இந்த பதிவில் “நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.
உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக நீர் விளங்குகின்றது. நீர் வளம் இன்று அருகி வருகிறது. இதனை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும்.
Table of Contents
நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நீரின் பிறப்பிடம்
- நீரின் முக்கியத்துவம்
- நீர் மாசடைதல்
- நீர்ப் பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை
“ஆழி சூழ் உலகுˮ என்பதற்கு ஏற்ப இவ்வுலகில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்களிலே நீர் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இயற்கை வளமானது இயல்பானது. யாரும் உருவாக்குவதில்லை. இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
இவ்வகையில் நீர் வளத்தைப் பாதுகாப்பது நமது கடமையே ஆகும். நீர் வளம் அதன் பாதுகாப்பு முக்கியத்துவம் அவசியம் என்பன பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நீரின் பிறப்பிடம்
நீரானது ஐதரசன்⸴ ஒட்சிசன் ஆகிய மூலக்கூறுகளால் உருவான பங்கிட்டுப் பிணைப்பாகும். பூமியானது 71% நீரினாலும் 29% நிலத்தாலும் உருவானதாகும்.
சமுத்திரங்கள்⸴ கடல்⸴ ஏரி⸴ குட்டை⸴ ஆறுகள்⸴ குளங்கள்⸴ தரைக்கீழ் நீர்⸴ பனிக்கட்டி⸴ நீர் ஊற்றுகள் போன்றவை நீர் மூலாதாரங்கள் ஆகும்.
நீர் ஆவியாகி ஒடுங்கிப் பின் படிவு வீழ்ச்சியாகி ஓடும் நீராகி மீண்டும் நீர் நிலைகளை அடைந்து மீண்டும் ஆவியாகும் செயற்பாட்டைச் செய்கின்றன. நிறம்⸴ சுவை அற்ற நீரானது ஒளி புகும் தன்மையுடையது.
நீரின் முக்கியத்துவம்
நீரே மக்களின் வாழ்வாதாரமாகும். அது மட்டுமன்றி உயிரினங்களுக்கும் உயிர் ஆதாரமாக இருப்பதால் நீர் முக்கியம் பெறுகின்றது. மனிதனின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் நீர் மிகவும் அவசியமானது ஆகும்.
விவசாயம் செழிப்படைய நீர் முக்கியமானதாகும். தொழிற்சாலைகள் இயங்குவதற்கு நீர் முக்கியமானதாகும். உலகெங்கிலும் நீரின் பயன்பாடு 15% தொழிற்சாலைகளுக்கு என அளவிடப்பட்டுள்ளது.
நீர் மாசடைதல்
இன்று நீர் மாசுபாடு பிரச்சனையே பாரிய பிரச்சனையாக உள்ளது. உலகின் பல பகுதிகளில் நீர் நிலைகள் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீருடன் கலப்பதால் நீர் மாசடைவைச் சந்திக்கின்றன.
மருத்துவக் கழிவுகள்⸴ குப்பைகள் போன்றன நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. நிலச்சரிவு⸴ மண்ணரிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதாலும் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது.
இதனாலே தான் மனித குலம் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடுகின்றது. நீர் பற்றாக்குறை⸴ நோய்கள் போன்ற பிரச்சினைகள் பாரிய பிரச்சினைகளாக உள்ளன.
நீர்ப் பாதுகாப்பு
நீர் மாசடைவதாலும் நீர்ப் பற்றாக்குறையாலும் நீர் வளப் பாதுகாப்பு மிகவும் அவசியமானதாகும். மனித இருப்பைத் தக்கவைக்க நீரின் பாதுகாப்பு முதன்மையானதாகும்.
முற்காலத்தில் நீரை வீணாக கடலுடன் கலக்க விடாது குளங்கள்⸴ ஏரிகள்⸴ தடாகங்கள் போன்றவற்றை உருவாக்கிப் பாதுகாத்தனர். இவற்றை நாமும் மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கொட்டுதல் கூடாது. தொழிற்சாலைக் கழிவுகள் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அகற்றுதல் முக்கியமான ஒன்றாகும்.
நீர் நிலைகள் பாதுகாக்கப்படும் போது தான் நீர்வாழ் உயிரினங்களும் பாதுகாக்கப்படும். எனவே நீர்வாழ் உயிரினங்களின் இருப்புக்கும் நீர் பாதுகாப்பு இன்றியமையாததாகும்.
முடிவுரை
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதும்⸴ நீர் ஆதாரங்களை காக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் தார்மீகக் கடமையாகும்.
நீர் வளப் பாதுகாப்பினை மேற்கொள்ளாது விடின் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே நீர் வளங்களைப் பாதுகாக்க வேண்டும். நீர் வளத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும். நீர் வளத்தை பாதுகாப்போம்! நிம்மதியாக வாழ்வோம்!
You May Also Like :