இந்த பதிவில் “தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை” பதிவை காணலாம்.
சிறுகதைகள் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடியது. தமிழில் சிறுகதைகளுக்கு தனி இடம் இருக்கின்றது.
Table of Contents
தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- சிறுகதை இலக்கணம்
- சிறுகதை தோன்றிய சூழல்
- தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள்
- தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கான காரணங்கள்
- முடிவுரை
முன்னுரை
உலக மக்கள் காலம் காலமாக கதை சொல்லுவதையும்⸴ கதை கேட்பதையும் மரபாகக் கொண்டுள்ளனர். இது எல்லா மக்களிடையேயுமுள்ள வாய்மொழி மரபாகும்.
நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குழுவாகவும் அமர்ந்து கதை கூறி தமது பொழுதைக் கழித்தனர். தமிழர்கள் காலம் தோறும் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர்.
ராமாயணம்⸴ புராணக் கதைகள்⸴ கிராமியக் கதைகள்⸴ பஞ்சதந்திரக் கதைகள்⸴ தெனாலிராமன் கதைகள்⸴ மரியாதைராமன் கதைகள் போன்றன அவற்றுள் சிலவாகும்.
இக்கதைகள் வாழ்வியல் ஒழுக்கங்கள்⸴ நீதி தவறாமை போன்ற பல ஒழுக்க நெறிகளை வலியுறுத்துகின்றன. இக்கட்டுரையில் தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி நோக்கலாம்.
சிறுகதை இலக்கணம்
அரை மணி நேரத்துக்குள் படித்து முடிக்கக் கூடியதாகவுள்ளதாகவும் 3000 சொற்களுக்கு மேற்படாததுமாகவுள்ளவை சிறுகதைகளாகும்.
“செட்ஜ்விக்” என்பவர் சிறுகதை பற்றி விளக்கம் கூறும் போது “தொடக்கமும் முடிவும்” குதிரை பந்தயம் போன்று இருக்க வேண்டும் என்கிறார்.
பழைய கதைகள் செய்யுள் வடிவில் இருந்தது. இவை பழங்கதைகள்⸴ தெய்வங்கள், அதிபாக்கியசாலிகள் பற்றியவையாகக் காணப்பட்டன.
இன்று சிறுகதை இலக்கியங்களில் பல மாற்றங்கள் எழுந்துள்ளன. சமூக வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைப்பதாகவுள்ளன. இவை புத்திலக்கிய (நவீன இலக்கியம்) வகையைச் சார்ந்தவையாகும்.
சிறுகதை தோன்றிய சூழல்
மேலைநாட்டுத் தொடர்பினால்தான் தமிழில் இலக்கிய வகை உள்நுழைய காரணமாகியது. தமிழில் செழித்த இலக்கியங்களில் ஒன்றாக சிறுகதைகள் காணப்படுகின்றன.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும்⸴ வடிவிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அச்சுப்பொறியின் பயன்பட்டாலும் ஆங்கில மொழி அறிமுகத்தாலும் சிறுகதை வழக்கில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.
வாய்மொழியால் பேணப்பட்டவை நூல் வடிவமானது. இவ்வாறு முதன் முதலில் வெளிவந்த சிறுகதை வா.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் ஆகும். இவரே சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
இதனை தொடர்ந்து பல சிறுகதைகள் வெளிவந்தன. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.
தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள்
தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அதில் சிலரை குறிப்பிட்டு கூறலாம். ந.பிச்சமூர்த்தி⸴ கல்கி⸴ ராஜகோபாலன்⸴ புதுமைப்பித்தன்⸴ கு.அழகிரிசாமி⸴ வல்லிக்கண்ணன்⸴ ஜெயகாந்தன் போன்றோர் சிறப்பிடம் பெற்றவர்களாவர்.
கல்கியின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி ஆகும். காந்திய சிந்தனை மிக்கவராவர். நாட்டுப்பற்றும்⸴ தமிழ்ப்பற்றும் இவரது கதைகளில் காணலாம். ஒற்றை ரோஜா⸴ ஏழையின் கண்ணீர்⸴ பவானி மயிலைகாளை⸴ கணையாழியின் கனவு ஆகியன இவரது சிறுகதைகளில் சிலவாகும்.
கு.பராஜகோபாலன் இவரது விடியுமா என்ற சிறுகதை தான் தமிழ் சிறுகதைகளின் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும்.
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கான காரணங்கள்
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு சிறுகதை எழுத்தாளர்கள் துணை புரிந்துள்ளனர். கல்கி, பிச்சமூர்த்தி, ராஜகோபாலன் போன்றோர்கள் இவர்களுள் சிலராவர்.
இவர்கள் மட்டுமல்லாது பிறமொழிக் கதைகளை மொழி பெயர்த்து சிறுகதை வளர காரணமாக சுப்ரமணிய பாரதியார்⸴ வங்காள எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் போன்றோர்களும் முக்கியம் வகிக்கின்றனர்.
சிறுகதை வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தது இதழ்களாகும். குறிப்பாக மணிக்கொடி இதழை கூறலாம். இதனைத் தொடர்ந்து பல இதழ்கள் சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின.
மேலும் தொழில்நுட்பம் சிறுகதை வளர்ச்சிக்கு துணை புரிகின்றது. இணையத்தளத்தின் ஊடாகவும் அலைபேசி வாட்ஸ்அப் போன்ற செயலிகளும் சிறுகதையை மங்கச் செய்யாது வளர வைத்து வருகின்றன.
முடிவுரை
தமிழ்ச் சிறுகதைகளானவை காலத்திற்கேற்ப வளர்ந்து வந்துள்ளன. இன்றைய காலத்திற்கேற்ப ஒரு பக்கக் கதை⸴ அரைப் பக்க கதை⸴ காற்பக்கக் கதை என தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது.
உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச் சிறுகதைகளையும் வளர்த்தெடுத்த எழுத்தாளர்களையும் என்றும் தமிழுலகம் மறவாது. அவர் வழி நாமும் நடப்போம் தமிழைக் காப்போம்.
You May Also Like :