நான் விரும்பும் கவிஞர் கண்ணதாசன் கட்டுரை

kannadasan patri katturai in tamil

இந்த பதிவில் “நான் விரும்பும் கவிஞர் கண்ணதாசன் கட்டுரை” பதிவை காணலாம்.

தன் வரிகளால் தமிழ் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர் ஆவார்.

நான் விரும்பும் கவிஞர் கண்ணதாசன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழ்வும்
  3. மிகச்சிறந்த கவிஞர்
  4. தத்துவம்
  5. அர்த்தமுள்ள இந்து மதம்
  6. எழுதியவை
  7. முடிவுரை

முன்னுரை

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று தன் வரிகளால் தமிழ் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர் ஆவார்.

இவரது வரிகளின் தாக்கம் இன்னும் எம்மை விட்டு அகலாதவை வாழ்வனைத்தும் தான் கண்ட அனுபவங்களை அழகான தமிழில் இவர் படைத்திருக்கின்றார்.

வாழ்க்கை பற்றிய உண்மைகளை இவரை விட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது. கம்பன் மற்றும் பாரதியின் வழிவந்த உன்னத கவிஞன் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பும் வாழ்வும்

இவர் 1924 ஆம் ஆண்டு ஜீன் 24 ஆம் திகதி காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை “சாத்தப்பன் செட்டியார்” தாயின் பெயர் “விசாலாட்சி ஆச்சி” என்பதாகும்.

இவரது ஆரம்ப கல்வியினை சிறுகூடல்பட்டியில் தொடர்ந்தார். வகுப்பு எட்டுவரை கல்வி கற்ற இவர் பின் நாளில் சிறந்த கவிஞராக உருவெடுத்தார். பாரதியாரின் கவிதைகளால் கவரப்பட்ட இவர் மிகச்சிறந்த கவிதை படைப்புக்களால் தமிழ் திரையுலகை ஆண்ட பாடலாசிரியர் ஆவார்.

தனக்கு கவி ஆற்றல் ஆனது கம்பராமாயணத்தை கற்றதில் இருந்து உருவானதாக சொல்வார். அவருக்கு மிகவும் பிடித்த நூலும் அதுவே. வாழ்வனைத்தும் நிறைய கடினமான சூழ்நிலைகளை சந்தித்த இவர் எல்லா சூழ்நிலைகளுக்கும் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த கவிஞர்

இவர் தமிழில் நான்காயிரத்துக்கும் அதிகமான கவிதைகளை எழுதியுள்ளார். 5000க்கும் அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் முதன் முதலில் “கன்னியின் காதலி” என்ற திரைப்படத்தில் தனது முதல் பாடலை எழுதி இருந்தார். அந்த பாடல் “கலங்காதே மனமே” என்ற பாடலாகும் அதுபோல இவர் எழுதிய இறுதி பாடல் “கண்ணே கலைமானே” என்று துவங்குகின்றது.

“உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு” என்ற வரிகள் வாழ்வின் மிகச்சிறந்த தத்துவ பாடலாகும். இவர் எழுதிய தத்துவ பாடல்கள் காலத்தால் அழியாதவை இதனால் தான் இவர் அனைவராலும் அதிகம் கொண்டாடப்படுகின்ற சிறந்த கவிஞராக போற்றப்படுகின்றார்.

தத்துவம்

வாழ்க்கையினுடைய நிலையற்ற தன்மை, மனிதர்களுடைய எண்ணங்கள், காதல், நட்பு, துரோகம் என வாழ்வில் ஏற்படும் இன்னலான நிலைகளில் மனித மனங்களின் காயங்களுக்கு மருத்து போடும் கைதேர்ந்த வைத்தியர் இவர்.

இவை அனைத்தும் இவர் கண்ட அனுபவங்களாக தான் இருக்க முடியும் “கடவுள் ஏன் கல்லானார் இந்த பாழாய்போன மனிதர்களாலே” என்று மனித மனங்களின் இழிவு நிலையை அழகாக எழுதியுள்ளார்.

“காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா” என்று பணத்தின் முக்கியத்தை அழகாக எழுதியிருப்பார். இவ்வாறாக அவர் தனது தத்துவ வரிகளால் மனங்களை தேற்றி இருப்பார். காலத்தை கணிக்கும் மிகச்சிறந்த கவிஞராக இவர் அறியப்படுகிறார்.

அர்த்தமுள்ள இந்து மதம்

கண்ணதாசன் இந்து சமயபற்றாளர் இவர் இந்து மதத்தின் விழுமியங்களையும் வாழ்வியலையும் பற்றி அழகான முறையில் “அர்த்தமுள்ள இந்து மதம்” எனும் நூலில் எழுதி இருப்பார்.

இந்து மதத்தில் காணப்படும் உண்மையான தத்துவ நிலைப்பாடுகளை இவர் எழுதி இருப்பார் “அர்த்தமுள்ள இந்து மதம்” ஒரு புகழ்பெற்ற நூலாகும்.

ஞானம் என்பது யாது? அது சட்டைய போடும் போது அது கிழிந்த சட்டை என்று தெரிந்தே போடுவது பின்பு ஐயோ இது கிழிந்திருக்கின்றதே என்று அங்கலாய்க்காமல் இருப்பது. அதன் பெயரே ஞானம்” என்று வாழ்க்கையினை பற்றிய முழுமையான தத்துவங்களை அழகாக எழுதியிருப்பார்.

இந்த நூலை படிப்பதன் மூலம் வாழ்வின் அர்த்தங்களை நன்றாக புரிந்து கொள்ளமுடியும்.

எழுதியவை

இவர் திரைப்பட பாடல்களை மட்டுமல்லாது. பல நூல்களையும் எழுதி இருக்கிறார். இந்து சமய தத்துவங்களை கூறும் “அர்த்தமுள்ள இந்து மதம்” மற்றும் இயேசு கிறிஸ்துவை பற்றிய “ இயேசு காவியம்” “வனவாசம்” “மனவாசம்” போன்ற நூல்களை எழுதி இருக்கிறார்.

மனதில் தோன்றும் எண்ணங்களை அஞ்சாது அப்படியே எழுதிய கவிஞர் இவராவார். இவர் “சண்டமாருதம்” “திருமகள்” “திரை ஒலி” “தென்றல்” “தென்றல் திரை” “முல்லை” ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தார்.

மற்றும் இன்றுவரை திரைத்துறை எழுத்தாளர்களால் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இவரது எழுத்துக்கள் இருக்கின்றன என்றால் மிகையல்ல.

முடிவுரை

வாழ்க்கையில் அனுபவமே கடவுள் என்றார் இவர். வாழ்க்கையில் எழுகின்ற எல்லா பிரச்சனைகளுக்கும் சந்தேகங்களுக்கும் இவரது வரிகள் அருமருந்தாகும்.

இவருடைய வாழ்க்கையில் இவர் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம் இருந்தாலும் இவர் சாதித்த உயரம் மிக உயரம் வரிகளுக்கு வரி இவர் மனித வாழ்க்கைக்கு தேவையான சிறந்த கருத்துக்களை கூறி சென்றிருக்கிறார்.

ஆதலால் தான் நான் இவரை மிகவும் விரும்புகின்றேன். இவரது வரிகளை வாசித்து இந்த உலகம் பயன்பெற வேண்டும்.

You May Also Like :

தனிமனித ஒழுக்கம் கட்டுரை

காலம் பொன் போன்றது கட்டுரை