தியானம் என்றால் என்ன

thiyanam enral enna

தியானம் அறிமுகம்

ஒழுங்கு முறையாக மனதினை செயற்படுத்துவதினால் அக வாழ்வு தூய்மை பெறும். அகவாழ்வு தூய்மை பெறுவதனால் வாழ்வு இனிமையாக மாறும். தியானத்தை நாம் யதார்த்தமான அணுகுமுறையோடு அணுக வேண்டும்.

தியானம் எல்லாவற்றிற்குமான உடனடித் தீர்வல்ல, எனினும் தியானத்தை நேர்மறை முடிவுகளைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.

எல்லாவகைத் தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கேற்ப சிலவகைத் தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சிலவகைத் தியானங்கள் மிகக் கஷ்டமானதாகவோ இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்துவிடும்.

தியானம் என்றால் என்ன

தியானம் என்றால் என்ன

தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்வதற்கான விசேடமானதொரு முறையாகும். மனதை ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்கவைப்பதனைத் தியானம் எனக் கொள்ளலாம்.

உடல் மற்றும் மனதின் கட்டுப்பாடுகளைக் கடந்து செல்வது தியானம் எனலாம். அதாவது மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். 

தியானத்தின் முக்கியத்துவம்

உடல் மற்றும் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தியானம் முக்கியம் பெறுகின்றது. இன்றைய போட்டி நிறைந்த உலகில் மனஅழுத்தம் வயது வேறுபாடின்றி எல்லோருக்கும் ஏற்படுகின்றது.

இதனால் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் பாதியிலேயே முறித்துக் கொள்ளும் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இவற்றிலிருந்து மீள்வதற்கும், மன அமைதியைப் பெற்று மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் தியானம் இன்றியமையாததாகும்.

தியானத்தின் பயன்கள்

தியானத்தை விடா முயற்சியாகச் செய்தால் அதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் அளவிட முடியாததாகும். தினமும் தியானத்தை மேற்கொண்டால் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அமைதி மனதில் உணரப்படும்.

தியானம் நாம் வாழ்க்கையைப் பார்க்கும் நிலையைச் சிறப்பாக மாற்றும் செயலாற்றும் முறையைச் சிறப்பாக மாற்றும். தியானத்தின் மூலம் கிடைக்கும் அமைதி தினசரி வாழ்க்கையிலும் தொடரும்.

தியானம் உயர் இரத்த அழுத்தத்தைச் சரி செய்கின்றது. உடல் நிலையை நோயின்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தியானம் உதவுகின்றது.

மனதிலுள்ள பொறாமை, கோபம், சுயநலம், வஞ்சகம், காமம், பேராசை போன்ற தீய எண்ணங்களைப் போக்கத் தியானம் துணைபுரிகின்றது.

தியானம் முகத்திலும், உடல் முழுவதும் ஆன்மீக ஒளியைத் தருகின்றது. தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றது.

பல்வேறு நற்குணங்களை விருத்தி செய்துகொள்ள தியானம் உதவுகின்றது. அதாவது தியானத்தின் மூலம் அன்பு, கருணை, பொறுப்பு, பணிவு, உண்மை, நேர்மை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

வாழ்வினை உய்த்துணர்ந்து சகல துக்கங்களில் இருந்தும் விடுதலை அடைவதே முக்கியமான தேவையாகும். ஆன்மாவிற்கு மிகவும் தேவையான உணவு தியானமே ஆகும். எனவே தியானம் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தியானம் செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டியவை

தியானத்திற்கு சிறந்த நேரம் அதிகாலை ஆகும். தியானத்தை ஆரம்பிப்பதற்கு முன் அமைதியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். தியானத்திற்கு முன்பு உடலை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.

தலை மற்றும் உடல் நேராக இருக்க வேண்டும். உணவு உண்டபின் தியானம் செய்வதை தவிர்ப்பது நல்லது. தரையில் அமராமல் இருக்கையை விரித்து அமர்ந்து கொள்ளலாம்.

பிடித்த இறைவனுக்கு நன்றி கூறி விட்டு தியானத்தை தொடங்கலாம். இதனால் மனதில் அமைதி ஏற்படும். எனவே நாம் அனைவரும் தியானத்தை மேற்கொண்டு மன அமைதியைப் பேணி ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோமாக!

You May Also Like :
படபடப்பு குறைய வழிகள்
அறம் என்றால் என்ன