மொழியியல் உருவத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பது ஒரு வாக்கியத்தின் அமைப்பை குறித்து நிற்கிறது. இவை வாக்கியம் ஒன்றின் இன்றியமையாத பகுதிகளாக காணப்படுகிறது.
எழுவாயானது வாக்கியத்தின் முதலாவது பகுதியாகவும், பயனிலையானது வாக்கியத்தின் இரண்டாவது பகுதியாகவும், செயப்படுபொருளானது வாக்கியத்தின் மூன்றாவது பகுதியாகவும் அமையும்.
Table of Contents
எழுவாய் என்றால் என்ன
ஓர் வாக்கியத்தின் முதலாவது பகுதியாக அமைவது எழுவாய் ஆகும். ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்லின் மீது யார்? எது? எவை? என வினாக்களை தொடுக்கும் போது கிடைக்கும் பதில் எழுவாய் எனப்படும்.
இது எழு+ வாய் = எழுவாய் எனப்படும். இதன் விளக்கம் யாதெனில்,
- ஒரு சொற்றொடர் அமைய வாய்(தொடக்கம்) போன்று அமைவதனால் எழுவாய் எனப்பட்டது.
- பெயரின் பொருளை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை ஆகும். ஒரு சொற்றொடரில் முதலில் நிற்கும் எழுவாயான பெயர் எந்தவித வேறுபாடும் அடையாது இயல்பாக அமைவதனால் இது “முதலாம் வேற்றுமை” எனவும் அழைக்கப்படுகிறது.
எழுவாய் எடுத்துக்காட்டு
கந்தன் விழுந்தான் – இதில் யார் விழுந்தான்? என்று வினவுகின்ற போது, எமக்கு விடையாக கிடைப்பது “கந்தன்”. ஆகவே, இதில் கந்தன் என்பது எழுவாய் ஆகும்.
பறவைகள் பறந்தன – இதில் எவை பறந்தன? என்று வினவுகின்ற போது, எமக்கு விடையாக கிடைப்பது “பறவைகள்”. ஆகவே, இதில் பறவைகள் என்பது எழுவாய் ஆகும்.
பூனை பால் குடித்தது – இதில் எது பால் குடித்தது? என்று வினவுகின்ற போது, எமக்கு விடையாக கிடைப்பது “பூனை”. ஆகவே, இதில் பூனை என்பது எழுவாய் ஆகும்.
தோன்றா எழுவாய் என்றால் என்ன
வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாக தோன்றாது காணப்படுமாயின், அது தோன்றாய் எழுவாய் என அழைக்கப்படும்.
தோன்றா எழுவாய் எடுத்துக்காட்டு
பழங்களை என்னிடம் தந்தான் – இங்கு யார் தந்தான்? என்று வினவுகின்றபோது, அவன் அல்லது ஒரு பெயர் பதிலாக வரும். இதுவே தோன்றாய் எழுவாய் எனப்படும்.
பயனிலை என்றால் என்ன
ஓர் எழுவாயிலிருந்து தோன்றும் வாக்கியத்தின் பயனின் நிலையைத் தீர்மானிக்கும் சொல்லைப் பயனிலை எனலாம். தமிழ் வாக்கிய அமைப்பின்படி இச்சொல் அநேகமாக வாக்கியத்தின் இறுதியிலேயே வருவதால் பயனிலை என்பது பொதுவாக வாக்கியத்தின் முடிவுச் சொல்லாகவே வருகிறது.
பயனிலை எடுத்துக்காட்டு
தம்பி அதிகாலை எழுந்தான் – இதில் “எழுந்தான்” என்பதே பயனிலை ஆகும். அதாவது “தம்பி அதிகாலை” என்பதில் எவ்வித பொருளும் இல்லை. எழுந்தான் எனும் வினைச்சொல் இவ்வாக்கியம் முற்றுபெறவும், பொருள் பெறவும் அடிப்படையாக அமைகிறது.
பழம் விழுந்தது – இதில் “விழுந்தது” என்பதே பயனிலை ஆகும்.
பசு புல் மேய்ந்தது – இதில் “மேய்ந்தது” என்பது பயனிலை ஆகும்.
செயப்படுபொருள் என்றால் என்ன
வினைமுதல் (எழுவாய்) செய்யும் தொழிலின் பயனை ஏற்பது எதுவோ அது செயப்படுபொருள் எனப்படும்.
ஒரு வாக்கியத்தில்,கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும். பயனிலையைக் கொண்டு, யாரை, எதை, எவற்றை என்ற கேள்விகளில் பொருத்தமான ஒன்றைக் கேட்டால் அதற்கு வரும் விடை செயப்படுபொருள் ஆகும்.
இது செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரே பொருளைத் தருகின்றன.
இரண்டாம் வேற்றுமையின் உருபு “ஐ” என்பது மட்டுமே. இதன் பொருள் தன்னை ஏற்ற பெயர்ப்பொருளை ஆக்கப்படு பொருளாகவும், அழிக்கப்படு பொருளாகவும், அடையப்படு பொருளாகவும் இவை போல்வன பிறவாகவும் வேற்றுமை செய்வதாகும்.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும். எனவே இது செயப்படுபொருள் வேற்றுமை எனவும் கூறப்படும்.
செயப்படுபொருள் எடுத்துக்காட்டு
சட்டையை தைத்தான் – இதில் எதை? என்ற வினாவால் வினவுகின்ற போது விடையாக கிடைப்பது “சட்டையை” என்பது ஆகும். இதுவே இவ்வாக்கியத்தில் சட்டை எனும் பெயர்ச்சொல் ஐ உருளை ஏற்று செயற்படுபொருளாக வந்துள்ளது. அத்துடன் இது உருவாக்கல் தொழிலை குறிக்கும் ஆக்கல் பொருளில் அமைந்துள்ளது.
அவன் வீட்டை இடித்தான் – இதில் வீட்டை என்பது செயப்படுபொருளாக அமைந்துள்ளது.
Read more: வினைமுற்று என்றால் என்ன