மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார் | தேவநேயப் பாவாணர் |
Table of Contents
தேவநேயப் பாவாணர் இளமைப்பருவம்
1902ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி திருநெல்வேலி மாவட்டத்தில் கோமதிபுரத்தில் ஞானமுத்து என்பவருக்கும் பரிபூரணத் தாழ்வார் என்பவருக்கும் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார்.
இவருக்கு 5 வயது ஆகும் போது இவருடைய பெற்றோர்கள் இறந்து விட்டனர். ஐங்துரை என்ற பள்ளி தாளாளரின் உதவியுடன் தொடக்க கல்வியைப் பயின்றார். பிறகு வடார் காட்டிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கிப் படித்தார்.
பாவாணர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஹேலட் உயர்நிலைப் பள்ளி, சென்னை திருத்தவப்பள்ளி போன்றவற்றில் தனது கல்விப் படிப்பை தொடர்ந்தார்.
மொழி ஞாயிறு என்ற பெயர் வரக் காரணம்
இருபதுக்கும் மேற்பட்ட சொல் ஆராய்ச்சிகள் செய்த பின்னரே தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்ற கருத்தை முன்வைத்தார் பாவாணர். தனித்தமிழ் தோற்றத்திற்கு ஆணிவேராக நின்று போராடியவர் ஆவார்.
இவருடைய ஒப்பரிய தமிழ் அறிவும் பன்மொழி அறிவும் கண்ட பெருஞ்சித்திரனார் மொழிஞாயிறு எனும் அழியாப் பட்டத்தை பாவணாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்மொழி மீதான இவரது சேவைகள்
உலக மொழிகளில் மூத்ததும் மிகப் பழமையானதும் செம்மையான வடிவம் பெற்றதும் தமிழ் ஆகும் என்றும் திராவிடத்திற்கு தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழ் எனவும் வாதிட்டவர் பாவாணர் ஆவார்.
நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பாவாணர் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய நூல்களுள் ஒப்பியன் மொழி நூல், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் திருமணம், திராவிடத்தலம், பண்டைத் தமிழக நாகரிகமும் பண்பாடும், வடமொழி வரலாறு, வேர்ச்சொற் கட்டுரைகள், சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தமிழர் பதம், The primary classic language of the world போன்றன அவற்றுள் சிலவாகும்.
பாவாணரின் கொள்கைகள்
தமிழ் இயல்பாகத் தோன்றிய மொழி ஆதலாலும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுவதாலும் மிகத் தொன்மை வாய்ந்தது ஆதலாலும் அது தோன்றியது குமரி நாடே என்று துணியப்படும் எனத் திராவிடத்தாய் எனும் தம்முடைய நூலின் முன்னுரையில் குமரி நாட்டுக் கொள்கையையும் ஞால முதல் மொழி தமிழே என கொள்கையையும் பாவாணர் பதிவு செய்தார்.
முற்போக்கு சிந்தனை
திருமணச் சடங்கிகள் பற்றி தனது நூலில் எழுதும் போது இவர் அதில் திருமணத்தில் மேற்கொள்ள வேண்டிய பல சீர்திருத்தங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
நாளும் கோளும் பார்க்கும் மூட நம்பிக்கையைத் தகர்த்து பெண் வீட்டாரிடம் வரதட்சனை வாங்கும் அருவருப்பான செயலை விடுத்து சாதி பார்க்கும் அகமன முறையை ஒழித்து வேறு வேறு இனத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மணப்பது அறிவார்ந்த மக்கட்பேறு வாய்க்கப் பெறுவதற்கு வழி வகுக்கும் என்று பாவாணர் தெரிவித்திருந்தார்.
பண்டைய தமிழரின் நாகரிகம், பண்பாடு பற்றியும் தனது கட்டுரையில் அழகாக எடுத்தியம்பியுள்ளார்.
தமிழர்கள் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்களில் பிரதானமானது வாய்மையும், நேர்மையும் ஆகும் என்பதனால் அன்று நம் முன்னோர்கள் பின்பற்றிய இன்று நாம் பின்பற்ற மறந்த பல வாழ்வியல் நற்கருத்துக்களை தனது நூலில் விளக்கியுள்ளார்.
இத்தகைய தனித்தமிழ் பெரும் ஆர்வலரான தேவநேயப் பாவாணர் 1981.01.15 அன்று இயற்கை எய்தினார்.
Read more: தமிழகத்தின் நெற்களஞ்சியம்