நான் ஒரு வானூர்தி கட்டுரை

naan oru vaanurthi katturai

இந்த பதிவில் “நான் ஒரு வானூர்தி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு கட்டுரை (02) பதிவை காணலாம்.

வானூர்தி போன்று உயர பறந்து இந்த உலகின் அழகை ரசித்து மகிழ எனக்குள் எழும் ஆசையின் வெளிப்பாடே இந்த கட்டுரை.

நான் ஒரு வானூர்தி கட்டுரை – 1

ஒரு பறவையைப் போல் சிறகுகளைக் கொண்டு வானவெளியில் பறக்கும் நான் ஒரு வானூர்தியாவேன். மேகங்களிற்கிடையிலும், மலைகளிகளின் மேலாகவும் சமுத்திரங்களைத் தாண்டியும் பறப்பதே என் பிரதான வேலை.

உயரமாக கட்டியெழுப்பப்பட்ட கட்டடங்களிற்கு மேலாக பறக்கும் போது பார்ப்பதற்கு சிறிய பறவையை போன்ற உருவமாகவே தோன்றுவேன்.

ஆனால் உண்மையில் பறவையைப் போலல்லாமல் பார்ப்பதற்கு பெரிய உருவமாக, பல எடை கொண்டவனாக இருக்கும் என்னை விரும்பாத சிறுவர்களே இல்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருமுறையாவது என்னில் பயணிக்க ஆசை கொள்வர்.

பறவைகளை உதாரணமாக வைத்தே நான் உருவாக்கப்பட்டுள்ளேன். பல்வேறு உறுதியான உலோகங்களாலும், நெகிழிப் பொருட்களையும் கொண்டு புகழ் பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவமைக்கப்பட்டுள்ளேன்.

பல எண்ணிக்கையிலான பல்வேறு தொழிற்பாடுகளைக் கொண்ட இயந்திரங்கள் என்னுள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு நுட்பமான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட என்னை யாராலும் எளிதாக இயக்கி விட முடியாது.

அதற்கென தனியாக பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த விமானிகளாலே என்னை இயக்க முடியும். ஒவ்வொரு விமானத்திற்குள்ளும் இரண்டிற்கு மேற்பட்ட விமானிகள் பயணம் செய்வர்.

மக்கள் போக்குவரத்து, பொருட்கள் ஏற்றுமதி, மருத்துவ போக்குவரத்து மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற தேவைகளுக்காக என்னை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஏனைய போக்குவரத்து சாதனங்களைப் போலல்லாமல் நான் விரைவாக பயணிப்பதனால் மக்கள் தமது தூர பயணங்களுக்கு என்னைத் தெரிவு செய்வார்கள்.

நூற்றுக் கணக்கான மனிதர்களையும், பல்வேறு பொருட்களையும் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து நாடு நாடாக பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

வானில் என் சிறகுகளைக் கொண்டு பறவைகளை விட வேகமாக பறக்கும் எனக்கு, மற்றவர்களிற்கு உதவியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

நான் ஒரு வானூர்தி கட்டுரை – 2

பயணங்களை இலகுவாக்கவும், ஏனைய பிற அவசர தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட என்னை வானூர்தி என அழைப்பர். நான் 1903ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ரைட்ஸ் சகோதரர்களால் உருவாக்கப்பட்டேன்.

பறவைகளைப் போல் மனிதர்களும் வானில் பறக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு மற்றும் விடாமுயற்சியாலே நான் இந்த உலகில் உருவாக்கப்பட்டேன்.

ஏனைய வாகனங்களைப் போலல்லாமல் நான் நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கொண்டும், பல்வேறு எடை கொண்ட பொருட்களை ஏற்றியும் பல்லாயிரக் கணக்கான மைல்கள் மிக வேகமாக பயணம் செய்யக் கூடியவனாக படைக்கப்பட்டுள்ளேன்.

காற்றில் மிதந்தவாறு பயணிக்கும் நான் பறவைகளைப் போல் சிறகடித்து பறப்பதில்லை. விமானத்தினுள் உணவு வசதி, மின்னேற்றி வசதி, குளிரூட்டிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் காணப்படுவதனால் செல்வந்தர்கள் என்னில் விரும்பி பயணிப்பர்.

அதனை தவிர மனதிற்கு பிடித்த இசையை கேட்கும் வசதியும், பிடித்த திரைப்படத்தை பார்த்தவாறு பயணிக்கும் வசதியும் உண்டு. எமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு பணியாளர்கள் சேவை வழங்குவதால் அனைவராலும் விரும்பி பயணப்படும் ஊடகமாக உள்ளேன்.

வானத்தில் சுதந்திரமாக பறக்க முடிவதனால் மகிழ்ச்சியாக உணர்வேன். தடங்கல்கள் பல வந்திட்ட போதிலும் எந்த தடையை கண்டு நான் அஞ்சாமல் வேகமாக துணிவாக பறப்பேன்.

அனைவரும் என்னை மெய்மறந்து வேடிக்கை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உணர்வேன். நூற்றுக்கணக்கான பயணிகளை எந்தவித ஆபத்தும் நேராமல் தொலை தேசங்களிற்கு பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பேன்.

சிறுவர்கள் என்னில் பயணிக்க ஆர்வமாக இருப்பதனால் அவர்களிற்கு ஊக்கமளிப்பவனாக விளங்குகின்றேன்.

You May Also Like :

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை

நான் ஒரு பறவையானால் கட்டுரை