மோட்சம் என்றால் என்ன

மோட்சம் அடைய வழி

அறிமுகம்

இப்பூவுலகில் வாழும் அனைவரும் இறுதியில் மோட்சம் அடையவே எண்ணுவர். எல்லா உயிர்களுக்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்காத மனிதருக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

நாம் நம்மால் முடிந்தவரை புண்ணியம் செய்ய வேண்டும். இறந்த பின்பு யாரும் உடன்வர மாட்டார்கள். நாம் செய்யும் பாவங்களும் புண்ணியங்களும் மட்டுமே உடன்வரும். எனவே பாவங்கள் செய்வதை விலக்கி புண்ணியச் செயல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

மோட்சம் என்றால் என்ன

மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய புருஷார்த்தங்கள் எனப்படும் இலக்குகள் நான்கு உள்ளன. தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம், வீடுபேறு அல்லது மோட்சம் என்பவையே அவை நான்கும் ஆகும்.

இதில் மோட்சம் என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய புருஷார்த்தங்கள் எனப்படும் இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் சொல்கிறது.

மோட்சம் என்பது பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஆதியும், அந்தமும் அற்ற பரம்பொருளை அடைவதே மோட்சம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை எனவும் பொருள் கொள்ளலாம்.

மோட்சம் பெறும் வழிகளாக அகத்தியர் கூறும் வழிகள்

மோட்சம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன என அகத்தியர் தனது ஞானப் பாடல்கள் தொகுப்பில் பாடியுள்ளார். அதில் முதல் வழி தியானம் மூலம் மோட்சம் பெறுவது. தியானவழி உலக மக்கள் அனைவராலும் பின்பற்ற இயலாத வழியாகும்.

ஏனெனில் தியானம் செய்வதற்கு சாமானிய மக்கள் தொடக்கத்தில் காட்டும் ஆர்வத்தை இறுதிவரையில் காட்ட மாட்டார்கள். எனவே தியான நிலை ஞானிகளுக்குச் சொல்லப்பட்டது.

இரண்டாவது வழி உலக மக்கள் அனைவராலும் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய வழியாகும். நாம் ஐந்து பஞ்சமா பாதங்களைச் செய்யாமல் வாழ்வில் நல்வழியைக் கடைப்பிடித்தால் கண்டிப்பாக மோட்சம் கிட்டும் என அகத்தியர் கூறுகின்றார்.

மோகம் கூடாது, பொய் சொல்லுதல் கூடாது, திருடுதல் கூடாது, கொலை செய்தல் கூடாது, கோபம் கொள்ளுதல் கூடாது. இவ்வகை ஐந்து கொடிய குணங்களும் யாவராலும் மன்னிக்க இயலாதவை. இந்த ஐந்தும் உலகிலேயே மாபெரும் தீய குணங்களாகும்.

மோகம் என்பது ஆசை. மோகத்தினால் பல கொடிய பாவங்களை மனிதர்கள் செய்கின்றனர். ஒருவன் பிறர் மனைவியின் மீது மோகம் கொள்ளும் போது அறிவானது மோகத்தால் மறைக்கப்பட்டுகின்றது.

பெண், பொன், மண் இவை மூன்றின் மேலும் மக்களுக்கு மோகம் உண்டு. அந்த மோகம்தான் இறுதியில் வெறிச் செயலுக்கு மக்களைத் தூண்டி அவர்களின் வாழ்வையே புதைகுழியில் தள்ளிவிடுகின்றது. எனவே மோகத்தைக் கைவிடவேண்டும்.

பொய் சொல்லும் தீய பழக்கமானது பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஒருவனை அழைத்துச் செல்கின்றது. பொய்யால் விளையும் கேடுகளை நமது நீதி நூல்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன. எனவே பொய் பேசும் கொடுஞ்செயலை மக்கள் விட்டொழிக்க வேண்டும்.

திருடுதலும் மனிதனை பாழ் கிணற்றில் தள்ளிவிடுகின்றது. உண்மையான வழியில் உழைத்துத் திரட்டும் பொருள்தான் ஒருவனுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கும். தவறான வழியில் வரும் பொருளானது ஒருவனுடைய வாழ்வை வேரோடு அறுத்துவிடும். எனவே திருடும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

உயிர்களைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே அவ் உயிர்களைக் கொல்லும் உரிமையுண்டு. அவ்வாறிருக்க ஒரு மனிதன் எதற்காக இன்னொருத்தனைக் கொல்ல வேண்டும். கருவில் இருக்கும் குழந்தையை அழிக்கும் பாவச்செயலும், ஒருவன் மற்றொருவனைக் கொல்லும் கொடும் செயலும் மன்னிக்க இயலாதவையாகும்.

ஒரு மனிதனை அறிவு இழக்கச் செய்து அவனைப் பாழ் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கொடிய குணமே கோபமாகும். அறிவு வேலை செய்யாத போது மனிதன் விலங்குகளின் நிலைக்கும் கீழ் இறக்கப்படுகின்றான். உடனே பிறரைச் சுடு வார்த்தைகளால் திட்டியோ, அடித்தோ கொன்றோ பாவம் செய்து விடுகின்றான்.

கோபமானது தீயை விடக் கொடுமையானது என்பதை எண்ணி அதனை ஒழித்துவிட வேண்டும். இவற்றுடன் ஆணவத்தையும் கைவிட வேண்டும் என்கின்றார் அகத்தியனார்.

You May Also Like :
தியானம் என்றால் என்ன
மனம் என்றால் என்ன