புனைகதை என்றால் என்ன

புனைவுகள்

ஐரோப்பியத் தாக்கத்தினால் நமது சமூக, அரசியல், பொருளாதார இயங்கு தளங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் தமிழில் புனைகதை என்றொரு இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்தது.

அப்படி உருவான “புனை கதை” வடிவமானது தமிழ்மொழியின் பாரம்பரியங்களுக்கு ஊடாகத்தான் இங்கே தோற்றம் பெற்றது.

தொன்றுதொட்டுக் கதை மரபு நம்மிடம் இருந்து வந்தது. எனினும் அதனை விடுத்து அதன் வழிவரும் புனைகதைகளை எழுதத் தொடங்கினர்.

புதிதாகத் தோன்றுகின்ற ஒவ்வொன்றும் பழமையின் அடியாகத் தோன்றுவதே இயற்கை. தமிழில் புனைகதை இலக்கிய வகையில் முதலில் தோன்றியவை புதினங்களேயாகும்.

நாவல், சிறுகதை இரண்டுமே உரைநடை வடிவத்தைக் கொண்டவை. இரண்டு வகைகளும் கதையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளன. அதனால் இரண்டையும் ஒன்றாக இணைத்து புனைகதை இலக்கியங்கள் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

புனைகதைகள் அளவின் அடிப்படையில் பல்வேறு பகுப்புகளுக்குள் அடக்கப்படுகின்றன. நீள ஒப்பீட்டின் அடிப்படையில் குறுங்கதை, சிறுகதை, நெடுங்கதை, குறும்புதினம், புதினம், இதிகாசம் என வகைப்படுத்தலாம்.

மேலும் புனைகதைகள் நடப்பியல் சார்ந்த புனைகதைகள், நடப்பியல் சாராத புனைகதைகள், அரைப் புனைகதைகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. புனை கதைக்குள் மர்மங்கள், அறிவியல் புனைகதை, காதல், கற்பனை மற்றும் க்ரைம் த்ரில்லர்கள் உட்பட பலவாறு அமையலாம்.

புனைகதை என்றால் என்ன

“புனைகதை” என்ற சொல் லத்தீன் வார்த்தையான “ஃபிக்டஸ்” என்பதிலிருந்து வந்தது, அதாவது “வடிவமைப்பது” என்பது பொருளாகும்.

கற்பனையாக உருவாக்கப்பட்ட கதைகளே புனைகதைகள் ஆகும். அதாவது புனையப் பெறும் கதை வடிவம் புனைகதை ஆகிறது.

புனைகதை அல்லது புனைவு என்பது, உண்மை அல்லாத கதைகளைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவை ஆகும். எனினும், புனைகதைகள் முழுமையாகவே கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை.

இது புதினம், சிறுகதை என்னும் இரு இலக்கிய வகைகளையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும். நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டோ, அவற்றை ஒட்டியோ கற்பனை கலந்து புனையப் பெறுவன புனைகதைகளாகும்.

புனைகதைகள் வருணனைப் பாங்கில் அமையும். பெரும்பாலும் எழுத்தாளனே முன்னின்று கதாபாத்திரங்களின் உணர்வையும், செயலையும், நடைபெறும் செயல்களையும் எடுத்துரைப்பதாக எழுதப்பெறுவதாகும்.

புனைகதை என்பது கற்பனையில் இருந்து உருவாக்கப்பட்ட மற்றும் பொதுவாக ஒரு கதையைக் கொண்டிருக்கும் எந்தவொரு இலக்கியத்தையும் குறிக்கிறது. இது கற்பனையான நிகழ்வுகளையும் மக்களையும் விவரிக்கிறது.

பொதுவாக புனைகதைகள் புத்தகங்கள் மற்றும் கதைகள் வடிவில் வருகிறது. அனைத்து விவரிப்புகளும் கற்பனையானவை அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம் ஆகும்.

தமிழில் அறிவியல் புனை கதைகள்

அறிவியல் புனைகதை என்பது அறிவியல் கருத்துக்களை அடிப்படையாகவோ அல்லது பின்புலமாகவோ கொண்டு கற்பனையுடன் ஆக்கப்படும் படைப்புக்கள் ஆகும். இதனை “அறிபுனை” என்றும் அழைப்பர்.

அறிவியல் புனைகதை வருங்கால அறிவியல் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அதிக முன்னேற்றமடைந்த அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதாக, விண்வெளிப் பயணம், வேற்றுக்கிரகவாசிகள், அறிவியல் கண்டுபிடிப்புக்களின் பின்புலத்தை ஆராய்வது போன்றவை அறிவியல் புனைகதைகளின் கருத்துக்களாக அமையப் பெறலாம்.

பொதுவாக அறிவியல் புனைகதைகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கேற்ப படைக்கப்பட வேண்டும் என்பர்.

அறிவியல் புனைகதைகளில் காணப்படும் கற்பனைகள் பிற்காலத்தில் நிகழக் கூடிய வல்லமை கொண்டதாகவும், கடந்தகாலப் பதிவுகளுடன் வருங்கால அறிவியலை புனைகதைகள் விபரிப்பதாகவும் அமையலாம். கற்பனை அறிவியல் விதிகளின்படி அமைய வேண்டியதில்லை.

ஆனால் அறிவியல் புனைகதைகள் எழுதுவதற்கு அடிப்படை அறிவியல் அறிவு தேவைப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.

Read more: சிறுகதை என்றால் என்ன

தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை