இந்த பதிவில் “விடுதலை போரில் பகத்சிங் கட்டுரை” பதிவை காணலாம்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து துணிந்து நின்ற இவரின் வீரம் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Table of Contents
விடுதலை போரில் பகத்சிங் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளமைக் காலம்
- விடுதலை வேட்கை
- இவரின் சபதம்
- விடுதலை போரில் இவரின் பங்கு
- நீதிமன்ற உரை
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் மாவீரன் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் தான் மாவீரர் “பகத்சிங்” இந்தியாவின் பல இளைஞர்கள் தமது முன்னோடியாக இவரை தான் பார்க்கின்றனர். உண்மையான வீரனாக வாழ்ந்து நாட்டிற்காக போராடி தனது உயிரை அர்ப்பணித்தவர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியா தத்தளித்து கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மாவீரனை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமைக் காலம்
பகத் சிங் அவர்கள் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள “பங்கா” என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை “சர்தார் கிசன் சிங்” மற்றும் இவருடைய தாய் “வித்யாவதி” ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்.
பகத்சிங் இவருடைய குடும்பம் விடுதலை போராட்ட வீரர்களை கொண்ட குடும்பம் என்பதனால் இளம் வயதிலேயே நாட்டுப்பற்று நிறைந்தவராக விளங்கினார். இவரது குடும்பத்தில் பலர் இராணுவத்தில் பணியாற்றினர்.
இளம் பருவத்தில் இருந்தே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களை படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன்னையும் புரட்சியாளராக மாற்றி கொண்டார்.
விடுதலை வேட்கை
இவர் தனது 12 வயதில் இந்திய விடுதலையே எனது இலட்சியம் என முழங்கினார். தன்னுடைய கடைசி மூச்சின் போது தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர்.
துப்பாக்கி குண்டுகள் தாக்கி இறக்கவும் தான் தயார் என்று கூறியவர். தனது உயிர் போகும் இறுதி நிமிடத்தில் கூட இந்தியாவின் விடுதலையை பற்றியே சிந்தித்தவர்.
இவர் தனது 13 ஆவது வயதில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். தனது 14 ஆவது வயதில் “வந்தே மாதரம்” என எழுதிய சுவரொட்டிகளை ஒட்டி தனது போராட்டத்தை துவங்கினார்.
தனது 19 ஆவது வயதில் இந்தியாவின் தேசிய இளைஞர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல முதலாளிகளிடம் இருந்து உழைக்கும் மக்கள் விடுபடவேண்டும் என்ற கொள்கையும் உடையவராக இருந்தார்.
இவரின் சபதம்
1919 ஆம் ஆண்டு இந்தியாவில் “ஜாலியன் வாலாபாக்” என்ற இடத்தில் மக்கள் மீது ஆங்கில அரசு மேற்கொண்ட தாக்குதலால் அப்பாவி மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் நாடே கொதித்தது.
இந்த கொடூரமான படுகொலை பகத்சிங் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்திய மக்களின் இரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து “இந்திய விடுதலையே என் இலட்சியம்” என்று சபதமெடுத்து கொண்டார்.
விடுதலைபோரில் இவரின் பங்கு
1926 ஆம் ஆண்டு பகத்சிங் “நவ்ஜவான் பாரத் சபா” என்ற அமைப்பை நிறுவினார் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் பார்வை இந்த அமைப்பின் மீது திரும்பியது. இந்த சங்கத்தின் மூலம் பல இளைஞர்களை திரட்டி பல போராட்டங்களை மேற்கொண்டார்.
இதனை கண்ட ஆங்கில அரசு இவர் மீது பொய்யான குண்டுவெடிப்பு குற்றசாட்டினை வைத்து இவரை கைது செய்து 5 வாரங்கள் சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் எமது இலட்சியம் “சோசலீசம்” என்பதை வலியுறுத்தி “இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்” என்ற அமைப்பை டெல்லியில் துவங்கினார்.
இந்திய முதலாளிகளிடமிருந்து உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்று தரவேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.
நீதிமன்ற உரை
உணவை உற்பத்தி செய்யும் விவசாயி பசியோடு இருக்கின்றார், துணிநெய்து கொடுப்பவரின் குழந்தைகளோ துணியில்லாமல் தவிக்கின்றனர்.
இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் போல முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர்.
இந்த சூழ்நிலை வெகு காலம் நீடிக்காது “இந்த சமூகத்தை மாற்றும் எரிமலைகள் நாங்கள்” என்று இவர் முழக்கமிட்டார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிந்து நின்ற இவரின் வீரம் மெய்சிலிர்க்க வைத்தது.
முடிவுரை
“முடிவெடுத்த காதுகளில் எந்த முழக்கமும் விழாது” என்பதற்கேற்ப ஆங்கிலேய செவிகள் அவர் உரையை கண்டுகொள்ளவில்லை ஆனால் இந்திய இளைஞர்கள் இவர் முழக்கத்தினால் மேலும் உரமேறினர்.
“பகத்சிங்”ற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால் கோபமடைந்த ஆங்கில அரசு “சாண்டர்ஸ்” கொலை வழக்கை மீள தட்டி எடுத்து 1931 இல் இவரை தூக்கிலிட்டது. இன்றுவரை இவரது வீரமும் புகழும் மக்களால் நினைவு கூரப்படுகிறது.
You May Also Like :