இளைஞர் எழுச்சி நாள் கட்டுரை

Ilaignar Eluchi Naal Katturai In Tamil

இந்த பதிவில் “இளைஞர் எழுச்சி நாள் கட்டுரை” பதிவை காணலாம்.

மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் பெரும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட அப்துல்கலாம் ஐயாவின் பிறந்தநாள் அன்று இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவது சிறப்பு மிக்கதாகும்.

இளைஞர் எழுச்சி நாள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாழ்க்கை வரலாறு
  3. அப்துல்கலாமும் இளைஞர்களும்
  4. நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
  5. இளைஞர் எழுச்சி நாளின் சிறப்பு
  6. முன்னுரை

முன்னுரை

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாவர். இத்தகைய இளைஞர்கள் மீது பெரும் அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களேயாவர். இவர் ஓர் தலைசிறந்த விஞ்ஞானி⸴ தொழிநுட்ப வல்லுனர்⸴ மிகப் பெரிய பொருளாளர்⸴ 11வது குடியரசுத் தலைவர் ஆவார்.

இவரின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் நாளன்று இளைஞர் எழுச்சி நாளாகக் தமிழ்நாட்டு அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

வாழ்க்கை வரலாறு

1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்⸴ ஆஷியம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார். பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.

இவர் ஓர் இஸ்லாமிய ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவராவார். குடும்பச்சூழல் காரணமாகப் பள்ளி நேரம் போக மற்றைய நேரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்தார்.

1954-இல் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1960ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். 1986ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரும் விருதான “பத்மபூஷன்ˮ விருதைப் பெற்றார்.

11-வது குடியரசுத் தலைவராக 2002 ல் பதவியேற்றார். பதவி ஏற்பதற்கு முன்னர் “பாரத ரத்னாˮ விருது மத்திய அரசினால் இவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பல விருதுகளைப் பெற்ற ஏவுகணை நாயகன் ஆகிய அப்துல்கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அப்துல்கலாமும் இளைஞர்களும்

எளிமையான வாழ்வும் இனிமையான பேச்சும் கொண்ட டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவராவார். எதிர்கால இந்தியா இளைஞர் கையில் என்றார்.

“கனவு காணுங்கள் அந்தக் கனவை நனவாக்கப் பாடுபடுங்கள்ˮ எனும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்றச் செய்தவராவர். குடியரசுத் தலைவராக இருந்த போதும் அதன் பின்பும் அவரது சிந்தனை இளைஞர்களைப் பற்றியதாகவே இருந்தது.

2020இல் இந்தியா வல்லரசாகும் என்பதில் நம்பிக்கை கொண்ட அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களிடையே தன்னம்பிக்கை அவசியம் எனக் கருதினார்.

“வெற்றி பெற வேண்டும் என்றால் பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிˮ என இளைஞர்களுக்கு வெற்றியின் ரகசியத்தை போதித்தார்.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

இன்றைய இளைஞர்களின் கைகளில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

அறிவு⸴ ஆற்றல்⸴ அனுபவம்⸴ துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயற்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. சமுதாய உணர்வுடன் இளைஞர்கள் வளரும் போதுதான் வீடும்⸴ நாடும் நலம் பெறும்.

இளைஞர் எழுச்சி நாளின் சிறப்பு

மாணவர்களுடன் உரையாடுவதை தனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாளில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும். இந்நாளில் மாணவ⸴ மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கல்லூரி மாணவ⸴ மாணவிகளுக்கு அறிவியல் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி அறிவியல் கண்காட்சிகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் இடம்பெறும்.

முடிவுரை

எதிர்காலம் சிறக்கக் கனவு காண வேண்டும் எனக் கூறிய கற்பக விருட்சம் ஆவார். வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள்⸴ வாழ்க்கை என்பது கடமை நிறைவேற்றுங்கள்⸴ வாழ்க்கை என்பது ஒரு இலட்சியம் சாதியுங்கள்⸴ வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள் என அவர் கூறிய பொன்மொழிகளுக்கிணங்க வாழ்க்கையை ஒவ்வொரு இளைஞர்களும் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்போது தான் இந்திய நாடு வளம் பெறும்.

You May Also Like:

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு