விவசாயம் அழிவதற்கான காரணங்கள்

விவசாயம் அழிவு

ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்நாட்டினுடைய விவசாயமே ஆகும். நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விவசாயமே திகழ்கின்றது. உலக மக்கள் வாழ்வதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக விவசாயத்துறை காணப்படுகின்றது.

மனிதனின் மூச்சாக இருந்த விவசாயம் இன்று அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதன் பின்னணியில் பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. விவசாயம் அழிவதற்கான காரணங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

விவசாயம் அழிவதற்கான காரணங்கள்

மணற் கொள்ளை.

ஆற்று மணல் முறையற்ற வழிகளில் தோண்டி எடுக்கப்படுவதால் ஆறுகளைப் பள்ளமாக்கி அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.

இதன் எதிர் விளைவுகள் குளங்கள் வறண்டு போய், நீர்வளம் குன்றி விடும். இது விவசாயத்தை பெரிதும் பாதிக்கின்றது.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது.

தேசிய நெடுஞ்சாலை, அனல் மின் நிலையம் அமைக்க என பல காரணங்களுக்காக பல ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதனால் அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட முடியாமல் போய்விடுகின்றது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிப்படைகின்றது.

விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள்.

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காமல் போவதால் அடுத்து பயிரிட முடியாமல் போகின்றது. பல விவசாயிகள் தற்கொலைக்கும் தூண்டப்படுகிறார்கள்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவடைதல்.

நீர்சார் தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, காடளிப்பு, பொலித்தீன் பொருட்கள் நிலத்தில் படையாக புதைக்கப்படுதல் மற்றும் நீர் நிலைகள் சரிவர ஆழமாக்கப்படாமை காரணமாக கொள்ளளவு நீர்ப்பிடிப்புப் பகுதி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பூமிக்குள் உட்புகும் நீரின் அளவு குறைந்து வருகிறது.

விவசாயக் கிணறுகளில் இருந்து லாரி மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

சிலர் தமது சுய இலாபத்திற்காக விவசாயக் கிணறுகளிலிருந்து நீரை எடுத்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். விவசாயக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரினால் விவசாயத்திற்கு போதிய அளவு நீர் கிடைக்காமல் போய் விடுகின்றது.

நீர் மாசடைதல்.

நீரானது மனித நடவடிக்கைகளின் விளைவாக அல்லது இயற்கை சீற்றத்தின் விளைவாக மாசுபடுத்தப்படுகின்றது.

தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலத்தல், இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் மற்றும் குப்பைத் தொட்டியிலிருந்து கசிவு போன்றவை காரணமாக நீர் மாசடைகின்றது. இதனால் விவசாயம் நலிவுறும். கிணற்றுப்பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும்.

மண்ணின் தரம் குன்றுதல்.

விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகள், விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவு நீர் விவசாய நிலங்களில் கலப்பதால் மண்ணின் தரம் குன்றி விளைச்சல் வெகுவாகக் குறைகின்றது. இதனால் நாளடைவில் வேளாண்மை செய்ய முடியாத நிலங்களாக மாறுகின்றன. இதனால் விவசாயம் அழிவிற்குட்படுகின்றது.

விவசாய நிலங்கள் விற்கப்படுதல்.

அதிக விலைக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் நிலங்களை விற்றல் போன்ற காரணங்களால் விவசாய நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வேளாண் நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதால் விவசாயம் அழிவடைந்து வருகின்றது.

You May Also Like :
பிராணிகளால் தாவரங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை