நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைப்பதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும்.
ஒரு வாக்கியத்தில் எழுவாய் முதலிலும், ஒரு வாக்கியத்தில் செயலை அல்லது வினையை குறிப்பது பயனிலையாகவும், ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை? யாரை? என்ற கேள்விகளுள் ஒன்றைச் சேர்த்து கேள்வியாக அமைத்துக் கேட்கக் கிடைக்கும் விடையே செயப்படுபொருளாகவும் அமையும்.
Table of Contents
வாக்கியம் என்றால் என்ன
கருத்து முற்றுப்பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும். பல சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் ஆகும்
அதாவது இலக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும்.
வாக்கிய வகைகள்
வாக்கியமானது மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது. அவையாவன
- கருத்து வகை வாக்கியம்
- அமைப்பு வகை வாக்கியம்
- வினை வகை வாக்கியம்
கருத்து வாக்கியம்
கருத்து வகை வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவையான
- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்
- வினா வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம் என்பது கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதே செய்தி வாக்கியமாகும்.
எடுத்துக்காட்டு – திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
கட்டளை வாக்கியம் என்பது முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும்.
எடுத்துக்காட்டு – பாடலை பாடு
வினா வாக்கியம் என்பது ஒருவரிடம் ஒன்றை வினவுவவதாக அமையும்.
எடுத்துக்காட்டு – நீயா அங்கு வந்தாய்?
உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.
எடுத்துக்காட்டு – என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு.
அமைப்பு வாக்கியம்
வாக்கியங்களை அமைப்பு அடிப்படையில்
- தனி வாக்கியம்
- தொடர் வாக்கியம்
- கலப்பு வாக்கியம் அல்லது கலவை வாக்கியம்
என மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.
தனி வாக்கியம் என்பது ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று பயனிலையைக் கொண்டு முடிவடையும் வாக்கியங்களாகும்.
எடுத்துக்காட்டு – மாலா வந்தாள், மாலாவும் விமலாவும் வந்தனர்.
தொடர் வாக்கியம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்று வரும் வாக்கியங்களாகும்.
எடுத்துக்காட்டு – தம்பி போட்டியில் பங்குபற்றினான் வெற்றியும் பெற்றான்.
கலவை வாக்கியம் என்பது முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியங்களாகும்.
எடுத்துக்காட்டு – தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று அதன்படி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.
வினைவகை வாக்கியங்கள்
வினைவகை வாக்கியங்களில் வினைகள் முற்றாக இடம்பெறுகின்றன. இவை
- உடன்பாட்டு வினை எதிர்மறை வினை வாக்கியங்கள்
- செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியம்
- தன்வினை பிறவினை வாக்கியம்
என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.
உடன்பாடு எதிர்மறை வாக்கியங்கள் என்பவை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் உடன்பாட்டு உள்ளனவா எதிர்மறையில் உள்ளனவா என்பதனை கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
உடன்பாட்டு வினை – காந்தியை அனைவரும் அறிவர்.
எதிர்மறை வினை – காந்தியடிகளை அறியாதார் இலர்.
செய்வினை செயப்பாட்டுவினை என்பது இடம்பெறும் வினைகள் செய்வினைக்கு உரியனவா, செயற்பாட்டுக் குரியனவா என்பதனைக்கொண்டு வாக்கியம் அமையும்.
எடுத்துக்காட்டு:
செய்வினை – பேகன் போர்வை அளித்தான், ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்.
செயற்பாட்டு வினை- பேகனால் போர்வை அளிக்கப்பட்டது, இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.
தன்வினை பிறவினை வாக்கியங்கள் என்பவை இவ்வகை இடம்பெறும் வினைகளை எழுவாயே செய்கிறதா அல்லது தன்வினையாற்றாமல் பிறர் செய்யத் தூண்டுகின்றதா என்பதனை கொண்டு வகைப்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு:
தன்வினை – பாரி உண்டான்
பிறவினை பாரி உண்பித்தன்.
Read more: சனி பகவான் வழிபடும் முறை