வீட்டோ அதிகாரம் எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.
வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்
- சீனா
- பிரான்ஸ்
- ரஷ்யா
- ஐக்கிய இராச்சியம்
- ஐக்கிய அமெரிக்கா
Table of Contents
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன விளக்கம்
பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெறுவதற்கு இரண்டு கட்டங்களைத் தாண்ட வேண்டும். அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக குறைந்தபட்சம் 9 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும்.
அதேசமயத்தில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இந்த 5 நாடுகளுக்கும் வாக்குரிமையுடன் சேர்த்து வீட்டோ எனப்படும் எதிர்வாக்கு அதிகாரமும் உண்டு.
5 நாடுகளில் ஒரு நாடு தீர்மானத்தினை எதிர்த்து வாக்களித்தாலும் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்துவிடும். மற்றவர்கள் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில் தனக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி அதைத் தடை செய்வதே வீட்டோ அதிகாரமாகும்.
ஒருவேளை ஒரு தீர்மானத்தில் நிரந்தர நாடு முழுமையாக உடன்பாடு இல்லாமல் போகலாம். அப்போது ஆதரித்து வாக்களிக்காமலோ அல்லது எதிர்த்து வாக்களிக்காமலோ நடுநிலை வகிக்கலாம்.
இதன் மூலம் அத்தீர்மானம் நிறைவேறுவதற்கு வழி செய்யலாம். தற்காலிக உறுப்பு நாடுகளுக்கு வாக்களிக்கும் அதிகாரம் மட்டுமேயுண்டு. வீட்டோ அதிகாரம் கிடையாது.
ஐ நா சபையும் பாதுகாப்பும்
இரண்டாம் உலகப்போர் நிறைவடையக் கூடிய சூழலில் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலக நாடுகள் அனைத்தையும் இணைத்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது.
அப்போது உலகின் வல்லமை பொருந்திய தேசங்களாக இருந்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகியவையே ஐ.நா சபையின் உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்தன.
ஐ.நா சபையில் 6 துணை அமைப்புக்கள் உள்ளன. அவற்றில் அதிகாரம் பொருந்தியது பாதுகாப்புச் சபை ஆகும்.
ஐ.நா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய 5 நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்த உறுப்பு நாடுகளாக்கப்பட்டன. இவை தவிர 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன.
சர்வதேச நாடுகளின் பாதுகாப்பையும், அமைதியையும் உறுதிசெய்வது பாதுகாப்பு சபையாகும். ஐ.நா சபையில் புது உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வது, நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது, பிரச்சினைகளுக்குரிய பகுதிகளுக்கு அமைதிகாக்கும் படைகளை அனுப்புவது, அவற்றுக்கான செலவுகளைக் கவனிப்பது, ஐ.நா பொதுச் செயலாளரை நியமிப்பது என்று சர்வ அதிகாரம் கொண்ட சபையாக பாதுகாப்புச் சபை விளங்குகின்றது.
வீட்டோ அதிகாரத்தை அதிகம் பயன்படுத்திய நாடு
இதுவரை மொத்தமாக 294 முறை வீட்டோ அதிகாரத்தை நாடுகள் பயன்படுத்தியுள்ளன. இதில் வீட்டோ அதிகாரத்தை அதிகம் பயன்படுத்திய நாடு ரஷ்யா ஆகும். ரஷ்யா 146 முறை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு அடுத்து வீட்டோவை அதிகம் பயன்படுத்திய நாடு அமெரிக்கா ஆகும். அமெரிக்கா 82 முறையும், பிரிட்டன் 31 முறையும், சீனா 18 முறையும், பிரான்ஸ் 17 முறையும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.
பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றது.
You May Also Like : |
---|
பாரதியார் பற்றிய கட்டுரை |
பொது அறிவு வினா விடை |