மூவகை மொழிகள் யாவை

moovagai mozhigal in tamil

மூவகை மொழிகள் யாவை?

தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி

கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்குரிய மொழி எம்தாய் மொழியாகும். தமிழ்மொழியானது 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது என்ற சிறப்பினைப் பெறுகின்றது.

மொழித்துணையின்றி மூவகை சுட்டொலிகளில் இருந்து சொற்கள் தோன்றியமையே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும்.

சொற்பொருள் அடிப்படையில் மொழிச் சொல் மூன்று வகைப்படும். அவை தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என்பனவாகும்.

இதனையே நன்னூல் பின்வருமாறு கூறுகின்றது,

ஒரு மொழி ஒரு பொருளன வாம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமையும் ஏற்பன (நன்னூல் : 260)

ஒரு பொருளைத் தரும் ஒருசொல், ஒருமொழியாம். இரண்டு முதலிய சொற்களாய்த் தொடர்ந்து நின்று இரண்டு முதலான பல பொருள்களைத் தருவன தொடர்மொழியாம். ஒன்றாய் நின்று ஒரு பொருளைத் தந்தும் தொடர்ந்து நின்று பல பொருளைத் தந்தும் இரண்டுக்கும் பொதுவாய் வருவது பொதுமொழியாம்.

மூவகை மொழிகள் யாவை விளக்குக

தனிமொழி

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும். பகுபதம் ஆயினும், பகாப்பதம் ஆயினும் ஒரு சொல் ஒரு பொருளை மட்டும் குறித்து வருமாயின் அது தனி மொழி என்று அழைக்கப்படுகின்றது.

தனிமொழி சான்று:

பகுபதம் – பாடினான், படித்தான், வந்தாள், நில், வா

பகாப்பதம் – கிளி, மயில், புலி, கண், படி, மனிதன், நிலம், வானம்

இங்கே எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனிச்சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைத் தந்து வந்துள்ளது.

தொடர்மொழி

தனி மொழிகள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர் மொழிச் சொல்லாகும். அதாவது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.

பகாப்பதமாயினும், பகுபதமாயினும் இவ்விருவகைப் பதங்களும் அல்வழி வேற்றுமைப் பொருளில் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து இரண்டு முதலிய பல பொருள்களைத் தந்தால் தொடர்மொழி எனப்படும்.

தொடர்மொழி சான்று:

அறம் செய விரும்பு, ஆறுவது சினம், கண்ணன் வந்தான், துறவற வாழ்க்கை, படம் பார்த்தான்.

இங்கு தனிச் சொற்கள் பல சேர்ந்து பொருளை வெளிப்படுத்தியுள்ளன.

பொதுமொழி

தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது பொது மொழியாகும். அதாவது, ஒன்றாய் நின்று ஒரு பொருளைத் தந்தும் தொடர்ந்து நின்று பல பொருளைத் தந்தும் இரண்டுக்கும் பொதுவாய் வருவது பொதுமொழி ஆகும்.

மேலும் விளங்கக் கூறின், ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும்.

பொது மொழிக்கு சான்று:

அந்தமான் – ‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த + மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.

வேங்கை என்பது புலிவகை விலங்கை குறிப்பதாகவும் வேம் + கை என பிரிந்து நின்று வேகின்ற கை என்ற பொருளையும் தருகின்றது. இவ்வாறு வருவனவெல்லாம் பொது மொழிகளே ஆகும்.

You May Also Like :
தமிழ் மொழியின் பண்புகள் யாவை
இணையத்தின் பயன்கள்