தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

Tamilar Panpadu Katturai In Tamil

இந்த பதிவில் பல பெருமைகளை கொண்ட “தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை” (Tamilar Panpadu Katturai In Tamil) தொகுப்பை காணலாம்.

உலகிலுள்ள பல பண்பாடுகளில் சிறந்ததும் முதன்மையானதுமாக தமிழ் பண்பாடு தமிழ் மக்களின் கலாச்சாரம் இருக்கின்றது.

மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்து வந்தார்கள்.

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தமிழர் பண்பாடு
  3. தமிழர் கலாச்சாரம்
  4. அருகி வரும் தமிழ் பண்பாடும் கலாச்சாரம்
  5. முடிவுரை

முன்னுரை

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா? பாருக்கு வீரத்தை சொன்னோமா? இல்லையா? எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?

என்று தமிழர் பெருமையை உலகறிய சொன்ன பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் தமிழர்களின் தொன்மையான பண்பாட்டையும் கலாச்சாரங்களையும் எடுத்து காட்டுகிறது.

செம்மொழியாகிய எம்மொழியும் அதன் நீண்டிருக்கும் பண்பாடும் கலாச்சாரமும் உலகத்தார் கண்டு வியக்கும் அதிசயமாகும். பல்லாயிரம் மொழிகள் புவியில் இருந்தாலும் எத்திசையிலும் பெருமைகொண்ட மொழியான தமிழ் தனக்கென தனித்துவமான பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் கொண்டது.

இன்றைக்கு பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சங்க காலங்களில் இருந்தே தமிழர்களின் தனித்துவமான பண்பாடும் அதனோடு சேர்ந்த வாழ்க்கை முறைகளையும் காண முடியும்.

தமிழர் கலாச்சாரம் பண்பாடு அருகிவரும் நிலை போன்ற விடயங்களை இக்கட்டுரை விளக்குகிறது.

தமிழர் பண்பாடு

“யாதுமூரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் உலகத்துக்கே சமத்துவத்தை விதைக்கிறார்.

பண்பாடு எனப்படுவது அதாவது பயிர் விளைகின்ற நிலத்தை உழுது பண்படுத்துவது போல மக்கள் தம் வாழ்க்கையினை நெறிப்படுத்துவதே பண்பாடாகும் தமிழர் பண்பாடும் அத்தகையதே. அதாவது “அறம் பொருள் இன்பம் வீடு” என்கின்ற விடயங்களை பின்பற்றி வாழ்வதே வாழ்க்கை பண்பாடாகும்.

அறத்தின் வழி வாழுதல் தமிழர் பண்பாடாகும் இதனை வள்ளுவர் “அழுக்காறு அவா வெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்று தமிழ் பண்பாடு அறம் சார்ந்தது என்று உலகுக்கே எடுத்து காட்டுகிறார்.

வரவேற்றல் என்கிற பண்பாடு வந்தோரை வருக வருக என்றழைத்து இன்முகம் காட்டி வரவேற்று உண்ண உணவழித்து, உபசரித்தல், வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தல் என்பன தமிழர்களின் தனித்துவமான பண்பாடுகளாகும்.

இவ்வாறு வந்தாரை வரவேற்று மகிழ்விக்கும் செய்திகள் வரலாற்றில் “பாரிமன்னன், அதியமான் நெடுமானஞ்சி, சடையப்பவள்ளல்” என்று வரலாறு தமிழர்களின் பண்பாட்டை எடுத்தியம்புகின்றன.

மேலும் இன்சொல் பேசுதல், பெண்களை மதித்தல், மூத்தோரை கனம் பண்ணல், பெற்றோரை மதித்தல், கற்றோரை வியந்து பார்த்தல், உயிர்களிடத்தில் அன்பு கொள்ளல், செய்நன்றி மறவாமை, காதல், நட்பு, கல்வி, போர், வீரம் என்று என்றைக்கும் மங்காத தனி பெருமை கொண்டது தமிழர் பண்பாடு என்றால் அது மிகையல்ல.

தமிழர் கலாச்சாரம்

அன்று தொட்டே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழர்கள் முத்தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் இயல், இசை, நாடகம் என ஆய கலைகள் அறுபத்தினான்கும் தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றுகின்றன.

கலாச்சாரம் எனப்படுவது வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், கலைகள் போன்றவற்றின் மூலம் வெளிப்படும் மக்களின் பிரதிபலிப்பாகும்.

தமிழர்கள் வேட்டி சேலை எனும் ஆடை கலாச்சாரத்தை உடையவர்கள் இவர்கள் அதிகம் இந்து சமயம் சார்ந்தவர்கள் இவர்களது வாழ்வியல் வழிபாட்டு முறைகள் போன்றன அதிகளவான சடங்கு சம்பிரதாயங்களை கொண்டு காணப்படுகின்றன.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வரும் நிகழ்வுகள், திருமணம், புதுமனைபுகுதல், தொழில் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளை சுப நிகழ்வுகளாக கொண்டாடி தமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்களாக விளங்கினர் தமிழர்கள் தமது பண்பாடு கலாச்சாரங்களை வெளிக்காட்டும் மாபெரும் கோவில்களை அமைத்திருந்தனர்.

இது தமிழர்களின் கட்டட கலை சிற்பக்கலை ஓவிய கலை, நாட்டிய கலை போன்ற கலைகளையும் இறை நம்பிக்கையையும் பல தலைமுறைகளை தாண்டி உலகத்துக்கே பறை சாற்றும் அதிசயங்களாகும்.

தமிழ் நாட்டில் அமைந்துள்ள “தஞ்சை பெருங்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தில்லை நடராஜர் கோவில் இவை போன்ற ஆயிர கணக்கான கோயில்கள் தமிழர் கலாச்சாரத்தை வெளிக்காட்டும் உலகமே வியந்து பார்க்கும் அதிசயங்கள் ஆகும்.

மேலும் மங்கல இசை வாத்தியங்களின் புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், உடுக்கு, பறை, மணி மற்றும் சங்கு போன்ற இசைக்கருவிகள் தமிழர் கலாச்சார இசைக்கருவிகளாகும்.

தமிழில் எழுந்த ஒப்பற்ற இசைப்பாடல்கள் தமிழர்களின் இசை ஆர்வத்தை எடுத்து காட்டும்.

என்றும் பெருமை மிக்க சங்கப்பாடல்கள் ஜம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ் மேல் கணக்கு நூல்கள், கம்பராமாயணம் பல நூறு மாபெரும் இலக்கிய வரலாற்றை கொண்டவை.

தமிழ் கலாச்சாரம் நடனம், நாடகம், கூத்து போன்ற எம் மண்ணுக்குரிய கலைகளை கொண்டதுவே தமிழ் கலாச்சாரம் காதலும் வீரமும் அன்பும் இயற்கையும் மனிதமும் கலைகளும் ஒருங்கே சங்கமிக்கும் தமிழ் கலாச்சாரம் என்றைக்கும் பெருமைக்குரியதாகும்.

அருகி வரும் தமிழ் பண்பாடு கலாச்சாரம்

இன்றைக்கு கலிகாலம் போல் தமிழும் இதன் பெருமை மிகு பண்பாடும் கலாச்சாரமும் குறைந்தபடி இருப்பது வேதனைக்குரியதாகும்.

நாகரகீ வளர்ச்சியும் பிறமொழி கலப்புக்களும் மேற்கத்தைய கலாச்சார ஊடுருவல்களும் இதற்கு காரணமாகும்.

இன்றைக்கு எம் மொழி என்று பெருமையாக சொல்லும் காலம் போய் ஆங்கிலம் பேசினால் பெருமை என்று நினைக்கிறார்கள். தமிழில் பேசினால் அவமானம் என்று கருதுகிறார்கள்.

இன்றைக்கு பிற மொழிகளை அரச மொழிகளாக மாற்றுவதனால் தமிழ் மொழியை விட்டு வேலை வாய்ப்பிற்காக கற்க வேண்டிய நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது.

இதனால் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டிய குழந்தைகள் கூட ஆங்கில மொழி மூலமான கல்விக்கு பெற்றோரால் திணிக்கப்படுகின்றனர். இன்றைக்கு தமிழர்களுக்கு தம் மொழி மீதான பற்று குறைவடைந்து போகிறது.

தமது பண்பாடுகளை பழக்க வழக்கங்களை மறந்து தவறான பாதையில் செல்கின்றனர்.

இந்நிலை தொடர கூடாது எமது மொழி பெருமைக்குரிய மொழி அதை பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

முடிவுரை

உலகுக்கே பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சொல்லி கொடுத்த இனம் எப்போதும் எமது பெருமைகளை மறந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் இதை சொல்லி கொடுக்க நாம் தவற கூடாது.

எமது கலாச்சாரத்தின் ஆழத்தை கீழடியில் நிகழ்ந்த புதைபொருள் ஆய்வுகள் கூறும். தமிழ் என்று சொல்ல காற்றும் இசைமீட்டும்.

இருக்கின்ற பெருமைகளை கட்டி காப்பதும் அவற்றை தலைமுறை தாண்டி நிற்க செய்வதும் தமிழர்களான எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நம் தமிழின் பெருமையை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் “தமிழுக்கு அமுதென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடுகிறார்.

ஆதலால் எம் உயிரிலும் மேலான தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் காப்பது எம் கடமையாகும்.

You May Also Like :

பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்

தமிழர் திருநாள் கட்டுரை