இந்த பதிவில் “நேர்மை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
முன்னொரு காலத்தில் நேர்மையான மனிதர்கள் அதிகமாக வாழ்ந்தனர். நேர்மையாக உழைப்பவர்கள் முன்னுரிமை கொண்டு நடாத்தப்பட்டனர். ஆனால் இன்று அந்தநிலை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது.
Table of Contents
நேர்மை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நேர்மை எனும் உயரிய அறம்
- நேர்மை தரும் மனநிறைவு
- நேர்மை இல்லாதவர்களின் வாழ்வு
- நேர்மையாய் வாழ்ந்தவர்கள்
- நிகழ்காலம்
- முடிவுரை
முன்னுரை
“நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” என்கிறார் பொய்யாமொழி புலவர்.
நேர்மை எனும் விழுமியமே எப்போதும் சீரிய வாழ்வினை அடைய வழிவகுக்கும். பொய்மையும் சுயநலமும் உடையவர்கள் சகமனிதர்களுடைய அன்பை பெற்றுவிட முடியாது.
ஆனால் நேர்மையான மனிதர்கள் பிற மனிதர்களது நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருப்பார்கள் வசதியாயும் ஆடம்பரமாயும் வாழாவிட்டாலும் மனநிறைவோடும் உண்மையானவர்களோடும் வாழ முடியும்.
செய்கின்ற தொழில், வாழ்கின்ற வாழ்க்கை, சந்திக்கின்ற மனிதர்கள் என முடிந்தவரைக்கும் மனசாட்சிக்கு உண்மையாக நேர்மையாக இருப்பது தான் ஒரு மனிதனுடைய ஆகச்சிறந்த வாழ்க்கையாக இருக்கும்.
இக்கட்டுரையில் நேர்மை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் இன்றைய நிகழ்கால போக்குகள் பற்றியும் நோக்கப்படுகிறது.
நேர்மை எனும் உயரிய அறம்
மனிதர்கள் வாழ்நாளில் பெரும் பணக்காரராயிருக்கலாம். கல்விமானாக கூட இருக்கலாம் ஆனால் அவர் நேர்மை தவறியவராக இருந்தால் அனைத்தும் வீணாகும். நேர்மை என்பது மிக உயரிய அறமாகும்.
இன்றைய காலத்தில் நேர்மையாக இருப்பவர்கள் “குதிரை கொம்பாக” மிக அரிதாக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குரியவர்களாவர்.
நேர்மையாய் இருப்பவர்கள் ஏழ்மையில் இருந்தாலும் அவர்களது வாழ்க்கை செம்மையாகவிருக்கும் அவர்களிடத்து பேரன்பு இருக்கும். உயரிய சிந்தனை நல்லெண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
பணம் தான் பெரிது என்று எண்ணி ஓடி கொண்டிருக்கும் இந்த காலத்தில் சுயநலமின்றி மனிதத்துடன் வாழ்கின்ற மனிதர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
நேர்மை தரும் மனநிறைவு
நேர்மையாகவும் உண்மையாகவும் உழைப்பதனால் கிடைக்கும் சிறிய தொகை ஊதியம் கூட மிகச்சிறந்த மனநிறைவை தரும் கோடி கொடுத்தாலும் நேர்மை தருகின்ற மனநிறைவை யாராலும் பெற்றுவிட முடியாது.
தவறான வழியில் கிடைத்த உயர்தர உணவுகளை விடவும் நல்வழியில் ஈட்டப்படும் ஏழைகளின் உணவு அறுசுவையானது.
மன நிம்மதி தேடி அலைகின்ற மனிதர்களுக்கு அடுத்தவர்களை வேதனை அடைய செய்யாத நேர்மையான வாழ்வின் வழி சிறந்த தீர்வாக இருக்கும் பேராசை கொள்ளாது எளிமையை விரும்பும் அனைவருக்கும் வாழ்வு நலமானதாய் அமையும்.
நேர்மை இல்லாதவர்களின் வாழ்வு
நேர்மை இல்லாதவர்கள் அடுத்தவர்களது உழைப்பை சுரண்டி ஏமாற்றி பிழைப்பவர்களாக இருப்பார்கள். இவர்களது வாழ்வு இருட்டினிலே வாழும் வெளவாலின் வாழ்க்கைக்கு ஒப்பானது.
பயந்து ஒழிந்து அனைவராலும் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுவதாய் அமையும் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது போல நேர்மை அற்றவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் அவர்களை நிச்சயம் தண்டிக்கும்.
நேர்மை தவறியவர்கள் அனைவராலும் வெறுக்கப்படுவார்கள் என்பது யாவரும் அறிந்ததே தன்னை மாத்திரம் கவனம் கொண்டு பிறரை வருத்தி வாழும் சுயநல மிருகங்கள் இந்த உலகில் இன்று அதிகமாகி விட்டமை வேதனைக்குரியதாகும்.
நேர்மையாய் வாழ்ந்தவர்கள்
நேர்மையும் உண்மையும் உடைய மனிதர்களிடத்தே இயல்பாகவே ஒரு கம்பீரம் உருவாகும். இதனால் தான் உயரிய இடங்களை அவர்களால் அடைந்து கொள்ள முடிந்தது.
“உண்மையும் நேர்மையும் இருந்தால் தான் அஞ்சாத நெஞ்சம் உடையவர்களாக இருக்க முடியும்” என்கிறார் நேதாஜி.
மேலும் உதாரணமாக இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவை தலைநிமிர செய்த மிகச் சிறந்த தலைவர்களான “மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், ஜவர்கலால் நேரு, டாக்டர் அம்பேத்கர், APJ அப்துல்கலாம்” போன்றவர்களை குறிப்பிடலாம்.
அவற்றிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் உடைய வாழ்க்கை ஆட்சி என்பது நேர்மைக்கு மிகச்சிறந்த எடுத்து காட்டாக இருந்தது.
நிகழ்காலம்
மிகச்சிறந்த தலைவர்களது வியர்வையாலும் குருதியாலும் உருவான சுதந்திர இந்தியா இன்று ஊழல் எனும் சாக்கடையாக மாறியுள்ளது.
நேர்மையற்ற தலைவர்கள், ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்த அதிகாரிகள் என்று எல்லா துறைகளிலும் நேர்மையற்றவர்கள் அதிகமாகி விட்டனர் நேர்மையாக இருப்பவர்களை ஏளனமாக பார்க்கும் அளவுக்கு மக்கள் மாறிவிட்டனர்.
எல்லா துறைகளிலும் இலஞ்சம் ஊழல் அதிகரித்து மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நிகழ்காலம் துன்பியல் நிறைந்ததாக மாறியுள்ளது. இனி வரும் காலம் இளைஞர்கள் காலம் அவர்களால் தான் இந்த தேசம் சிறந்த தேசமாக மாற வேண்டும்.
முடிவுரை
முன்னொரு காலத்தில் நேர்மையான மனிதர்கள் அதிகமாக வாழ்ந்தனர். நேர்மையாக உழைப்பவர்கள் முன்னுரிமை கொண்டு நடாத்தப்பட்டனர். ஆனால் இன்று அந்தநிலை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது.
எது எவ்வாறாக இருப்பினும் முடிந்தவரை நேர்மையாக வாழ்வோம். இவ்வுலகில் அனைவரும் சமத்துவத்துடன் நேர்மையை கடைப்பிடித்தால் வாழ்வாங்கு வாழலாம் என்பது திண்ணம். இல்லாது விடின் அழிவை நோக்கிய ஆரம்பமாக இது அமைந்துவிடும்.
You May Also Like :