நகராட்சி என்றால் என்ன

nagaratchi enral enna

தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என இருவகையாகப் பிரிக்கலாம். இவற்றுள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற மூன்று அமைப்புக்கள் உள்ளடங்கும்.

நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிக்கு அரசு அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர்கள் அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகரமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார்.

இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

தமிழகத்தில் மொத்தம் 152 நகராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் நகராட்சிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தின் 74 வது திருத்தச் சட்டம் 1992ன் விதிகளின் படி இயங்குகிறது. 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 30 பேரூராட்சிகளைக் கொண்டு, 28 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி மன்றம் இயற்றும் தீர்மானங்களை செயல்படுத்த நகராட்சி அலுவலகம் உள்ளது.

வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி, கேளிக்கை வரி, விளம்பர வரி, பயனீட்டாளர் கட்டணம், நிறுவனத்தின் மீதான வரி, நுழைவு வரி, வணிக வளாகங்கள் வாடகை, பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய், அரசு மானியம், மாநில நிதி பகிர்வு, மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி போன்றவைகள் முக்கிய வருவாய்கள் ஆகும்.

நகராட்சி என்றால் என்ன

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு மாநில அரசுக்கு உட்பட்ட நகரங்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம் நகராட்சி மன்றம் ஆகும்.

அதாவது, நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்

பொது சுகாதாரம் – துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை, மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு, குடிநீர் வழங்கல், தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு,

கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்கு செய்தல், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல், பிறப்பு-இறப்பு பதிவு, மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்,

பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு, மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல், பொதுத் தெருக்களைக் கட்டுதல் மற்றும் பராமரித்தல், பொது மருத்துவமனை, சாக்கடை அமைப்பு, தொடக்கப் பள்ளிகள், பொது தெருக்களில் விளக்குகள், நகரின் சுகாதார நிலையைக் கவனிப்பது ஆகியவை அடங்கும்.

மேலும், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல், பொது வாசிப்பு அறைகள், பூங்காக்கள் மற்றும் திரையரங்குகள், தினசரி சந்தை நடத்துதல், டைரி நிறுவனங்கள், பேரிடர் காலத்தில் சமூக சேவை செய்தல்

போன்ற உடனடி ஆர்வமுள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் விருப்பத்தேர்வு அல்லது விருப்பச் செயல்பாடுகளில் அடங்கும்.

Read more: மாநகராட்சி என்றால் என்ன

பேரூராட்சி என்றால் என்ன