விஜயதசமி என்றால் என்ன

vijayadashami enral enna in tamil

விஜயதசமி என்பது பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஒரு இந்து சமய விழாவாக காணப்படுகிறது.

இது தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஒரு அங்கமாகவும், வங்காளதேசத்தின் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி என்றால் என்ன

இந்து நாட்காட்டிகளின் படி புரட்டாதி மாதத்தின் அமாவாசை கழிந்து வரும் பத்தாம் நாள்கொண்டாடப்படும் விழா விஜயதசமி ஆகும். இது “தசரா” என்றும் அழைக்கப்படுகிறது.

விஜய் – என்றால் வெற்றி, தசமி – என்றால் பத்து இதனையே விஜய தசமி என கொண்டாடுகின்றனர். 9 நாட்கள் விரதமிருந்து பத்தாவது நாள் விழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது.

விஜயதசமி அன்றைய நிகழ்வு

குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இது வித்தியாரம்பம் என அழைக்கப்படுகிறது.

மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம். அத்துடன் விஜயதசமி நாளன்று சிவ விரதங்களுள்  ஒன்றான கேதார கௌரி விரதம் ஆரம்பிக்கப்படுகின்றது.

வித்தியாரம்பம்

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை ஆகும். குழந்தைகளின் கை பிடித்து பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது.

அதாவது, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

விஜயதசமி சிறப்பு

உலக புகழ் பெற்ற மைசூரு தசராபண்டிகையும் விஜயதசமி அன்று தான் கொண்டாடப்படுகின்றது. தேவியின் வெற்றியை கொண்டாடும் விழாவாகவே தசராபண்டிகை திகழ்கிறது.

மைசூரில் நடைபெறும் தசராபண்டிகை ரத ஊர்வலத்தை காண இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிளிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் கூடுவார்கள்.

விஜயதசமி வழிபாடு

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

துர்கா, பத்ரகாளி, அம்பா, ஜகதம்பா, அன்னபூரணி, சர்வமங்களா தேவி, பைரவி, சண்டி, லலிதாதேவி, பவானி, மூகாம்பிகா என சக்தியின் அனைத்து வடிவங்களும் நவராத்திரி நாட்களில் வழிபடப்படுவது சிறப்புக்குரிய விடயமாகும்.

தேவி ஆதிபராசக்தி ஒன்பது நாள் போற்றப்பட்ட பின், தசமியான பத்தாம் நாள் வெற்றி மங்கையாக, வீரலஷ்மியாக ஆராதிக்கப்படுகிறாள். அன்றைய தினமே ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகும்.

நவராத்திரியின் அனைத்து நாட்களில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் தேவியைப் போற்றி அனைத்து நன்மைகளையும் வளங்களையும் பெறலாம்.

குறிப்பாக தேவியைப் போற்றும் செளந்தர்யல ஹரி படிக்க வேண்டும். அந்த சுலோகங்களில் சிலவற்றைப் பொருள் அறிந்து விஜயதசமியான அன்று படித்தால் செளந்தர்யலஹரி சகல சித்திகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இராமாயணத்தில் விஜயதசமி

சீதையை தேடிச் சென்ற ராமர், சண்டி ஹோமம் செய்து அன்னை துர்காவின் அருளை பெற்று, ராவணனை இந்த விஜயதசமி நாளில் வதம் செய்தார் என்று கூறப்படுகின்றது.

துர்கா தேவியை மனமுருக பிரார்த்தித்து எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை.

மகாபாரதத்தில் விஜயதசமி

ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.

Read more: அஷ்டமி அன்று செய்ய கூடாதவை

கோகுலாஷ்டமி என்றால் என்ன