மொழியும் பண்பாடும் கட்டுரை

Mozhi Katturai In Tamil

இந்த பதிவில் “மொழியும் பண்பாடும் கட்டுரை” பதிவை காணலாம்.

நம் தமிழ்ப் பண்பாடானது மிகவும் உயரியது எனவே எமது மொழி மற்றும் பண்பாட்டைக் காக்க ஒன்றுபட்டு நிற்போமாக!

மொழியும் பண்பாடும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தமிழர் பண்பாடும் மொழியும்
  3. தமிழ்மொழியின் சிறப்புகள்
  4. தாய்மொழிக் கல்வி
  5. தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு இனத்திற்கு மொழியுடன் கூடிய பண்பாடும் அவசியமாகும். மனிதன், தனது கருத்தை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒப்பற்ற கருவி மொழி ஆகும். இத்தகைய மொழியே சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

ஒரு மனிதன் தனி ஒருவரிடமோ அல்லது குழுமத்துடனோ தன்னுடைய கருத்துக்களைப் பகிர்வதற்காக எழுந்த மொழியானது வெறுமனே தொடர்பாடலுக்கான கருவி என்ற எண்ணக்கருவை தகர்த்து அந்த மொழிசார் இனக்குழுமத்திற்கான பண்பாட்டுத் தளத்தையும் இயக்குவிக்கிறது என்றால் அது மிகையல்ல. இக்கட்டுரையில் மொழியும் பண்பாடும் பற்றி நோக்கலாம்.

தமிழர் பண்பாடும் மொழியும்

மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர்களின் பண்பாடு தாய்மொழியான தமிழ் மொழி என்று கூறலாம். தாய் மொழியான தமிழ் மொழியை பேணுவதே தமிழர்களின் பண்பாட்டில் மேலானதாகும்.

தமிழர்களின் வாழ்வியலினூடே நேர்விகிதசமனாக மொழியும் பயணம் செய்கின்றது. காலந்தோறும் அழியாமல் வழங்கப்படும் தமிழ்ப் பழமொழிகள் முன்னோர்களின் பட்டறிவையும், அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் தாங்கி வரும் பண்பாட்டுக் கருவூலங்களாகவும் காட்சியளிக்கின்றன.

அதாவது தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி என்பதோடு, அதன் இலக்கண வழக்குகளும், சொற்களும், பழமொழி போன்றவைகளும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன.

தமிழ்மொழியின் சிறப்புகள்

தமிழ் உலகளாவிய மொழிகளில் ஒன்றாக, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் திகழ்கிறது.

உலகின் முதல் மொழி, மிகப் பழைமையான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதை நெடுங்காலமாகவே மொழியியல் வல்லுனர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மேலைநாட்டு அறிஞர்கள் ஆதாரங்களுடன் கண்டறிந்து நிலை நாட்டியுள்ளனர்.

தமிழ் மொழி உலகக் கலாசாரங்களின் தொட்டில், உலக நாகரிகங்களின் ஊற்று என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகின்றது. தமிழ் மொழிக்கு இருக்கக் கூடிய இலக்கிய, இலக்கண வளம் உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.

தாய்மொழிக் கல்வி

மக்கள் நாகரீகத்தின் உயர்ந்த நிலையே பண்பாடு எனலாம். இது வாழ்வியல் நெறியில் இன்றியமையாப் பண்பில் கலந்து இருக்கிறது. இதனடிப்படையில் நின்று பெறும் தாய்மொழிக் கல்வி என்றும் நிலைத்து நின்று பயன் தரும்.

உலகம் செம்மையாக இயங்குவதற்கு பண்பாடுதான் அவசியம் எனும்போது அத்தகைய பண்பாட்டின் வழி மாணவர்களின் தாய்மொழிக் கல்வியை வழங்குவது முக்கியமானதாகும்.

தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகள்

தமிழர்களாகிய எம் பண்பாடுகள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவையாகும் காதலும் வீரமும் நிறைந்தது. தமிழர் பண்பாட்டில் தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூய காதலாகும்.

தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளுள் ஒன்று விருந்தோம்பல். அதுமட்டுமன்றி வீரத்திலும் தனக்கென்று ஒரு மரபைக் காத்து வந்தவன் தமிழன். போரில் புறமுதுகிட்டு ஓடுதல் கோழையின் செயல் என்று சொல்லித் தந்தவர்கள் தமிழர்கள்.

முடிவுரை

மொழியும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மொழியைப் பேசும் இனம் அதைச்சார்ந்த பண்பாட்டின் படி செயல்படும். பண்பாடானது மொழியின் கூறு என்பதால் பண்பாடு சிதைந்தால் மொழியும் சிதையும்.

நம் தமிழ்ப் பண்பாடானது மிகவும் உயரியது எனவே எமது மொழி மற்றும் பண்பாட்டைக் காக்க ஒன்றுபட்டு நிற்போமாக!

You May Also Like :
தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை
தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை