தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை

tamilnattin perumaigal katturai in tamil

இந்த பதிவில் “தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ் நாட்டின் பெருமைகளைக் கூற வார்த்தைகளே இல்லை என்றால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை

தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தமிழ்நாடு உருவான வரலாறு
  3. தமிழ்நாட்டின் புராதான நகரங்கள்
  4. பண்டைய தமிழகத்தின் சமூகப் பண்பாட்டுச் சிறப்புக்கள்
  5. தமிழ்நாட்டின் சிறப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியா மிகப்பெரிய கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பெருமை வாய்ந்த நாடாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் தமிழ்நாடு கலாச்சார பெருமையும், தொன்மையும் வாய்ந்ததாகும்.

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழ்நாட்டிற்கு உண்டு. இத்தகைய தமிழ் நாட்டின் பெருமைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தமிழ்நாடு உருவான வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது தற்போதைய தமிழ் நாடானது “மெட்ராஸ் பிரெசிடென்சி” என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இதன் கீழ் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இருந்தன.

1953 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் தனியாகப் பிரிந்தது, 1956-ம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி, இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி கர்நாடகா, கேரளா மாநிலங்கள் பிரிந்து சென்றன.

அந்த சமயத்தில் “மெட்ராஸ் ஸ்டேட்” என்பதை “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழத் தொடங்கின.

பல கட்ட போராட்டத்திற்கு பின்னர், இறுதியாக 1969 தை 14ம் திகதி தமிழ்நாடு என அதிகார பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் புராதான நகரங்கள்

உலக வரலாற்றில் சிறப்பு வாய்ந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் போன்று தழிழ் நாட்டிலும் பழமையான சிறப்பான நகரங்கள் இருந்தன. அதில் மதுரை, காஞ்சி மற்றும் பூம்புகார் போன்றவை புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளன.

பூம்புகார் நகரமானது பூகா மற்றும் காவிரிப் பூம்பட்டினம் போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நகரத்தின் துறைமுகமானது வணிகத்தில் முக்கியம் வகித்ததாக விளங்கியுள்ளது என்பதனைச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டிணப்பாலை போன்ற இலக்கியங்கள் மூலமாக அறியலாம்.

சங்கம் வளர்த்த நகரமாக மதுரை காணப்படுகின்றது. அக்காலப்பகுதியிலேயே மதுரையில் நாள் முழுவதும் வணிகம் நடைபெற்றதால் “தூங்கா” நகரம் என்று அழைக்கப்பட்டது.

காஞ்சி நகரில்தான் அதிகளவில் பள்ளிகள் நிறுவப்பட்டிருந்தன. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கவிஞர் காளிதாசனும், கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று திருநாவுக்கரசரும் காஞ்சி நகரைச் சிறப்பித்துள்ளனர்.

பண்டைய தமிழகத்தின் சமூகப் பண்பாட்டுச் சிறப்புக்கள்

உலகிலுள்ள பல பண்பாடுகளில் சிறந்ததும், முதன்மையானதுமான தமிழர் பண்பாடு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தார்கள்.

தமிழ்க் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா சிங்கப்பூர் என உலகம் முழவதும் தமிழர்களின் வாழ்க்கை முறைகளில் கலந்திருந்தது.

தமிழ்க் கலாசாரமானது மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புறக்கலை, தற்காப்புக்கலை, கட்டிடக்கலை, ஓவியம், சிற்பம், விளையாட்டு, தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின் வழியாக அனைத்திலுமே கலந்திருந்தது.

தமிழ்நாட்டின் சிறப்புகள்

இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களுக்கு இல்லாத தனிச்சிறப்புக்கள் பல தமிழ் நாட்டிற்குண்டு. தமிழ் நாடானது பல இயற்கை வளங்களைக் கொண்டு காணப்படுகின்றது.

இந்தியாவில் கிடைத்துள்ள 68% கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில்தான் உள்ளது. உலகில் மொழிக்கு கோவில் கட்டிய பெருமை தமிழுக்கு மட்டும்தான் உண்டு.

உலகிலேயே மிகச் சிறந்த நீதி நூலான ஆத்திச்சூடி அமையப் பெற்றது தமிழ் நாட்டிலேயேயாகும்.

முடிவுரை

தமிழ் நாட்டின் பெருமைகளைக் கூற வார்த்தைகளே இல்லை என்றால் அது மிகையாகாது. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துத் தந்துள்ள தமிழ்நாட்டின் பெயரை மேலும் பெருமையடையச் செய்வது தமிழர்களாகிய நம் அனைவரதும் தலையாய கடமை என்பதை மறந்துவிடலாகாது.

You May Also Like :
மொழியும் பண்பாடும் கட்டுரை
செம்மொழியான தமிழ் மொழியாம்