வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

vasippin mukkiyathuvam katturai

இந்த பதிவில் “வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை” பதிவை காணலாம்.

அனைவரும் சிறு வயதிலிருந்தே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகச்சிறந்த விடயமாகும்.

தேவையற்ற பொழுதுபோக்கு விடயங்களை தவிர்த்து சிறுவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாசிப்பின் சிறப்பு
  3. வாசிப்புத் தரும் அறிவு
  4. வாசிப்பினால் உயர்ந்தவர்கள்
  5. வாசிப்பும் இளம் சமுதாயமும்
  6. முடிவுரை

முன்னுரை

இந்த உலகத்தில் உயர்நிலையை அடைந்தவர்கள் அனைவரும் வாசிப்பினாலே உயர்ந்ததாக கூறுவர். வாசிப்பு ஒரு மனிதனிற்கு பூரண அறிவையும், அதிகபட்ச பொறுமையையும் அளிக்கின்றது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பழக்கமானது, நவீன காலத்தின் அதியுயர் தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்களினாலும், அதிகரித்த தொழில்நுட்ப பயன்பாட்டினாலும் மக்களிடையே அருகிவரும் நிலைமை காணப்படுகின்றது.

புதிய விடங்களைக் கற்று அறிவை வளர்த்துக் கொள்ளவும், பரந்துபட்ட அளவிலான உலக அறிவை பெற்றுக்கொள்ளவும் உறுதுணையாக அமையும் வாசிப்புப் பழக்கத்ததை தம் அன்றாட பழக்கமாக்கி கொள்வது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

வாசிப்பின் சிறப்பு

“தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தற்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கமைய நாம் எந்தளவிற்கு அறிவாய்ந்த நூல்களை ஆழமாகக் கற்கின்றோமோ அந்தளவிற்கு எம்மால் முழுமையான அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

வாசிப்புப் பழக்கமானது வெறுமனே நூலறிவை மட்டும் வழங்குவதில்லை. மாறாக சிந்தித்து செயற்படும் ஆற்றலையும், முழுமையான நிதானத்தையும் வழங்குகின்றது.

இதனையே “வாசிப்பினால் மனிதன் பூரணமடைகின்றான்” என்று குறிப்பிடுவர். வாசிப்பானது ஒரு மனிதனை முழுமையானவன் ஆக்குகின்றது.

வாசிப்புத் தரும் அறிவு

“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஒளவையாரின் வாக்கிற்கமைய ஒரு மனிதன் தன் ஆயுட்காலத்தில் எந்தளவிற்கு நல்லஅறிவாய்ந்த நூல்களை கற்றுத் தேறுகின்றானோ அந்தளவிற்கு அவனது அறிவாற்றல் அதிகரிக்கின்றது.

வாசிப்பானது வெறுமனே கல்வியறிவை மட்டும் வழங்காமல், எம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் போக்குகள் பற்றியும், நாம் வாழுகின்ற உலகம் பற்றிய பொதுவான அறிவையும் வழங்குகின்றது.

அதுமட்டுமின்றி நூல்களானவை உலகின் அனைத்து மூலை முடுக்குகளிற்கும் எம்மை அழைத்துச் செல்கின்றன. நாம் அறிந்திராத பல்வகைப்பட்ட மனிதர்களது உத்வேகம் தரக்கூடிய வார்த்தைகளை எமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

அதனைத் தவிர புத்தக வாசிப்பானது மிகச் சிறந்த பொழுது போக்காகவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சிறந்த நிவாரணியாகவும் அமைகின்றது. ஒரு மொழியை சரியாக அறிந்து கொள்வதற்கு அந்த மொழியில் எமுதப்பட்ட நூல்களை அதிகம் வாசிக்க வேண்டும்.

தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்களை அதிகமாக வாசிக்கும் பொழுது தமிழ் மொழியின் இலக்கியத்தை சிறப்பையும் தொன்மையையும் அறிய முடிவதோடு, தமிழை இலக்கணப்பிழையின்றி எழுதவும் முடியும்.

வாசிப்பானது அனைவருக்கும் எல்லையற்ற பயன்களை அள்ளி வழங்குகின்றது.

வாசிப்பால் உயர்ந்தவர்கள்

வாசிப்பானது மனிதர்களை மேன்மையுள்ளவர்களாக மாற்றுகின்றது. வாசிப்பால் உயர்ந்த அடத்தை அடைந்தவர்களிற்கு உதாரணமாக அப்துல்கலாம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றம் லெனின் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு எதுவென ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் விசாரித்தபோது சிறிதும் யோசிக்காமல் “புத்தகம்” என்று பதிலளித்தார்.

உலகப் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானியான ஆபிரகாம் லிங்கன் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர்.

சிறுவயது முதலே அவர் வாசித்த புத்தங்களே அவரிற்கு உலகைப் பற்றிய அறிவை வழங்கி அவரை உலகின் தலைசிறந்த மனிதராக மாற்றியது.

வாசிப்பும் இளம் சமுதாயமும்

இன்றைய இளம் தலைமுறையானது இணையத்திற்கு அடிமையான ஒரு சமுதாயமாகவே காணப்படுகின்றது.

இதனால் இளையவர்களிடத்தே வாசிப்பு பழக்கம் அற்று போகின்றது. உலகமயமாக்கலின் விளைவுகளும் இணையத்தில் காணப்படும் அதிகளவான பொழுதுபோக்கு அம்சங்களும் அவர்கள் அறிவினை மழுங்கடிக்கின்றன.

இணைய விளையாட்டுக்கள் சிறுவர்கள் மத்தியில் பிரபல்யமாகி அவர்கள் தம் பசி, தூக்கத்தையே மறந்து அதில் ஒன்றி விடுகின்றனர். இவற்றிலிருந்து அவர்களை விடுவிக்க சிறந்த வழி அவர்களிற்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதே.

வாசிப்புப் பழக்கத்தை சிறுவயது முதலே பழக்கப்படுத்திக் கொள்வது அதிக நன்மை பயக்கும். சிறுவர்களாக இருக்கும் போதே பிற பொழுதுபோக்கு சாதனங்களை வழங்குவதனைத் நிறுத்தி சிறுவர்களிற்குரிய புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி அவர்களை வாசிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

வளர்ந்தவர்கள் அதிகளவில் இணையத்தில் மூழ்காமல் நேரத்தை ஒதுக்கி வாசிப்பில் ஈடுபடவேண்டும்.

அவர்களின் தனிப்பட்ட இரசனைக்கேற்ப நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் போது நாளடைவில் அதுவே அவர்களின் தொடர் பழக்கமாகிவிடும்.

முடிவுரை

புத்தக வாசிப்பானது மனிதனை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகும். நல்ல நூல்களை சிறந்த நண்பர்கள் என குறிப்பிடுவர்.

மனிதரிற்கு நல்ல வழிகாட்டியாகவும், அறிவினை அள்ளித் தரும் ஆசானாகவும் விளங்கும் வாசிப்புப் பழக்கத்தை எமது அன்றாட கடமைகளில் ஒன்றாக மாற்றியமைப்பது எமக்கு நன்மை பயக்கும்.

சமூக வலையத்தளங்களின் பாவனையை தவிர்த்து நூல்களை நம் உற்ற நண்பர்களாக மாற்றி சிறந்து விளங்குவோமாக.

You May Also Like:

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

எனது கனவு நூலகம் கட்டுரை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கட்டுரை