நீந்துவதால் ஏற்படும் நன்மைகள்

இன்று பலரும் வேலைப்பளு காரணமாக உடற்பயிற்சி செய்வதை மறந்து விட்டனர். தியானம், யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் போன்ற பல பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. இன்றைய இந்த பதிவில் நீந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

சிறந்த உடலமைப்பு

சரியான பயிற்சி பெற்ற பின்னர் நீந்துவதால் உடலில் உள்ள கைகள், தோள்ப்பட்டைகள், முழங்கை, வயிறு, முள்ளந்தண்டைச் சுற்றியுள்ள தசைகள், வயிற்றிலுள்ள தசைகள் என எல்லா பாகங்களும் நன்றாக வேலை செய்கின்றன.

இதனால் உடலுக்கு சிறந்ததொரு கட்டமைப்பு உருவாகின்றது. மேலும் உடல் எடையை எப்பொழுதும் சீராக ஒரே நிலையில் பராமரிக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமன்றி இதயம் மற்றும் நுரையீரல் போன்றன நன்றாக செயற்படுகின்றன. இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. அத்தோடு மன அழுத்தம் குறைகின்றது.

உடலின் கட்டுப்பாடு பேணப்படுகின்றது

காற்றின் அடர்த்தியை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் நீரில் நீந்த உடல் அதிகளவு சக்தியை விடுவிக்கிறது. குறிப்பாக அரை மணித்தியாலத்தில் இயல்பான அளவிலும் பார்க்க 370 கலோரி எரிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுவதோடு, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு இரத்தத்தில் உள்ள சீனியின் அளவும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

சிறந்த உறக்கம்

நீந்தும் போது என்பு மூட்டுக்கள் மற்றும் தசைகளுக்கு சிறந்ததொரு நெகிழ்வுத்தன்மை ஏற்படுகின்றது. இதனால் மூட்டுக்களின் ஆயுட்காலம் கூடுகின்றது.

அதுமட்டுமல்லாமல் தினமும் இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மாத்திரைகளைப் பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நீச்சல் அடித்தால் இரவில் நன்றாக உறக்கம் வரும்.

கூர்மையான நினைவுத்திறன்

குறிப்பாக நீச்சல் வீரர்களைப் பார்க்கும் போது ஏனைய சாதாரண மனிதர்களை விட நினைவுத்திறன் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நீந்துவதை பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்களோடு பொறுமை போன்ற பல நற்குணங்களும் சேர்ந்து வளர்கின்றன.

சுகப்பிரசவம் ஏற்படும்

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் போது அவர்களுக்கு உருவாகும் எலும்பு அடர்த்தி குறைவடைகின்றது. ஆனால் இந்த பிரச்சனை நீச்சல் அடிப்பதால் குறைகின்றது. இது சுகப்பிரசவத்திற்கு பெரிதும் வழிவகுக்கிறது. நீச்சல் அடிப்பது பெண்களுக்கு மன தைரியத்தை வளர்ப்பதோடு உடல் தைரியத்தையும் வளர்ப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.

செரிமானம்

தினமும் நீந்துவதால் மலச்சிக்கல் பாதிப்புக்களில் இருந்து விடுபடலாம். நீந்துவதால் உடலில் செரிமான ஆற்றல் அதிகரிக்கின்றது. அத்துடன் இது உடலில் பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. நீச்சலின் பின்னர் பலருக்கும் விரைவாக பசி எடுக்கும்.

கெட்ட கொழுப்புக்கள் குறைக்கப்படும்

உடல் எடை கூடிய ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். அதாவது நீந்துவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட நச்சுக் கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறைகிறது. நீந்துவதால் உடல் உறுப்புக்களுக்கும் தசைகளுக்கும் பயிற்சி ஏற்படுவதுடன் உடலின் இயக்க செயல்கள் அனைத்தும் சீராகின்றன.

மூட்டுவலி உட்பட்ட வலிகள் குணமாகும்

நீந்தும் போது உடம்பின் மொத்த எடையையும் தண்ணீர் தாங்குகின்றது. இதனால் கால், மூட்டுக்கள் மற்றும் தசைகள் இலகுவாகி இயங்கும். இதனால் மூட்டுவலி, கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற வலிகள் விலகி விடும். அதுமட்டுமல்லாமல் நீந்துவதால் தொடைகள், கைகளில் உள்ள தளர்வுகள் எல்லாம் நீங்கி தசைகள் இறுகி உடலுக்கு ஒருவித அழகு கிடைக்கப்பெறுகின்றது.

நீந்துவதால் எவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என மேலே உள்ளவற்றை வாசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே நீச்சலை முறையாகக் கற்று தினமும் அரை மணி நேரமாவது நீந்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

You May Also Like :

புரட்டாசி மாத சிறப்புகள்

வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள்