எங்கள் ஊர் கட்டுரை

Engal Oor Katturai In Tamil

இந்த பதிவில் “எங்கள் ஊர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்த அந்த கிராமத்தை எனது ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் மிகுந்த பெருமையும் கர்வமும் அடைவேன்.

எங்கள் ஊர் கட்டுரை

உலகின் எப்பாகத்தில் எத்தனை ஆடம்பரங்களுடன் வசித்தாலும், சொந்த ஊரில் வசிக்கும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. சுற்றத்தார் சூழ, உற்றார் உறவினருடன் சேர்ந்த வாழும் வாழ்க்கைக்கு வேறு எதனையும் ஈடாகக் கூறிவிட முடியாது.

மனது முழுவதும் மகிழ்ச்சியுடன் கவலைகளற்று நான் வாழ்ந்த எனது சொந்த ஊரைப்பற்றி கூறப்போகின்றேன்.

தாய் தந்தையருடன் ஊரை விட்டு நகரத்திற்கு இடம்பெயர்ந்திருந்தாலும் அங்கு வாழ்ந்த இனிமையான நாட்கள் என் மனதில் பசுமரத்தாணி போல் அழியாமற் பதிந்துள்ளன. எனது சொந்த ஊர் மலைகளையும் மலைசார்ந்த இடங்களையும் கொண்ட இடத்தில் அமர்ந்திருந்தது.

மலை அடிவாரத்தில் அமைந்த அவ்வூரில் இயற்கை அழகு கொட்டிக் கிடந்தது. சலசலத்து ஓடும் ஆறுகளையும் சோவென்று விழும் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து இரசிப்பதற்கு வாழ்நாளே போதாது.

பார்ப்பதற்கு பச்சைப் பசேலென காட்சி தரும் வகையில் காணப்படும். மலைகளெங்கும் பயிரிடப்பட்டிருந்த தேயிலைச் செடிகளும், அவற்றினூடே உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த இறப்பர் மரங்களும் எனது ஊரை மிக அழகாக்கியிருந்தன.

நான் எனது ஊரை மிகவும் நேசித்தேன். காலையில் மலைகளிற்கு இடையேயிருந்து எழும் சூரியனை இரசிப்பதில் தொடங்கும் என் இனிய நாட்கள், மாலை வேளையில் மலைகளில் ஒளிந்து கொள்பவனை கண்டு களிப்பதில் நிறைவு பெறும்.

மண் மணம் மாறாத அந்த சூழலை நான் மிகவும் நேசித்தேன் திடீரென ஒருநாள் தாபற்கந்தோரில் வேலைபார்த்துக் கொண்டிருந்த என் பெற்றோர்களிற்கு இடமாற்ற உத்தரவு வந்தது.

மறுக்கும் நிலையன்றி நான் நேசித்த எனது ஊரை விட்டு நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அன்றிருந்து இன்று வரை கிராமத்தில் வசித்த அந்த அழகிய நாட்களை நினைத்து ஏங்கியவாறு வாழ்ந்து வருகின்றேன்.

எனது ஊர் கட்டுரை

வயல் வெளிகளையும், வாய்கால் வரம்புகளையும் உள்ளடக்கியதாக எழில் கொண்டு விளங்கியது அந்த கிராமம். இன்னும் நகரத்தின் சாயல் படியாத அந்த கிராமம், தூசி படிந்திடாத காற்றையும், சுத்தமான சூழலையும் கொண்டது.

இயற்கை வளங்கள் கொட்டிக்கிடந்த அந்த கிராமத்தை எனது ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் மிகுந்த பெருமையும் கர்வமும் அடைவேன். மிகப் பெரிய குளங்களையும் அணைக்கட்டுக்களையும் கொண்டு காணப்படுவதால் அது ஒரு விவசாய பூமியாக விளங்கியது.

அங்குள்ள மக்களின் பிரதான தொழில்களாக பயிர்ச்செய்கையும் கால்நடை வளர்ப்பும் காணப்பட்டது. தமது வயல்களிலும் தோட்டங்களிலும் விளைகின்றவற்றைக் கொண்டும் அவற்றை பகிர்ந்தும் வாழும் எளிமையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள்.

வைத்தியசாலை, பாடசாலை, சந்தை, பொது போக்குரத்து என அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்தும் எங்களது ஊரில் காணப்பட்டன.

எனக்கு பிடித்த நண்பர்களும் நான் நேசிக்கின்ற ஆசிரியர்களும் காணப்பட்டதால் அங்குள்ள பாடசாலையும் மிகவும் பிடித்திருந்தது. மாலை வேளைகளில் நண்பர்களுடன் பட்டம் விட்டு விளையாடுவதும், வயல் வரம்புகளில் ஓடியாடி திரிவதும் எனக்கு பிடித்த பொழுது போக்குகள்.

சலசலத்து ஓடும் ஆறுகளில் மாலை வேளைகள் மீன் பிடிப்பதற்காக தூண்டிலுடன் மனிதர்கள் ஒன்று கூடுவர். மீன்களை விற்பதும் வாங்குவதுமாக அந்த இடமே கலகலப்புடன் காணப்படும்.

இவ்வாறு அமைதியாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை மாறத் தொடங்கியது. எனது கல்வி திறமையை அதிகரிக்க வேண்டுமென எண்ணிய தந்தை என்னை நகரத்திலுள்ள ஒரு பள்ளில் சேர்த்து விட்டிருந்தார்.

என் விடுமுறை நாட்களில் ஊரிற்கு செல்வதும், பின்னர் விடுதிக்கு திரும்புவதுமாக வாழ்ந்து வருகின்றேன்.

You May Also Like :
காலம் பொன் போன்றது கட்டுரை
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை