முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

Muyarchi Thiruvinaiyakkum Katturai In Tamil

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை: வெற்றியோ தோல்வியோ நாம் முயற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் முயற்சி செய்ய தயங்க கூடாது. அதேபோல எந்த ஒரு சூழ்நிலையிலும் முயற்சியை கை விடக்கூடாது.

இந்த பதிவில் “முயற்சி திருவினையாக்கும் கட்டுரை” (Muyarchi Thiruvinaiyakkum Katturai In Tamil) காணலாம்.

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

1.முன்னுரை
2.முயன்றால் இயலாதது எதுவுமில்லை
3.முயன்று வென்றவர்களில் சிலர்
4.வெற்றியின் இரகசியம் முயற்சி
5.முடிவுரை

முன்னுரை

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்” என்கிறார் வள்ளுவர். அதாவது இறைவனால் சாத்தியமில்லாத விடயமும் விடாமுயற்சி உடையவராக இருப்பின் சாத்தியம் என குறிப்பிடுகிறார்.

நமது வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் வருகின்ற போதும் நாம் முயற்சியோடு போராடுகின்றவர்களே வெற்றியடைவர் என்பது திண்ணமாகும். நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெற்றி அடைகின்றோமோ தோல்வி அடைகின்றோமோ முயற்சியினை ஒரு போதும் கைவிடக்கூடாது.

இதனையே கியூபாவின் புரட்சியாளர் சேகுவேரா “விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்” என்கிறார்.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பு விடாமுயற்சி மனதைரியம் வெற்றி தோல்விகளை சமமாக எடுத்து கொள்ளும் தன்மை ஆகியனவற்றை வளர்த்துகொள்ள வேண்டும். இதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முயன்றால் இயலாதது எதுவுமில்லை

முயற்சி செய்தால் நம்மால் முடியாத விடயமென்று எதுவுமில்லை என்று குறிப்பிடுவார்கள் இதனை நம்பியே உலகில் ஒவ்வொரு உழைப்பாளிகளும் என்றாவது ஓர் நாள் நானும் வென்றுவிடுவேன் என்ற கனவோடு தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் தனி திறமை இருக்கும் அதனை சரியாக இனம் கண்டு வாழ்க்கையில் கடினமாக உழைத்தவர்கள் சாதித்து காட்டுகின்றார்கள். அவர்களை உலகமும் கொண்டாடி தீர்க்கிறது முன்னுதாரணமாகவும் பார்க்கிறது.

வெற்றி பெற்ற அனைவரும் அந்த வெற்றியை சாதாரணமாக அடைந்திருக்க மாட்டார்கள் அதற்காக கடின உடல் உழைப்பு நேரம் பயிற்சி என்பவற்றை மேற்கொண்டதனால் தான் அவர்கள் அந்த உயரத்தை அடைந்திருப்பார்கள்.

விமர்சனங்களை கண்டு அஞ்சி தமது முயற்சியை கைவிட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது ஆகவே நாம் விடாமுயற்சியுடையவர்களாக எம்மை வளர்த்து கொள்வோம்.

முயன்று வென்றவர்களில் சிலர்

கடின முயற்சியினால் சாதித்தவர்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடிப்பார்கள் அந்தவகையில் நமக்கு முன்னுதாரணமான சிலரது தடங்களை இங்கே பகிர்கிறேன்.

உலகுக்கு மின்குமிழை தந்து ஒளியூட்டிய தோமஸ் அல்வா எடிசன் 999 தடவை தோல்விகளை சந்தித்து 1000வது தடவை தான் மின்குமிழை கண்டுபிடித்தார். இது அவரது விடாமுயற்சிக்கு பலருக்கும் எடுத்துகாட்டாகும்.

இந்தியாவின் இராமநாதபுரத்தில் வீடுகளுக்கு பத்திரிகை போட்ட சிறுவன் பின்னாளில் இந்தியாவை விண்வெளியில் தலைநிமிர வைத்த டாக்கடர் அப்துல்கலாம் ஆக மாறினார் அவரது முயற்சியே ஆகும்.

போர்த்துகக்ல்லில் ஒரு வேளை உணவுக்கே போராடும் குடும்பத்தில் பிறந்து இன்றைய கால்பந்து உலகில் சிறந்த வீரரான கிறிஸ்டியானோ றொனால்டோ பல பேருக்கு முன்னுதாரணமாக உள்ளார்.

ஜமேக்கா எனும் நாட்டில் வறிய குடும்பத்தில் பிறந்து 3 தடவைகள் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை வென்ற உசைன் போல்ட் கடின முயற்சிக்கு சிறந்த உதாரணமவார்.

அவ்வாறே செருப்பு தைப்பவரின் மகன் அமெரிக்க ஜனாதிபதியானார் அவர் பல பேருக்கு சொன்ன பாடம் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பது தான்.

எவ்வளவு திறமையிருந்தாலும் சரியான முயற்சி இல்லாவிட்டால் வீணாகும் இவ்வாறு முயற்சியால் வென்றவர்களை கூறிக்கொண்டே செல்லலாம்.

வெற்றியின் இரகசியம் முயற்சி

முயற்சிகள் தவறலாம் ஆனால் நாம் முயற்சி செய்ய தவறகூடாது எனது முயற்சிகள் என்னை கைவிட்டதுண்டு ஆனால் நான் முயற்சியை ஒரு போதும் கை விட்டதில்லை என்கிறார் தோமஸ் அல்வா எடிசன்.

அதாவது வாழக்கையில் போராட துணிந்த அத்தனை பேருக்கும் வெற்றிக்கதவு திறந்திருக்கும் என்பதை நாமும் உணரவேண்டும் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்.

எங்களுடைய வாழக்கை ஒரு மரதன் ஓட்ட போட்டியினை போன்றதாகும் ஆரம்ப புள்ளியில் கூட்டம் அதிகமாக தான் இருக்கும் ஆனால் அங்கு யார் தொடக்கத்தில் காட்டிய உற்சாகத்தை தொடர்ந்து காட்டுகிறார்களோ அவர்களே வெற்றியடைகின்றார்கள்.

இதுவே வாழ்க்கையில் நாமும் வெற்றிபெற வேண்டுமாயின் முயற்சியே வெற்றியின் இரகசியமாகும்

முடிவுரை

கடலின் அலைகள் பூமியின் சுழற்சி சூரியனின் உதயம் எப்போதும் மாறுவதில்லை அது போல் நாமும் முயற்சியை கை விடாது போராடினால் ஒரு நாள் வெற்றி பெற முடியும். உழைக்காமல் யாரும் வென்றதாக சரித்திரமே கிடையாது.

ஆகவே தான் மனதை கட்டுப்படுத்தி தியாக உணர்வோடு இலக்கை நோக்கி ஓடினால் நிச்சயம் ஓர் நாள் வெற்றி கிட்டும் என்பதில் ஜயமில்லை “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” முயலுங்கள் ஒரு நாள் வானம் வசப்படும்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.

You May Also Like:

எனது கனவு பள்ளி கட்டுரை

எனது கனவு நூலகம் கட்டுரை