாத) நெல்லிக்கனியை புலவர்க்கு கொடுத்தான்.
நள்ளிதன்னிடம் பொருள் கேட்டு வருபவர்கள் இனி யாரிடமும் கேட்க தேவை ஏற்படாத அளவில் இல்லறத்திற்கு பொருள் கொடுத்தான்.
ஓரிகூத்தார்க்கு நாடு கொடுத்தான்.

பேகன்

பேகனே பொதினி மலைக்குத் தலைவன் ஆவான். பேகன் சிறந்த கொடையாளி. புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல்.

பேகன் மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமேகங்களைக் கண்டு மயில் ஆடிக்கொண்டிருந்தது. மயில் குளிரால் நடுங்குகிறது என எண்ணி போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன். இதனால் மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்கப்பட்டான்.

பாரி

கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்த வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். பாரி பறம்புநாடு என்பது முந்நூறு (300) ஊர்களைக் கொண்ட பகுதி ஆகும்.

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே கொடுத்தான்.

காரி

காரியின் முழுப் பெயர் “மலையமான் திருமுடிக் காரி” ஆகும். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு “மலாடு” பகுதியை ஆட்சி புரிந்தவர்.

பொருள் கொடுத்துத்து துயர் நீக்குதல் ஒரு வகை, நல்ல சொற்களால் துயர் நீக்குதல் இரண்டாவது வகை ஆகும். துன்பத்துடன் வாடிவரும் கலைஞர்களுக்கு வலிமைமிக்க குதிரையும் நல்ல சொற்களும் வழங்கியதால் வள்ளல் என அழைக்கப்படுகிறார் காரி.

ஆய்

மிகச் சிறப்பு வாய்ந்த மலைதான், தமிழ் வளர்த்த பொதியமலை. இம்மலைப் பகுதியை ஆட்சி செய்த மன்னன் ஆய். ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.

வேந்தனாகிய தான் மட்டும் சமதளப்பரப்பில் வாழ்ந்தால் போதாது தன்னுடைய மக்களும் வாழ வேண்டும் என்று எண்ணி, அரண்மனையைச் சுற்றி ஒரு ஊரையும் உருவாக்கினான். அவ்வாறு உருவாக்கிய ஊர்தான் ஆய்க்குடி ஆகும்.

எவருக்கும் கிடைத்தற்கரிய நீல நாகத்தின் ஆடையை குற்றாலத்தில் உள்ள தென்முகக்கடவுள் சிலை ஆடை இல்லாமளிருப்பதைக் கண்டு அந்த சிலைக்கு போர்த்தி மகிழ்ந்த கொடை வள்ளல் ஆவான்.

அதியமான்

சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் ஆவர். இவர் தன் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை போரிலேயே கழித்தவர்.

பூஞ்சாரல் மலைப் பகுதியில் பழுத்திருந்த நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஒளவையாரின் சேவை கருதி அவருக்கு ஈந்தான்.

ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் குறிப்பிடப்படுகிறான்.

நள்ளி

நள்ளி என்பவரும் கடையெழு வள்ளல்களின் வரிசையில் ஒருவராக திகழ்கின்றார். கண்டீரக் கோப்பெருநள்ளி, கண்டிற்கோப் பெருநற்கிள்ளி, கண்டிரக்கோன், கண்டிரக்கோ, நள்ளி எனவும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் “இயல்வது கரவேல்” என்பதற்கு இணங்கத் தன்னை விரும்பி வந்தவர்கட்கெல்லாம் இல்லறத்தை இனிது நடத்தப் பொருள்களை ஈந்து மகிழ்ந்தவர்.

ஓரி

ஓரி சிறந்த கொடை வள்ளல் மட்டுமன்றி சிறந்த வில்லாளியுமாவான். ஓரியிடம் வரும் இசைவாணர்களுக்கு யானைகளைப் பரிசாக அளித்தான்.

பொற்பூ முதலிய பிற அணிகலன்களையும் அளித்தான். வறுமையில் வாடிய பாணர்களுக்கு விருந்துணவு அளித்து அவர்களது பசியையும் போக்கிய வள்ளலாவான்.

You May Also Like :
ஐவகை நிலங்கள்
வாசிப்பின் நன்மைகள்