பிராணிகளால் தாவரங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜனை தாவரங்கள் இலைகளின் வழியாக வெளியேற்றுகின்றன. தாவரங்கள் இல்லையென்றால் மனிதன் மட்டுமன்றி பிற உயிரினங்களும் அழிந்து விடும்.

இவ்வாறு தாவரங்களால் மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பெருகி வரும் மனித தொகைக்கேற்ப உணவுத் தேவையும் அதிகரித்துள்ளது.

இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு தாவரங்களே இன்றியமையாதவையாகும். மேலும் உறைவிடம், வாழ்வாதாரம் எனப் பல வழிகளிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்றன.

அதேபோல் பிராணிகளாலும் தாவரங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பிராணிகளால் தாவரங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

பிராணிகளால் தாவரங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

தாவரங்களின் செழிப்புக்கு உதவுகின்றன.

விலங்குகளின் கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகள் மண்ணினுள் புதைக்கப்படும் போது அவை மண்ணுக்கு உரமாகின்றன. அந்த மண்ணில் தாவரங்கள் வளர்க்கப்படும் போதும் அல்லது, தாவரங்களுக்கு உரமாக புதைக்கப்படும் போதும் அவை செழிப்புடன் வளர்கின்றன.

உதாரணமாக மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி மலம் போன்றன தாவரங்களுக்கு உரமாகின்றன. இவை இயற்கை உரமாதலால் சிறந்த ஆரோக்கியமான விளைச்சல்களைப் பெற்றுத்தருவதுடன், தாவரம் செழிப்பாக வளர்வதற்கும் உதவும்.

விதை பரம்பலுக்கு விலங்குகள் உதவுகின்றன.

பிராணிகளால் விதை பரவல் பொதுவாக இடம்பெறுகின்றன. கொக்கி போன்ற அமைப்பில் உள்ள விதைகள் விலங்குகளின் தோலிலோ அல்லது முடியிலோ ஒட்டிக்கொண்டு, சிறிது தூரம் கடந்து செல்லப்படலாம். அது வளமான மண்ணில் விழுந்து வளர்கின்றது. இவற்றிற்கு உதாரணமாக நாயுருவி, புலிநகம் போன்றவறைக் கூறலாம்.

தக்காளி, ஆப்பிள் பழங்கள் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவாக உள்ளன. இதனால் பழங்களின் விதைகள் குடல் வழியாக சென்று கழிவாக வெளியேற்றப்படுகின்றன. பின்பு இவை மண்ணில் ஊட்டச்சத்தை பெற்று வளர்கின்றன.

தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கின்றன.

சில பூச்சிகளால் தாவரங்களின் இலைகள், வேர்கள், கிழங்குகள் சேதப்படுத்துகின்றன. இந்த பூச்சிகள் மரத்தின் மேலோ அல்லது இலை உட்புறமாகவோ இருக்கும். சில பூச்சிகளால் நன்மை ஏற்பட்டாலும் பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையே உள்ளன. இவற்றை உணவாக உட்கொள்ளும் பிராணிகளால் தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.

பொதுவாக தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களின் மகரந்த சேர்க்கை வழியினால் தான். பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவை பூச்சிகள் வாயிலாக மகரந்த சேர்க்கைக்கு உட்படுகின்றன.

பூச்சிகள் பூக்களில் உணவுண்ணும் போது அல்லது இனவிருத்திக்கான செயலில் ஈடுபடும் போது அல்லது எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வாற்கான இடமாக பூவைப் பயன்படுத்தும் போது இவை பூக்களின் மகரந்தச் செயற்கை நிகழ உதவுகின்றது.

குறிப்பாக தேனீக்கள், பம்பல்பீக்கள், சிரோனோமிடுகள், குளவிகள், அந்துப்பூச்சிகள், வண்டுகள், எறும்புகள் போன்றன மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.

விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதன் மூலம் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நம் முன்னோர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினார்கள். குறிப்பாக கால்நடையான மாடு விவசாயத்திற்குப் பெரிதும் பயன்பட்டது.

மாட்டைப் பயன்படுத்தியே மண்னை உழுதனர். அதன் பின்பே விதை விதைப்பர். எனவே இதன் மூலம் பிராணிகள் தாவர வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்கு உதவியாக அமையப்பெற்றதனைக் காணமுடிகின்றது.

You May Also Like :
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்
நார்ச்சத்து மிக்க உணவுகள்