சொல் என்றால் என்ன

sol enral enna in tamil

மொழி ஒன்றின் வளர்ச்சிக்கு சொல் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. சொற்களை அடிப்படையாகக் கொண்டே பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. தமிழ்மொழி இலக்கணத்தின் அடிப்படையாக சொல் அமைகிறது.

சொல் என்றால் என்ன

தமிழ் மொழியில் சில எழுத்துக்கள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.

சொல் வகைகள்

இலக்கண அடிப்படையில் தமிழ் மொழியில் சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன,

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

பெயர்ச்சொல்

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொற்கள் பெயர்ச்சொல் எனப்படும். அதாவது ஐம்புலனக்கும் மனதிற்கும் புலப்படும் பொருட்களை குறிக்கும் சொல் ஆகும்.

இப்பெயர்ச்சொல்லானது ஆறு வகைப்படும். அவையாவன,

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. குணப்பெயர் (பண்புப்பெயர்)
  6. தொழிற்பெயர்

பொருட்பெயர்

பொருட்களின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.

பொருட்பெயர் எடுத்துக்காட்டு – பசு, புத்தகம்

இடப்பெயர்

இடங்களின் பெயரைக் குறிப்பது இடப்பெயர் ஆகும்.

இடப்பெயர் எடுத்துக்காட்டு -சென்னை, மதுரை

காலப்பெயர்

காலங்களின் பெயரைக் குறிப்பது காலப்பெயர் ஆகும்.

காலப்பெயர் எடுத்துக்காட்டு – மணி, நாள், தை

சினைப்பெயர்

சினனகளின் பெயரை குறிப்பது சினைப்பெயராகும்.

சினைப்பெயர் எடுத்துக்காட்டு – தலை, கண்

பண்புப்பெயர்

பண்புகளின் பெயரை குறிப்பது பண்புப் பெயராகும்.

பண்புப்பெயர் எடுத்துக்காட்டு – இனிமை, நீளம்

தொழிற்பெயர்

தொழில்களின் பெயரைக் குறிப்பது தொழிற்பெயராகும்.

தொழிற்பெயர் எடுத்துக்காட்டு – படித்தல், உண்ணல்

வினைச்சொல்

வினைச்சொல் என்பது பொருள் எனது செயலை உணர்த்தும் சொல்லாகும். இது வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருள் குறித்து நிற்கும் சொல்லாகும்.

வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர்.

வினைச்சொல் எடுத்துக்காட்டு

  • வந்தான்.
  • செல்கின்றான்.
  • நடப்பார்.
  • ஓடு.
  • பறந்தது.

இடைச்சொல்

இடைச்சொல் என்பது பெயரும், வினையும் போல தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதது. இது பெயரையும் வினையையும் சார்ந்து வருகின்ற சொல்லாகும். இது ஒன்றும் பலவமாக ஒரு சொல்லை சார்ந்து வருகின்றது.

இடைச்சொல் வகைகள்

இது ஒன்பது வகைப்படும்.

  • வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல், கண், கு
  • விகுதி உருபுகள் – ஆன், ஆள்
  • இடைநிலை உருபுகள் – ப், வ், ல்
  • சாரியை உருபுகள் – அன், அத்து
  • உவமை உருபுகள் – போல
  • தம்பொருள் உணர்த்துவன – அ(சுட்டு), ஆ(வினா)
  • ஒளிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன – ஓஓ, ஐயோ
  • செய்யுளில் இசை நிறைக்க வருவன – “ஏஎ இவளொருத்தி…”
  • அசைநிலையாய் வருவன – “மற்று என்னை ஆள்க”

உரிச்சொல்

உரிச்சொல் என்பது பொருளுக்கு உரிமை உடைய பண்பை உணர்த்தும் பெயராகும். பொருள்கள் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள் என இரு வகைப்படும். இவ்விரு வகை பொருள்களுக்கு உரிய பண்புகளாக குணப்பண்பு, தொழிற்பண்பு என இருவித பண்புகள் உண்டு.

உருபுகள்: சால, உறு, தவ, கடி

உரிச்சொல் எடுத்துக்காட்டு

  • அறிவு, அச்சம்: உயிர்பொருள்களின் குணப்பண்பு.
  • உண்ணல், நடத்தல்: உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்பு.
  • வண்ணம்: உயிரற்ற பொருள்களின் குணப்பண்பு.
  • தோன்றல்: உயிரெல்லாம் பொருள்களின் தொழிற்பண்பு.

சொற்களை இயல்பும் இடமும் நோக்கி மேலும் 4 வகையாக பிரிக்கலாம். அவையாவன,

  1. இயற்சொல்
  2. திரிசொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

இயற்சொல்

இயற்சொல் என்பது தமிழ் வழக்கில் படித்தவர்க்கும் படிக்காதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்று தொட்டு வழங்கி வரும் சொல்லாகும்.

இயற்சொல் எடுத்துக்காட்டு

  • மரம்
  • வந்தான்

திரிசொல்

திரிசொல் என்பது படித்தவர்கள் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் காணப்படும்.

திரிசொல் எடுத்துக்காட்டு

  • கிள்ளை, தந்தை, சுகம்: கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.
  • வாரணம்: யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.

திசைச்சொல்

திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தை குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.

திசைச்சொல் எடுத்துக்காட்டு

  • ஆசாமி
  • சாவி

வடசொல்

வடசொல் என்பது ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தாலும், சிறப்பு எழுத்தாலும் இவ்விரு மொழிகளுக்கும் உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது தமிழ் சொல்லுக்கு ஒப்பாக வட திசை மொழியான ஆரியத்தில் இருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாக காணப்படுகிறது.

வடசொல் எடுத்துக்காட்டு

  • காரணம், காரியம்  – பொது எழுத்தால் அமைந்தன.
  • போகி, சுத்தி – சிறப்பெழுத்தால் அமைந்தன.
  • கடினம், சலம் – இருவகை எழுத்தாலும் அமைந்தன.

Read more: வினைமுற்று என்றால் என்ன

பண்புத்தொகை என்றால் என்ன