அரசியல் என்றால் என்ன

arasiyal enral enna in tamil

மனித வாழ்க்கையும், அரசியலும் பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கையாக உள்ளது என்றால் அது மிகையல்ல. சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது.

ஒரு நாட்டில் சிறந்த அரசியல் நிகழும் போதுதான் அங்கு ஒழுங்கும் நிகழும். அரசியலானது பொருளாதாரம், சமூகம், மனித மேம்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அரசியல் நிலைத்தன்மையே நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையும். அரசியல் நிலைத்தன்மை உடைய நாடுகள்தான் முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கிறது.

பல வளங்கள் நிறைந்திருக்கும் போதும் அரசியல் நிலத்தன்மையற்ற நாடுகளை முதலீட்டாளர்கள் நாடுவதில்லை.

அரசியல் என்றால் என்ன

அரசியல் என்பதற்கு பல அறிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர்.

அந்த வகையில், சீலி எனும் அறிஞர் “அரசின் பல கூறுகளை ஆராய்வதே அரசியல்” எனக் கூறியுள்ளார்.

அல்பிரட் கிரேஸ் எனும் அறிஞர் “அரசாங்க தீர்மானங்களை எடுக்கும் தாவனங்களை சுற்றி இடம்பெறும் நிகழ்வுகளை கற்பதே அரசியல்” என்கின்றார்.

மேலும் அரசு, அரச நிர்வாகம், ஆட்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே அரசியல் ஆகும்.

எனவே பொதுவாக நோக்கில் அரசியல் என்பது தேசத்தை ஆட்சி புரிதல் என்பதாகும்.

அரசியல் சமுதாயம்

அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பது சிலப்பதிகாரத்தின் வாக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலன்கருதி நாட்டை ஆள வேண்டும்.

அரசியல் சமூகம் நிலையில்லாதது. நாடோடி வாழ்க்கையினை மனித சமுதாயம் விரும்புவதில்லை. எனவே மனிதன் சமூகமாக வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும்.

எல்லா மக்களும் சமுதாயமாகி, பரஸ்பரம் நன்மை, தீமைகளை பகிர்ந்து கொண்டு ஒன்றாகச் சேர்ந்து வாழும் போது பரஸ்பரம் முரண்பாடு ஏற்படுவது இயற்கையே. சமுதாயத்தின் ஏனைய அங்கத்தவர்களின் நலன்களுடன் முரண்படாத வகையில் தனது நலன்களை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை தேவையாகவுள்ளது.

பொது விதிகளை மீறுவது, சமூக ஒழுங்குகளைக் குழப்புவதாக அமைவதுடன், இதன் பலனாக சமுதாயத்திற்கு எதிரான சிந்தனைகளும் தோன்றி விடுகின்றன.

மனிதன் பொதுவிதிகளுக்கும் பரஸ்பரம் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தானாகவே பழக்கப்பட வேண்டும்.

சமூகத்தினை நெறிப்படுத்தவும், விதிகளை உருவாக்கவும் விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்கவும் சில முகவர்கள் தேவைப்பட்டார்கள். இதுவே அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயம் உருவாக்கப்படுவதற்கு காரணமாகியது.

அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானத்தின் தன்மை

அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் இரு வேறு கருத்துக்களாகும். அரசியல் என்பது பேச்சு வழக்காக உள்ளது. அதனைப் பொருள் மரபில் வரைவிலக்கணப்படுத்தும் போது அரசியல் விஞ்ஞானம் வேறு அரசியல் வேறாகும்.

அரசியல் என்பது குறுகிய விடயமாகும். அரசியல் விஞ்ஞானம் என்பது நீண்ட பரப்பைக் கொண்டது. அரசியல் என்பது கட்சிகள், குழுக்கள், அரசியல்வாதிகளினுடைய நடத்தைகள் போன்றவற்றை உள்டக்கியதாகும்.

அரசியல் விஞ்ஞானம் என்பது எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், தத்துவசிந்தனைகள், தத்துவவியலாளர்களது கருத்துக்கள் போன்றவற்றை ஆராய்வது அரசியல் விஞ்ஞானமாகும்.

அரசியல் என்பது அரசியல் செய்தலாகும். அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியல் கற்றலாகும்.

அரசியல் என்பது பிரயோக அரசியலாகும். அதாவது அதிகாரப் பிரயோகத்தை மேற்கொண்டு அரசியலில் ஈடுபடுதலாகும். அரசியல் விஞ்ஞானம் என்பது கோட்பாட்டு அரசியலாகும்.

அதிகாரம் மற்றும் அதிகாரப் பிரயோகம் ஆகிய இரண்டுமே அரசியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் உண்டு.

Read more: இறையாண்மை என்றால் என்ன

அரசியலமைப்பு என்றால் என்ன