நவராத்திரி பற்றிய கட்டுரை

Navarathri Katturai In Tamil

இந்த பதிவில் “நவராத்திரி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இந்து சமயத்தை பின்பற்றுகின்ற மக்களால் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக நவராத்திரி காணப்படுகிறது.

நவராத்திரி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நவராத்திரி உருவான கதை
  3. சக்திகளின் வழிபாடு
  4. தத்துவம்
  5. தீமையை அழிக்கும் பண்டிகை
  6. விழுமியங்கள்
  7. முடிவுரை

முன்னுரை

இந்து சமயத்தை பின்பற்றுகின்ற மக்களால் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக நவராத்திரி காணப்படுகிறது. நவராத்திரி என்பது “நவ + இராத்திரி” என்பன சேர்ந்தே உருவானது.

ஒன்பது இரவுகள் என பொருள் கொள்ளப்படுகிறது. சக்திக்காக அனுஸ்டிக்கப்படும் ஒன்பது இரவுகள் என்பது இதன் பொருளாகும்.

உலகமெங்கும் இந்துக்கள் இதனை பண்டிகையினை போல மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இக்கட்டுரையில் இதன் வரலாறு அதன் அர்த்தங்கள் சிறப்புகள் போன்றவற்றை நோக்கலாம்.

நவராத்திரி உருவான கதை

மகிசாசுரன் எனும் அரக்கன் பிரம்ம தேவரிடம் கடும் தவம் புரிந்து தனக்கு யாராலும் அழிவில்லை ஒரு கன்னி பெண்ணால் தான் அழிவு உண்டாகும் எனும் வரம் பெற்றான். இதனால் அவன் தேவர்களை துன்புறுத்த துவங்கினான்.

இதனால் பாதிக்கப்பட்ட இந்த உலகத்தையும் தேவர்களையும் காக்க “சக்தி” பெண் உருவம் கொண்டு பூமியில் பிறந்தார்.

மகிசாசுரனை வதம் செய்வதற்காக போர் புரிந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது என புராணங்களில் கூறப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி எனவும் அனுஸ்டிக்கப்படுகிறது.

சக்திகளின் வழிபாடு

இந்துக்களின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் பிரம்மா, விஸ்னு, சிவன் எனப்படும் தெய்வங்களினுடைய சக்திகளான சரஸ்வதி, மஹாலக்ஷ்மி, துர்க்கை எனப்படும் சக்திகளுக்காக இந்த விரதம் நோற்கப்படுகிறது.

முதல் மூன்று தினங்களும் வீரத்தை வேண்டி துர்க்கையினையும் அடுத்த மூன்று தினங்களும் செல்வத்தை வேண்டி மஹாலக்ஷ்மியினையும் இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டி சரஸ்வதியும் வழிபடுவார்கள்.

இவ்வாறு விரதம் அனுஸ்டித்து மூன்று சக்திகளையும் வழிபடுவதனால் வீரம், கல்வி, செல்வம் என்பன வாழ்வில் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

தத்துவம்

இந்துக்களின் இந்த நவராத்திரி காலம் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகிறது. தீமைகளை இந்த உலகில் அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தியை வழிபடுகின்ற காலப்பகுதியாக இதை கருதுகின்றனர்.

அறியாமை மற்றும் துன்பங்கள் நீங்கி வாழ்வில் ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நவராத்திரி விழா அனுஸ்டிக்கப்படுகிறது.

அனைத்து இடங்களிலும் சக்தி நிறைந்திருக்கிறாள் என்பதை வெளிக்காட்டும் வகையில் கொலு வைக்கும் நிகழ்வும் இடம்பெறுவதனை காணலாம்.

தீமையை அழிக்கும் பண்டிகை

மகிசாசுரன் என்ற அரக்கனை அழித்து இந்த உலகத்துக்கு நன்மையை அருளிய சக்தி இந்த உலகத்தில் தமது வாழ்வில் உள்ள கஷ்ரங்கள், துன்பங்கள், நோய்கள் அனைத்தையும் இல்லாது ஒழிப்பார் என்ற நம்பிக்கையில் வழிபாடு இடம் பெறுகிறது.

அலங்கார விளக்குகள், ஆடல்பாடல் கலைகள் என தீயவைகள் நீங்கி மகிழ்ச்சியாக மக்கள் இந்த காலப்பகுதியை கொண்டாடுவார்கள் வட இந்தியாவில் இந்த நவராத்திரி அதிகம் பிரபல்யமாக கொண்டாடப்படுகிறது.

விழுமியங்கள்

வாழ்க்கைக்கு தேவையான மூன்று முக்கியமான கல்வி, வீரம், செல்வம் என்பனவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போது வாழ்வில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற விடயத்தை கற்று தருவதாக உள்ளது.

விரதகாலங்களில் உணவை விடுத்து விரதம் காப்பார்கள் இது பசி என்ற உணர்வின் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு உணர்த்துகிறது.

மற்றும் இந்த விரத காலங்களில் வீடுகளை துப்பரவாகவும் கோலங்கள் போட்டு அழகாகவும் வைத்திருப்பர் இது மக்களிடையே ஒரு அழகான வாழ்வியலை உருவாக்குகிறது.

முடிவுரை

இந்த நவராத்திரி விரதமானது மக்கள் மனதில் மகிழ்ச்சியினையும் பக்தி உணர்வினையும் விதைப்பதாக இருக்கிறது.

வீடுகளிலும் ஆலயங்களிலும் மக்கள் ஒன்றாக கூடி பக்தி பாடல்களை இசைத்து சக்தியின் மகிமைகளை பேசி மகிழ்ச்சியாக இந்த விரதத்தை அனுஸ்டிப்பார்கள் விதம் விதமாக உணவு பண்டங்களை தயாரித்து ஒற்றுமையாக உண்பார்கள்.

உலகமெங்கும் இந்துக்களை பொறுத்த வரையில் இது ஒரு பண்டிகையாக அனுஷ்டிக்கப்படுவது சிறப்பான விடயமாகும்.

You May Also Like :

காலம் பொன் போன்றது கட்டுரை

அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை