இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

Indraya Samuthayathil Pengalin Pangu Katturai

இந்த பதிவில் “இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு காலத்தில் பல அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் சந்தித்த பெண்கள் இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மனித வாழ்வில் பெண்களின் முக்கியத்துவம்
  3. தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு
  4. குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு
  5. பெண்கள் சமுதாயத்தின் கண்கள்
  6. முடிவுரை

முன்னுரை

“மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டும்ˮ இவ்வரிகள் பெண் பிறப்பின் உன்னதத் தன்மையை சிறப்பிப்பதாகும். இன்றைய உலகில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு பெண்களின் பங்களிப்பு அனைத்துத் துறைகளிலுமுள்ளது.

பெண்கள் இன்று பல இடங்களில் முன்னேற்றகரமான செயற்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆணின் தயவில் வாழ்ந்த பெண்களின் நிலைமாறி இன்று பெண்ணின் துணையின்றி ஆணால் தனித்தியங்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

சமுதாயத்தில் ஆணுக்கு சமமாகப் பெண்கள் வாழக் கற்றுக் கொண்டுள்ளனர். உயிர்களை பெற்றெடுத்து பாதுகாப்பதில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இக்கட்டுரையில் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு பற்றி காண்போம்.

மனித வாழ்வில் பெண்களின் முக்கியத்துவம்

உயிர்களை உலகிற்கு கொண்டு வரும் செயலை பெண்கள் செய்கின்றமை போற்றுதற்குரியதாகும். நமது சமுதாயமானது ஆரம்ப காலத்தில் பெண்களைத் தெய்வமாக போற்றி வழிபட்டனர்.

இன்றும் பெண் தெய்வங்கள் சக்தி வாய்ந்தவையாக போற்றப்படுகின்றன. ஒரு மனிதன் சமூகத்தில் நற்பிரஜையாக வாழ்வதில் குடும்பமே அடித்தளம் வகின்றது. அதிலும் குடும்பத் தலைவி முதன்மை வகிக்கின்றாள்.

ஒரு குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து பெற்று அதனை சீராட்டி வளர்ப்பவள் தாய். இந்த உறவிற்கு இணையானது எதுவுமில்லை. தாய் இல்லாத குழந்தையின் வாழ்வானது சமுதாயத்தில் பாதுகாப்பற்றதாகிறது.

சமூகத்தில் பிள்ளைகள் எவ்வாறு வாழ வேண்டும் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக் கொடுத்து வளர்ப்பது பெண்ணே.

தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு

பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை எனக் கூறும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் சாதனை படைத்துள்ளனர். ஆண்களை விட பெண்களே கல்வி உட்பட பல துறைகளிலும் சாதித்துள்ளனர்.

விண்வெளி உட்பட சாதாரண தொழில் வரை பெண்கள் கடமையாற்றுகின்றனர். பல அடக்கு முறைகளுக்குட்பட்டு வாழ்ந்த பெண்கள் இன்று விடுதலை பெற்று கம்பீரமாகவும்⸴ கௌரவமாகவும் தடைகளைத் தாண்டி சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

பல குடும்பங்களில் குடும்பத் தலைவியாக தனியாகத் தொழில் செய்து பிள்ளைகளுக்கு கல்வி அறிவினை கொடுத்து சிறந்த பிரஜைகளாக அவர்களை உருவாக்கி வருகின்றனர். பல குடும்பங்களில் பெண் பிள்ளைகளின் உழைப்பே பயன்படுவதாகவுள்ளது.

குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு

“இல்லாள் இல்லாத இல்லம் பாழ்ˮ என்ற பழமொழிக்கிணங்க பெண்களின் பங்களிப்பு அதிகளவு குடும்பத்திற்கே உரித்தாகின்றது. தன் குடும்பத்திற்காக தன்னையே மெழுகாய் உருகி வாழ்கின்றவள் பெண்.

கணவன்⸴ தாய்⸴ தந்தை⸴ பிள்ளைகள் என எல்லா உறவுகளையும் கவனித்துக் கொள்கிறாள். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது⸴ சமையல் செய்வது⸴ அவர்களைக் கவனித்துக் கொள்வதென அனைத்துக் கடமைகளையும் தவறாமல் செய்கின்றாள்.

குடும்ப முன்னேற்றங்களுக்கு காரணமானவள். குடும்பம் சீர் குறையாமல் ஒன்றிணைத்து வைப்பதில் பெண்ணின் பங்கே முதன்மையானது.

பெண்கள் சமுதாயத்தின் கண்கள்

மனிதனை வழிநடத்திச் செல்வது கண்கள் நாட்டை ஒளி பெறச் செய்வது பெண்கள். இதனை யாரும் மறுக்கவோ⸴ மறைக்கவோ இயலாது.

பாரதி வகுத்த புதுமைப் பெண்ணின் தாற்பரியத்தினால் பெண் தங்கள் தடைகளைக் கடந்து முன்னேறியுள்ளனர்.

மருத்துவ நிலையங்களில் தாதிமார் மற்றும்⸴ ஆசிரியர் தொழில்⸴ குழந்தைகள் வளர்ப்பு மையங்களில் பெண்களுக்கு முதலிடம் தருகிறார்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக மருத்துவராக⸴ பொறியியலாளராக⸴ பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்றனர்.

முடிவுரை

பெண்ணின் உடலமைப்பு இன்னொரு உயிர் காக்க உதவும் வகையில் அமைந்துள்ளமை பெண்ணுக்கு இறைவன் கொடுத்த வரமாகும். இத்தகைய வரத்தைப் பெற்ற பெண்கள் போற்றுதற்குரியவர்களாவர்.

சமூக முன்னேற்றப் பாதையில் பெண்களின் பங்கு முதன்மையானது. நமது பாரதம் வளம் பெறவும் சமுதாயம் முன்னேறவும் பெண்களின் பங்களிப்பு அவசியமாகின்றது.

You May Also Like:

மது ஒழிப்பு கட்டுரை

தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்