நீரின்றி அமையாது உலகு கட்டுரை

Neerindri Amayathu Ulagu Katturai In Tamil

இந்த பதிவில் “நீரின்றி அமையாது உலகு கட்டுரை” பதிவை காணலாம்.

நீரை பாதுகாத்து நமக்கு அடுத்து வரும் தலைமுறையினரிடம் நாம் கையழிக்க வேண்டியது நமது கடமையாகும்.

நீரின்றி அமையாது உலகு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பூமியில் நீரின் பங்கு
  3. நீரின் முக்கியத்துவம்
  4. நீர் மூலங்கள்
  5. நீர் மாசடைதல்
  6. நீரை பாதுகாத்தல்
  7. முடிவுரை

முன்னுரை

“நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” என்கிறார் திருவள்ளுவர். இந்த பூமியின் ஆதாரமே நீர் தான் தண்ணீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த தொழிற்பாடுகளும் நடைபெறமாட்டாது.

இந்த பூமியில் பச்சை புற்கள் கூட தண்ணீர் இல்லாவிட்டால் முளைக்காது. பூமியிலே உள்ள எல்லா உயிரினங்களும் நீரை நம்பியே வாழ்கின்றன. தண்ணீர் இல்லாத பாலை நிலத்தில் வாழ்க்கை எவ்வாறிருக்கும்? என்பதை சிந்தித்து பார்த்தால் தண்ணீரின் அருமை புரிந்துவிடும்.

இக்கட்டுரையில் நீரின் முக்கியத்துவத்தையும் அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் காண்போம்.

பூமியில் நீரின் பங்கு

இந்த பூமியில் நீரானது திண்மம், திரவும், வாயு எனப்படும் மூன்று நிலைகளில் காணப்படுகின்றது. உலகத்தை சூழ்ந்து காணப்படுகின்ற சமுத்திரங்கள் மற்றும் கடல்கள் போன்ற நீர்நிலைகளில் 96 சதவீதமான நீரும். துருவ பகுதிகளில் உள்ள பனிக்கட்டி கவிப்புக்களாக 1.74 சதவீதமான நீரும் தரைக்கீழ் நீராக 1.69 சதவீதமான நீரும் காணப்படுகிறது. இந்த நீரானது நீரியல்வட்டம் எனும் செயன்முறை மூலமாக மாறாத அளவில் பேணப்படுகிறது.

உயிரங்கிகள் அனைத்திலும் நீர் காணப்படுகிறது. மனித உடலில் 60 சதவீதம் நீர் காணப்படுகிறது. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நீர் தான் உடலின் இயக்கத்துக்கு உதவும் முக்கியமான திரவமாக காணப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்

நீர் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? மனிதர்கள் நீர் அருந்தாமல் உயிர் வாழவே முடியாது. தாவரங்கள் வளர்வதற்கும் நீர் அவசியம்.

மழை பெய்யாது விடுமானால் இங்கே விவசாயத்தை நினைத்து பார்க்க முடியாது. உணவின்றியே உலகம் அழிந்துவிடும் இதனால் தான் திருவள்ளுவர் “விசும்பிற்றுழி விழின் அல்லால் பசும்புற்றலை காண்பதரிது” என்று வான்சிறப்பினை பாடுகிறார்.

பூமியிலே நீர் இருப்பதனால் தான் வெப்பம் தணிக்கப்படுகிறது. இல்லாது விடின் ஏனைய கோள்கள் போல உயிரினங்கள் வாழ முடியாதநிலை உருவாகி விடும். இந்த உலகம் பசுமையாகவும் அழகாகவும் பூத்தலும் காய்த்தலும் நிகழ நீர் தான் மூலாதாரமாய் இருக்கிறது.

நீர் மூலங்கள்

பூமிக்கு நீர் ஆனது மழையின் மூலம் கிடைக்கின்றது. பெய்கின்ற நீர் நீரோட்டங்களாக மாறி அருவிகள் நீர்வீழ்ச்சிகளாக ஓடுகின்றன. அவை பின்பு வேகம் குறைந்து நதிகளாக பாய்கின்றன. இந்த நதிகள் வழி எங்கும் குளங்களையும் குட்டைகளையும் உருவாக்குகின்றன. இந்த குளங்கள் ஏரிகள் மூலம் சேமிக்கபடுகின்ற நீர் ஊடுவடிதல் மூலமாக தரைக்கீழ் நீராக சேமிக்கப்படுகின்றன.

வரட்சியான கோடை நேரங்களில் மேற்பரப்பு நீர் வற்றி போனாலும் தரைக்கீழ் நீரானது மனிதர்களுக்கு கிடைக்கிறது.

சமுத்திரங்கள் உவர்நீரை அதிகம் கொண்டிருக்கின்றன. வளிண்டலத்திலும் நீராவி வடிவத்தில் நீர் காணப்படுகிறது. இவ்வாறு பல வடிவங்களில் நீர் பூமியில் காணப்படுகின்றது.

நீர் மாசடைதல்

இவ்வளவு தூரம் அவசியமானதும் பெறுமதியானதுமான நீரானது இயற்கையின் வரமாகும். அதனை மனிதர்கள் மாசடைய செய்து வருகின்றனர்.

தொழிற்சாலை கழிவுகள் நச்சு பொருட்கள் ஆபத்தான அமிலங்கள் நெகிழி குப்பைகள் போன்றனவற்றை மனிதன் நீரில் கலப்பதனால் நீர் மாசடைகிறது.

அத்துடன் அபிவிருத்தி எனும் பெயரில் குளங்கள் ஏரிகளை கூட ஆக்கிரமித்து தமது வாழ்விடங்களை அமைப்பதனால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது.

இவ்வகையான செயல்களால் சுத்தமான நீர் இன்றிய வரட்சியை நோக்கி உலகம் பயணித்து கொண்டிருக்கின்றது.

நீரை பாதுகாத்தல்

இன்றைக்கு மனிதர்கள் தொழில்நுட்பத்தில் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருந்தாலும் மனிதர்களால் தண்ணீரை உருவாக்க முடியாது. இது ஒரு இயற்கை வளம் ஆகையால் இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

இன்று நீரை ஒரு வர்த்தக பொருளாக கொண்டு மனிதர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும். தண்ணீரை விரயம் செய்யாது அதனை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம் நீரை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று நிகழுமாக இருந்தால் அது தண்ணீருக்காகவே நிகழும் என சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இங்கே உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் தண்ணீர் அவசியமானதாக இருக்கிறது.

வளர்ந்த நாடுகள் தண்ணீரை பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆனால் எமது நாடுகள் தான் மோசமாக நடந்து கொள்கின்றன. இயற்கையை நேசித்த ஒரு மக்கள் கூட்டம் நீரை பாதுகாக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

நீரை பாதுகாத்து நமக்கு அடுத்து வரும் தலைமுறையினரிடம் நாம் கையளிக்க வேண்டியது நமது கடமையாகும்.

You May Also Like :

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை

மழை நீர் சேகரிப்பு கட்டுரை தமிழ்